பொருளாதார வளர்ச்சி, ஆனால் மதுவை நம்பிய நிதிநிலை

    • எழுதியவர், சீனுவாசன் இராம
    • பதவி, இணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம்

கடந்த 50 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், மக்கள் தொகைக் கட்டுப்பாடு, உணவுப் பங்கீடு மற்றும் மானியம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தியதால் மனித வளர்ச்சி குறியீட்டின்படி இன்று இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது.

ஆனால், இந்த காலத்தின் பெரும் பகுதியில் தமிழக பொருளாதார வளர்ச்சி தேசியப் பொருளாதார வளர்ச்சியைவிட குறைவாகவே இருந்து வந்தது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், தேசிய பொருளாதாரத்தில் தமிழகத்தின் பங்கையும் கூர்ந்து கவனிக்கும் போது, தமிழக வளர்ச்சி போக்கும் அதன் எதிர்கால திசையும், இனி வளர்ச்சிக்காக நாம் செய்யவேண்டிய செயல்பாடுகளும் தெரியவரும்.

1966-67ல் தேசியப் பொருளாதாரத்தில் தமிழகத்தின் பங்கு 7.9%ஆக இருந்தது அதன் பிறகு இந்த விகிதாசாரம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

மீண்டும் தேசிய பொருளாதாரத்தில் தமிழகத்தின் பங்கு 7.9% என்ற நிலையை 27 ஆண்டுகளுக்கு பிறகு 1994-95 அடைந்தோம்.

மீண்டும் இந்த விகாதாசாரம் சரிந்து பிறகு 2005-06ல் இந்த நிலையை அடைந்து, அதன் பிறகு தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாக இருந்தது. 2014-15 ல் தேசிய பொருளாதாரத்தில் தமிழகத்தின் பங்கு 8.23% உயர்ந்த நிலையை அடைந்து இந்தியாவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

மனித வளர்ச்சிக் குறியீடுகள்

திராவிடக் கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சி செய்துள்ள இந்த ஐம்பது ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய மாநிலமும் இந்த அளவிற்கு மனித வளர்ச்சி குறியீட்டை அடைந்தது இல்லை. தொடர்ந்து 3 முதல் 6 என்ற உயர்ந்த நிலையில் தான் தமிழகம் மனித வளர்ச்சி குறியீட்டில் இருந்து வந்துள்ளது.

மனித வளர்ச்சிக் குறியீட்டில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. அதில் தனி நபர் வருவாயில் எப்போதும் தேசிய அளவைவிட அதிகமாகவே தமிழகம் இருந்துவந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் 1970களில் இருந்து தமிழகம் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுபடுத்துவதற்காக குடும்ப கட்டுப்பாடு, பெண் கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தியது தான் காரணம்.

படிப்பறிவு விகிதம், பள்ளி இடைநிலை நிறுத்தம், உயர்கல்வி வளர்ச்சி என்று எல்லாதுறைகளிலும் அரசின் முதலீடு மற்ற மாநிலங்களைவிட அதிகமாகவே தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறது.

பள்ளிகளில் மத்திய உணவு திட்டம் இதற்கு பெரிய உந்துதலாக இருந்ததை மறுக்கமுடியாது. இதே போல பொது சுகாதாரம், ஆரம்ப சுகாதார நிலையங்களை அதிகரித்தது, மருத்துவ கல்வி விரிவாக்கம் ஆகியவை நமது சுகாதார நிலையை உயர்த்தின.

சமூகநீதியின்படி உயர்கல்வி, வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்டோருக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, அவர்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக தனி துறைகளும் திட்டங்களும் வகுப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் எல்லாருக்கும் சென்றடைய வேண்டும் என்பது முக்கிய குறிக்கோளாக அரசுக்கு இருந்தாலும், அதனை அடைவதில் முழு வெற்றி அடையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

சாராயம் சார்ந்த நிதி நிலை

சமூக துறைகளில் தமிழகம் அதிக செலவுகளை செய்த போதிலும் அதற்கான வருவாயின் பெரும் பகுதியை சாராயத்தின் மீதான வரி மூலமே ஈட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சாராயத்தின் மீதான வரியை எளிதில் வசூலிக்க முடியும் என்பதாலேயே மாநில அரசு மற்ற வரி வருவாய்களில் அதிக கவனம் செலுத்தாமல் விட்டு விட்டது. இந்தியாவில் அதிக வரி வருவாய் ஈட்டும் முதன்மை மாநிலமாக தமிழகம் இருந்த போதிலும், சாராய வரி வருவாயை நீக்கிவிட்டு பார்த்தால் தமிழத்தின் நிலை கீழே சென்று விடும்.

சாராய விற்பனையை மாநில அரசே ஏற்று நடத்திய பிறகு தமிழகத்தில் மதுவின் நுகர்வு படிப்படியாக உயரத்துவங்கி உள்ளது, மக்களின் வாழ்க்கை நிலையை பாதித்துள்ளது உண்மை.

இந்த நிலையிலிருந்து வெளியே வருவது மிக சிக்கலாகி உள்ளது. மதுவிலக்கைப் படிப்படியாக குறைக்கவேண்டும் என்று நினைத்தாலும், அதனால் ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவிக்கிறது தமிழக அரசு.

மற்ற வரி வருவாய்களில் அதிக கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

இது எதிர்கால அரசின் நிதி நிலையை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. மத்திய அரசிடமிருந்து பெரும் நிதியின் அளவும் ஒப்பீட்டளவில் தொடர்ந்து குறைந்து கொண்டே போவது கூடுதலாக நிதி சுமையை தமிழகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

வளரும் பொருளாதாரம்

மனித வளர்ச்சிக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியும் 1990களில் இருந்து அதிகரிக்கத் துவங்கியது.

காங்கிரஸ் ஆட்சியில் பல பொது துறை நிறுவனங்கள் தமிழகத்திற்கு வந்தன. அதன் பிறகு வந்த பெரிய பொதுத் துறை நிறுவனம் சேலம் இரும்பாலை மட்டுமே.

தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அதிக உரிமைகளை மத்திய அரசிடம் பெறுவதிலும் தமிழகம் முன்னணியில் இருந்தது உண்மை.

சிறு தொழில்களுக்கான தொழிற்பேட்டைகளை தமிழக அரசு தொடர்ந்து பல இடங்களில் நிறுவியது.

சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் விரிவாக்கத்திலும், மின்சாரம் உற்பத்தியிலும் மத்திய அரசுக்கு மாநில அரசின் பங்களிப்பு அதிகம்.

அதிக தொழில் நிறுவனங்களை கொண்ட பெரிய மாநிலங்களில் இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்தை தமிழகம் கொண்டுள்ளது.

கணினி மற்றும் கணினி தொடபான சேவை துறைகளில் தமிழக அரசு தனியார் முதலீட்டை ஈர்க்கும் வண்ணம் பல சேவைகளை செய்தது.

இவ்வாறு தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகளை அரசு செய்து வந்தது மாநிலத்தின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது.

சரியும் விவசாயம்

சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று துவங்கிய திட்டம் இன்று எல்லா விவசாயிகளுக்கும் என்றாகி உள்ளது.

அவ்வப்போது விவசாய கடன் தள்ளுபடி, விவசாய பொருட்களுக்கு அதிக ஆதார விலை என்று மாநில அரசு தொடர்ந்து விவசாயத்திற்கு அதிக மானியம் வழங்கிய போதிலும், விவசாயத் துறையின் வளர்ச்சி தொடர்ந்து குறைந்து கொண்டே வந்துள்ளது.

நீர் மேலாண்மை, அரிசி, சர்க்கரை போன்ற ஒரு சில பொருட்களை தவிர மற்ற பொருட்களை விளைவிப்பதில் அதிகம் கவனம் செலுத்தாமை, அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பங்கீட்டு பிரச்சனைகள் என்று பல காரணங்கள் இதற்கு கூறமுடியும்.

சமூக நீதியும், சமூக துறைகளில் அரசின் செலவுகள் அதிகரிப்பது என்பதை தங்கள் கொள்கைகளின் முக்கிய அம்சமாக கருத்தும் திராவிடக் கட்சிகள், இதனை தொடர்ந்து சரியான பாதையில் எடுத்துச் செல்ல சில மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது.

கல்வித்தரம்

பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வி தரத்தை உயர்த்தவேண்டி உடனடி நடவடிக்கை வேண்டும்.

மாநில பள்ளி கல்வி பாடத்திட்டத்திலிருந்து மற்ற பாடத் திட்ட பள்ளிகளுக்கு மாணவர்கள் இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே தேசிய தரத்துடன் இயங்கி வருகின்றன.

தமிழக மாணவர்கள் வடமாநில உயர் கல்வி நிறுவனங்களை நோக்கி செல்வது அதிகரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து வேலைவாய்ப்புக்காக வடமாநிலங்களுக்கு செல்வதும் தொடர்கிறது.

இவை எல்லாம் தமிழகம் தொடர்ந்து சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சந்திக்க இருக்கும் சவால்களின் குறியீடுகள்.

அரசுத் துறை நிறுவனங்கள் தங்கள் சேவை அளிக்கும் திறனை உயர்த்தாமல், தொழில் விவசாயத் துறைகளில் சரியான திட்டங்கள் இல்லாதிருப்பதும் எதிர்கால முன்னேற்றத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் - பிற கட்டுரைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்