You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழங்கால அமெரிக்கர்கள் கதையை கூறும் 11,500 ஆண்டுகளுக்கு முந்தைய டி.என்.ஏ
அலாஸ்காவில் பூமிக்கடியில் இருந்த 11,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பெண் குழந்தையின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்காவில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் குறித்த ஒரு புதிய விளக்கத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த உடல் பாகங்களில் செய்யப்பட்ட மரபணு பகுப்பாய்வுகளும், பிற தரவுகளும், இதுவரை அறியப்படாத பண்டைய இனக் குழுவைச் சேர்ந்ததாக அந்தக் குழந்தை இருந்திருக்கலாம் என்று காட்டுகிறது.
அவளுடைய டிஎன்ஏவில் இருந்து தாங்கள் அறிந்தது குறித்து விஞ்ஞானிகள் குறிப்பிடுகையில் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் சைபீரியாவில் இருந்து அமெரிக்க கண்டத்துக்கு ஒரு மக்கள் அலை இடம்பெயர்ந்ததாக உள்ள கருத்துக்கு இந்த டிஎன்ஏ வலு சேர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
கடல் நீர்மட்டம் குறைந்ததையடுத்து பெரிங் ஜலசந்தியில் வறண்ட நிலம் உருவானது. அதன் பின்னர் வடக்கு பகுதியைச் சேர்ந்த பனிப் பாறைகள் உருகியதையடுத்து அந்த நிலங்கள் மீண்டும் மூழ்கின.
அங்கு முதலில் குடியேறியவர்களே தற்கால அமெரிக்கப் பூர்வகுடிகளின் முன்னோர்கள் எனக் கூறியுள்ளனர் பேராசிரியர் எஸ்கே வில்லெர்ஸ்லெவ் மற்றும் அவருடைய குழுவினர். அப்பேராசிரியரின் குழுவே குழந்தையின் டிஎன்ஏ மரபியல் மதிப்பீடு குறித்து இயற்கை எனும் சஞ்சிகையில் வெளியிட்டுள்ளது.
ஆறு வார வயதுடைய அந்த பெண் குழந்தையின் எலும்புக்கூடு 2013-ஆம் ஆண்டு அலாஸ்காவில் உள்ள சன் ரிவர் எனும் தொல்லியல் தளத்தில் பூமிக்கடியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டது.
அங்குள்ள உள்ளூர் பூர்வீக சமூகத்தினர் அவளுக்கு "Xach'itee'aanenh t'eede gay" (ஜாச் இட்டீ ஆனென்ஹ் ட்ஈடி கே) அல்லது ''சன்ரைஸ் பெண் குழந்தை'' என பெயரிட்டுள்ளனர்.
இப்பணியில் ஈடுபட்ட அறிவியல் குழு அவளை எளிமையாக யுஎஸ்ஆர்-1 என குறிப்பிடுகின்றது.
''அலாஸ்காவில் கண்ணெடுக்கப்பட்டதிலேயே மிகப்பழைய மனித உடல் பாகங்கள் இவைதான். ஆனால் குறிப்பாக இங்கு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்தப் பெண் குழந்தை நாம் இதுவரை பார்த்திராத மனித இனத்தைச் சேர்ந்தது'' என விவரிக்கிறார் கோபேன்ஹேகன் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகங்களுடன் தொடர்புடைய பேராசிரியர் வில்லெர்ஸ்லெவ்.
''இந்த மக்கள் மிகவும் தற்காலத்திய அமெரிக்கப் பூர்வகுடிகளுடன் உறவுடையவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நீங்கள் இவள் மிகப்பழமையான கூட்டத்தில் இருந்தோ அல்லது மிகவும் அசலான பூர்வீக அமெரிக்க குழுவில் இருந்தோ வந்ததாகக் கூறலாம்.
முதல் பூர்வீக அமெரிக்க குழுக்கள் பலவகைப்பட்டன. ஆகவே பூர்குடி அமெரிக்கர்களின் முன்னோர்கள் குறித்து இந்தப் பெண்ணின் உடல் பாகங்கள் விவரிக்க முடியும்'' என பிபிசி செய்தியாளரிடம் கூறியுள்ளார் பேராசிரியர் வில்லெர்ஸ்லெவ்.
தலைமுறைகளின் டிஎன்ஏவில் குவிந்திருக்கும் பிறழ்வுகள் அல்லது சிறிய பிழைகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பழங்கால மக்களின் வரலாறு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர்.
இந்த டி.என்.ஏ. பாங்குகளை இனப் புள்ளியியல் மாதிரியுடன் சேர்த்து பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு குழுக்களுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து வரையறுக்க முடிகிறது.
தற்போதைய மக்களின் மூதாதையர்கள் கிட்டத்தட்ட 34,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு ஆசியர்களிடமிருந்து தனித்துவ மரபணுரீதியாக மாறத்துவங்கியது குறித்து ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. இந்த பிரிவினையானது சுமார் 25 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் முடிந்தது. சைபீரியா மற்றும் அலாஸ்கா இடையிலான நில இணைப்புப் பாலம் அந்தக் கால மனிதர்களால் கடந்து செல்லப்பட்டதையும் இந்த ஆய்வு காட்டுகிறது.
பண்டைய பெரின்கியன் குழுவை இந்த யுஎஸ்ஆர் 1 பிரதிநிதித்துவம் செய்வதாகவும் பின்னர் அமெரிக்காவின் முன்னோடி குடியேறிகளில் இருந்து பிரியத் தொடங்கியதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த மரபியில் ரீதியான பிரிவினை இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது என்றும் மேலும் அதன் காரணமாக இந்த மக்கள் அலாஸ்காவில் பல ஆயிரம் வருடங்களாக வசித்து வருவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
அமெரிக்க முன்னோடி மக்களில் மற்றவர்கள் பனிப் பாறைகளற்ற பிராந்தியங்களை அடைய தெற்கு நோக்கி நகர்ந்துள்ளனர். இந்த முன்னோக்கி நகரும் கிளையானது மரபியல் ரீதியாக வேறுபட்ட இரண்டு குழுக்களாக பிரிந்தது. அவை இன்றைய அமெரிக்க பூர்வீக குடிகளின் முன்னோர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
பேராசிரியர் வில்லேர்ஸ்லெவ் கூறுகையில் ''இந்த பெண்ணின் மரபணுவுக்கு முன்னதாக நவீன பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் பண்டைய சைபீரியர்களை வைத்து அவர்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் பிரிவினை காலத்தை கணிக்க முயற்சி செய்து வந்தோம். ஆனால் இப்போது அந்த இரண்டு வித மக்களுக்கு இடைப்பட்ட ஒரு தனி நபரின் உடல்பாகங்கள் கிடைத்திருக்கின்றன. இது அடிப்படை கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சிகளுக்கான கதவை திறந்துவிட்டுள்ளது'' என்றார்.
வடகிழக்கு சைபீரியா மற்றும் அலாஸ்காவில் மேலும் எஞ்சியுள்ள சில உடல் பாகங்கள் கன்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இன்னும் உறுதியான பதில்கள் கிடைக்கும் என அந்த விஞ்ஞானி கூறினார்.
வடமேற்கு அமெரிக்க மாகாணங்கள் விஷயத்தில் இந்த முன்னோர்களை கண்டறியும் விஷயம் சிக்கலுக்குள்ளானது ஏனெனில் அதன் மண்ணின் அமிலத்தன்மையானது எலும்புக்கூடுகளை பதப்படுத்தவும் குறிப்பாக அதன் டிஎன்ஏவை எடுத்து அறிவதற்கும் சாதகமற்றதாக்கியுள்ளது.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்