You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாக்கடல் ரகசியம் - சுருள்கள் சொல்லும் பொருள் கண்டுபிடிப்பு
1947 ஆம் ஆண்டில் சாக்கடலில் குமுரான் குகைகளில் இருந்து பண்டைய யூத எழுத்துருக்களில் எழுதப்பட்ட 900 சுருள்கள் கண்டறியப்பட்டன. அதில் இதுவரை கண்டறியப்படாமல் இருந்த சுருள்களில் ஒன்றின் பொருளை ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
'சாக்கடல் (Dead Sea) சுருள்களில்' இதுவரை படிக்கப்படாமல் இருந்த இரண்டு சுருள்களில் ஒன்றின் பொருளை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துவிட்டார்கள்.
அறுபது சிறிய துண்டுகளாக கிடைத்த அந்த சுருளை இணைப்பதற்கு ஒரு வருட காலம் ஆனது. பருவ மாற்றங்களை குறிப்பதற்காக கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகையின் பெயர் அடையாளம் காணப்பட்டது.
1947 ஆம் ஆண்டில் சாக்கடலில் குமுரான் குகைகளில் இருந்து பண்டைய யூத எழுத்துருக்களில் எழுதப்பட்ட 900 சுருள்கள் கண்டறியப்பட்டன. இதில் எழுதப்பட்டவற்றை அறிந்து கொள்ளும் ஆவல் ஐம்பது ஆண்டுகளாக தொடர்கிறது.
மேலும், சுருள்களில் ஆசிரியர் பிழைதிருத்தம் செய்திருக்கும் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
கி.மு. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த பைபிளின் மிகப்பெரிய நகலாக இது கருதப்படுகிறது.
இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை என்றாலும், பாலைவனத்தில் வசித்த ஒரு துறவி இதை எழுதியிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஹைஃபா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஷ்பல் ரட்சன் மற்றும் பேராசிரியர் ஜோனதன் பென்-டோவ் இணைந்து சுருள்களை ஒன்றிணைத்தனர். குறியீடுகளில் இருந்த சுருள் துண்டுகளில் சில 1 சதுர செண்டிமீட்டரை விட சிறியதாக இருந்தன.
தற்போது படிக்கப்பட்டுள்ள ஆவணம், யூதர்களால் பயன்படுத்தப்பட்ட பிரத்யேக 364 நாள் காலண்டர் பற்றிய புதிய கோணத்தை வெளிப்படுத்துகிறது.
ஒயின் மற்றும் எண்ணெய் தொடர்பான திருவிழாக்கள், கோதுமை அறுவடை திருவிழா, ஷாவோட் திருவிழா போன்றவற்றையும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
ஒரு ஆண்டில் நான்கு முறை பருவங்களுக்கு இடையில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கும் விதத்தில் அனுசரிக்கப்பட்ட 'தேக்ஃபாஹ்' என்ற திருவிழாவையும் இந்த சுருள் குறிப்பிட்டுள்ளது. நவீன கால ஹீப்ரூ மொழியில் 'தேக்ஃபாஹ்' வின் பொருள் "காலம்" என்பதாகும்.
பிழைகளை திருத்தியது தொடர்பாக ஆசிரியர் சுருள்களின் விளிம்புகளில் எழுதியிருக்கும் சிறுகுறிப்புகள் குறியீட்டை புரிந்து கொள்ள உதவியாக இருந்த்தாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
"இது சுருளை வரிசைப்படுத்தும் புதிருக்கான விடையை எங்களுக்கு வழங்கியது" என்று ஹாரெட்ஜ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் ராட்சன் கூறியிருக்கிறார்.
விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதப்படும் 'சாக்கடல் சுருள்கள்', சாக்கடலின் மேற்குக்கரையில் 1947 முதல் 1956 வரையிலான காலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
காணமல்போன ஆட்டை தேடிச் சென்ற ஒரு இளம் மாடு மேய்ப்பாளரே இந்த வரலாற்று பொக்கிஷத்தை முதன்முதலில் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்