You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திராவிட இயக்கம் - நாடு முழுமைக்கும் பங்களிக்க வேண்டிய சித்தாந்தம்
- எழுதியவர், கோபாலகிருஷ்ண காந்தி
- பதவி, முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எழுத்தாளர்
( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி 2018 ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ் வெளியிட்டது. அதை மீண்டும் வாசகர்களுக்கு வழங்குகிறோம்)
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மறைந்த பிறகு நடந்த முதல் தேர்தலாக 1967ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் அமைந்தது. மிக முக்கியமான ஒரு தேர்தலும்கூட.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கு பெரும் வெற்றி கிடைத்தது.
சுதந்திரா கட்சி, 8.7 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காவது மக்களவையில் தனிப்பெரும் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. மொத்தமிருந்த 520 இடங்களில் 44 இடங்கள் அந்தக் கட்சிக்குக் கிடைத்தன.
தமிழகத்தில் அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய அளவில் 3.79 சதவீத வாக்குகளைப் பெற்று 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பியது. இந்த இரு கட்சிகளும் இணைந்து மக்களவை 69 இடங்களை வைத்திருந்ததால், இந்திய அரசியலில் ஒரு புதிய காலகட்டம் துவங்கியது.
திகைக்க வைத்த புதிய தொடக்கம்
மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடைபெற்ற மெட்ராஸ் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. வெற்றிபெற்றதால் மாநிலத்திலும் ஒரு புதிய அத்தியாயம் துவங்கியது.
காமராஜர் இந்தத் தேர்தலில் தோற்றுப்போனார். முதலமைச்சரான பக்தவத்சலமும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அனைவரும் (ஒருவரைத் தவிர) தோற்றுப்போனார்கள்.
இந்த தேர்தலின் முடிவும் அதன் உள்ளடக்கமாக அமைந்த செய்தியும் அரசியல் பார்வையாளர்களைத் திகைக்கவைத்தது.
ஒரே இரவில், சட்டமன்றத்தில் கதர் ஆடைக்காரர்களின் ஆதிக்கம் மறைந்து, அவர்கள் இடத்தில் மில்லில் நெய்த கறுப்பு - சிவப்பு துண்டு அணிந்த தி.மு.கவினர் வந்து அமர்ந்தார்கள்.
இருபது ஆண்டுகளாக "தலைமை அலுவலகத்திற்கும் கிளை அலுவலகத்திற்கும்" இடையிலான உறவைப் போல நிலவிய மத்திய - மாநில உறவும் அதோடு முடிவுக்கு வந்தது.
அண்ணாதுரை ஒரு புதிய முதல்வராக மட்டும் இருக்கவில்லை. ஒரு புதிய போக்கின் சின்னமாக இருந்தார். பல தசாப்தங்களுக்கு முன்பாக நீதிக் கட்சியும் பிறகு திராவிடர் கழகமும் முன்வைத்த திராவிட சித்தாந்தம், 1967 தேர்தலுக்குப் பிறகு லட்சியம் என்ற நிலையிலிருந்து செய்துகாட்ட வேண்டிய ஒரு நிலையை அடைந்தது.
அண்ணா மறைவு
இந்திய சுதந்திரத்திற்கு இருபதாண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த இந்த மாற்றம், தமிழ்நாட்டிற்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரமாகப் பார்க்கப்பட்டது.
அதற்குப் பிறகு, தமிழகத்தின் மீது நிழல் படர்ந்தது.
அண்ணா என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் மறைந்தார்.
சென்னை அண்ணா சாலையில் கையை உயர்த்தி ஒரு விரலைக் காட்டியபடி நிற்கும் அண்ணாவின் சிலை, "நான் உங்களோடு ஒரு வருடம்தான் இருப்பேன்" என்று சொல்கிறது என மக்கள் பேசிக்கொண்டார்கள்.
பேரறிஞர் அண்ணா இன்னும் ஒரு பத்து - பதினைந்து ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பாரானால் - 1980கள் வரை - கூட்டாட்சிப் பார்வையில் அகில இந்திய அரசியலில் தமிழகத்தின் செல்வாக்கும் பங்களிப்பும் பலமடங்கு அதிகமாக இருந்திருக்கும்.
பிராமணர், ஆரியர் போன்ற விஷயங்களிருந்து முன்னகர்ந்து நதி நீர் பங்கீட்டில் தேசிய அளவிலான கொள்கையை வடிவமைப்பது, பஞ்சாயத்து மட்டம் வரையில் நிதி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, சட்டம் இயற்றுதலில் மாநிலங்களின் பங்களிப்பைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவது, மாநிலங்களுக்கு இடையிலான குழுவை செயல்படுத்துவது போன்ற சமகால முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தியிருக்கக்கூடும்.
இடஒதுக்கீடு என்ற தத்துவத்திற்கு தேவைக்கு ஏற்றபடி மாறும் ஒரு வடிவத்தைக் கொடுத்து, தேசிய அளவிலான ஒரு பரிகாரமாக நாடு முழுவதும் பார்க்க வைத்திருக்க முடியும்.
தேசிய வளர்ச்சிக்கு ஒரு புதிய சக்தியும் கிடைத்திருக்கும்.
அரசியல் நீதி, சமூக சமத்துவம்
நாடு முழுவதுமுள்ள தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வெறும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக மட்டுமில்லாமல், ஒரு அறிவுசார், தொழில்சார் சக்தியாக, பெண்களையும் முன்னிறுத்தி உருவானால், இந்தியா ஒரு புதிய சாதனை யுகத்திற்குள் நுழைந்திருக்கும்.
ஒரு புதிய தென் ஆப்பிரிக்கா இந்தியா முழுவதும் உருவாகி, பரவியிருக்கும்.
எல்லாவற்றையும்விட, தமிழகத்தை இன்னும் பத்தாண்டுகள் அண்ணா ஆட்சி செய்திருந்தால் சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு ஒரு அடையாளத்தை வழங்குவதில் தமிழகத்தின் திறமை தேசம் முழுமைக்கும் பயன்பட்டிருக்கும். நம்முடைய வட கிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு காஷ்மீரிலும் அடையாளம் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியிருக்கும்.
திராவிட இயக்கத்தின் தர்க்க ரீதியான அடிப்படை என்பது அரசியல் நீதி மற்றும் சமூக சமத்துவம் என்பவற்றின் மீது அதற்கிருக்கும் ஆழமான நம்பிக்கைதான் என்பது என் கருத்து.
எனவே அந்த அடிப்படையான சித்தாந்தம் திராவிட இயக்கத்தை தமிழ்நாட்டையும், ஏன், தென்னிந்தியாவையும் தாண்டி, நாடு முழுவதும் தனது பங்களிப்பை செலுத்த இட்டுச் செல்கிறது
இந்த ஐம்பதாவது ஆண்டில், தமிழ்நாடு குறித்து நம்பிக்கையிழந்தவனாக இருக்க மாட்டேன்.
ராஜாஜி, பெரியார், அண்ணா ஆகியோருக்கு சிறப்பு செய்வதாக அது அமையாது. 1967 தேர்தலில் தோற்றவராக இருந்தாலும் பெருந்தலைவர் காமராஜருக்கும் அது சிறப்புச் செய்வதாக அமையாது. அவருடைய கண்ணியம் தோற்கடிக்கப்பட முடியாதது.
இன்று, நேர்மை என்ற மேடையில் மூதறிஞர், பெரியார், பேரறிஞர், பெருந்தலைவர் ஆகியோர் ஒன்றாகக் காட்சியளிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: