கார் பழுதாகி இந்தியச் சாலையில் நின்ற சீனப் பிரதமர்

    • எழுதியவர், ரெஹான் ஃபஜல்
    • பதவி, பிபிசி

சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமரான சோ என்லாய் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மா சே துங்கின் உறுதியான ஆதரவாளராக இருந்த சோ என்லாய் இந்தியாவுடன் இணக்கமான அணுகுமுறையை கொண்டிருந்தார்.

சீனாவின் கடுமையான பொதுவுடைமைக் கொள்கைகளைத் தளர்த்தி, முதலாளித்துவக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, நாட்டின் பொருளாதார எழுச்சிக்கு வித்திட்டார்.

அப்போது 73 வயதாகியிருந்த வயதான சீனப் பிரதமர் சோ என்லாய், பர்ஃபீலி பெய்ஜிங் விமான நிலையத்தின் ஓடுபாதையில் நிற்கிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சில பிரதிநிதிகள், அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அவருடன் இருந்தார்கள்.

பிப்ரவரி 12, 1972 அன்று சீனாவின் உயர்நிலை அதிகாரிகள் அனைவரும் யாரை ஆவலுடன் அவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள் தெரியுமா?

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் சீனாவிற்கு அரசுமுறைப் பயணமாக வரவிருந்தார். முதன்முதலாக சீனாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பிரமுகருக்கு இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைத்து, இசைக்கருவிகள் முழங்க ஆடம்பர வரவேற்பு அளிக்கப்படவில்லை, அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்போ, 21 தோட்டாக்கள் முழங்க பாரம்பரிய வரவேற்போ வழங்கப்படவில்லை.

விமான நிலையத்தில் சீன மற்றும் அமெரிக்க கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. இதுதான் அமெரிக்க அதிபருக்கு சீனா அளித்த வரவேற்பு.

அமெரிக்க அதிபரின் விமானம் 'ஸ்பிரிட் ஆஃப் 76' சீனாவில் வந்து இறங்கிய காட்சியை உலகம் முழுவதும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது.

நிக்சன் விமானப் படிக்கட்டுகளில் வேகமாக இறங்கத் துவங்கினார். விமானத்தில் இருந்து வெளியேறியவுடன் கைகுலுக்குவதற்காக கையை நீட்டிக் கொண்டே வந்தார்.

ஆனால் நிக்சனின் கால்கள் சீன மண்ணைத் தொடும் வரை கீழே நின்றுக் கொண்டிருந்த சீனப் பிரதமர் கையை நீட்டவில்லை.

அவர் கையை உயர்த்தும்போதுகூட முழங்கைக்கு மேலே உயர்த்தவில்லை, ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சண்டையில் ஏற்பட்ட காயம் அவரின் கையை கட்டுப்படுத்தியது.

சீன பிரதமர் மகிழ்ச்சியையும் வெளிப்படையாக காட்டவில்லை. உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தின் தலைவரை வரவேற்பதால், மிகப் பெரிய அரசியல் அபாயத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்ததே அதற்கு காரணம்.

அடுத்த நாள் வெளியான சீன பத்திரிகைகளில் சோ என்லாயின் பிரத்யேக புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின. அதில் கைகோர்க்கும் ஆவலுடன் நிக்ஸன் கரங்களை நீட்டியவாறு வருவதும், சீனப் பிரதமர் முகத்தில் புன்னகையின்றி காத்துக் கொண்டிருந்ததையும் தெளிவாகக் காட்டியது.

அன்று இரவு அளித்த விருந்திலும் சீனப் பிரதமர் மிகவும் கவனமாகவே இருந்தார். இரு நாட்டு தலைவர்களின் கண்ணாடி கோப்பைகளிலும் ஒரே அளவு திரவம் இருப்பதை உறுதி செய்தார்.

சோ என்லாயின் சிறப்பம்சம்

இந்தத் தகவல்கள் எதற்கு என்று இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் இதுபோன்ற சிறிய நுணுக்கமான விடயங்களி்லும் சீனாவின் நுட்பமான ராஜதந்திரம் மறைந்துள்ளது.

அமெரிக்க அதிபரின் வருகைக்கு முன்னரே சீனப் பிரதமர் பல்வேறு கோணங்களில் சிந்தித்து அவற்றை நடைமுறைப்படுத்தியதாக, சோ என்லாய்-இன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய காவோ வேன்கியான் கூறுகிறார்.

அமெரிக்க அதிபருடன் அதிக நெருக்கம் காட்டுவதில்லை என்றும் சற்று விலகியே இருக்கவேண்டும் என்றும் அவர் முடிவு செய்தார். அதேபோல் நிக்சனை சந்திக்கும்போது, அதிக நட்பு பாராட்டாமல் இயல்பாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்தார்.

அரசியல் சதுரங்கத்தில் எந்த காயை எப்போது எங்கு எப்படி நகர்த்தினால் எதுபோன்ற எதிர்வினைகள் நிகழும் என்பதை தனது தலைவர் மாவோவைப் போலவே சிந்திக்கக்கூடியவர் என்பது சோ என்லாயின் சிறப்பம்சம்.

"வெள்ளை மாளிகை ஆண்டுகள்" என்ற தனது சுயசரிதையில் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹென்றி கிசிஞ்சர் இவ்வாறு எழுதியுள்ளார்: "1971இல் நான் முதன் முதலில் சோவை சந்தித்தபோது, அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சீன கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவராக இருந்தார்."

தத்துவம், வரலாறு, தந்திரோபாயம், நவீனமயமாக்கல் என எந்த துறையாக இருந்தாலும் அதில் அவர் சிறந்த அறிவைக் கொண்டிருந்தார். அமெரிக்காவைப் பற்றிய தகவல்கள் மற்றும் எனது சொந்த பின்னணியையும் அவர் அத்துபடியாக தெரிந்து வைத்திருந்தது ஆச்சரியமானது."

மாவோவின் அடுத்த வாரிசு

சோ என்லாய் என் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்று பிபிசியிடம் பேசிய முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் கூறுகிறார். "இருபதாம் நூற்றாண்டில் அவருக்கு சமமாக வேறு எந்த ராஜதந்திரியும் இல்லை என்றே கூறலாம். அனைவரையும் ஈர்க்கும் திறன் கொண்ட அவர், தனது நீண்டகால பொதுவாழ்க்கையில் சரியான புரிதல்களையும் சிறப்பான மக்கள் தொடர்பையும் கொண்டிருந்தவர்".

ஆனால் சில அரசியல் ஆய்வாளர்களின் பார்வையில், சோ என்லாயின் அரசியல் வாழ்க்கை முற்றிலும் மாறுபடுகிறது.

அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியரான காவோ வென் க்வின் எழுதுகையில், "சுவரில் இருக்கும் சிறிய விரிசலைக்கூட கண்டுபிடிப்பதில் திறமை வாய்ந்தவர் சோ என்லாய் என்று சொல்லலாம். உண்மையில் அவர் விசுவாசமான நாயைப் போல மாவோவின் பின் செல்பவர். ஆனால் மிதவாதியாகவும், காரியவாதியாகவும் இருக்கும் இவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்கமாட்டார்."

"அவர் மாவோவின் தலைமையை மட்டுமே ஏற்றுக்கொண்டதால், அவருடைய அரசியலில் நீடித்து நிலைக்கமுடிந்தது. அவர் எப்போதும் மாவோவின் உதவியாளராகவே இருந்தார், ஆனால் மாவோ எப்போதுமே இவருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எந்தவொரு அரசியல்ரீதியான அபாயமளிக்கும் முடிவுகளை எடுக்காத சோ என்லாய் 'மாவோ நம்பர் 2' ஆகவே கருதப்பட்டார்."

சோ என்லாயின் இந்திய வருகை

சோ என்லாயின் திறமைகளுக்கு சர்வதேச அளவில் பல பத்திரிகையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் ரசிகர்களாக இருந்தனர்.

பிரபல பத்திரிகையாளர் ஜேக் ஆண்டர்சன் தனது புத்தகத்தின் 'Confessions of a Muckraker' என்ற தனது புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறார்: "சோ என்லாய்-இன் நினைவு என்னுடைய வாழ்க்கையில் நீங்கா இடம்பெற்றது. 45 வயதிலும் அழகாக இருந்த அவரது முகத்தில் அற்புதமான நுண்ணறிவு வெளிப்படும். மெலிந்த உடல்வாகை கொண்டிருந்த அவர் கடின உழைப்பாளி."

"மிகவும் எளிமையாக வாழ்ந்த அவர், எல்லா விடயங்களையும் நன்கு அறிந்தவர். அவரின் செயல்பாடுகள் பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கும். ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் சீன மொழிகளில் சிறந்த ஆற்றல் கொண்டவர். அவரைப் போன்ற அழகான, அறிவான, கவர்ச்சிகரமான நபரை பார்ப்பது அரிது என்று அமெரிக்க முன்னாள் வெளி விவகார நிபுணர் வால்டர் ராபர்ட்சன் ஒரு முறை கூறினார்."

1960இல் சோ என்லாய் இந்தியாவிற்கு வந்தார். 1962 யுத்தத்தைத் தவிர்ப்பதற்கான அவரது கடைசி முயற்சி இது. ஆனால் நேருவுடன் மேற்கொண்ட அவரது பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் இந்தியாவின் தரப்பை முன்வைப்பார்கள் என்று நேரு கூறினார். தானே நேரிடையாக சென்று இந்திய தரப்பினரை சந்திப்பதாக சோ என்லாய் கூறினார். சோ என்லாயின் தொடர்பு அதிகாரியாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்திய-சீன உறவுகள்

அந்த நாட்களை நினைவு கூர்கிறார் நட்வர் சிங். "குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், பந்த், மொரார்ஜி தேசாய் ஆகியோருடன் சோ என்லாய் சந்தித்தபோது நானும் உடனிருந்தேன்".

"சோ என்லாயுடன் மொரார்ஜியின் சந்திப்பு கசப்பில் முடிவடைந்தது. அதேபோல் குடியரசு துணைத் தலைவருடனான சந்திப்பும் மோசமாகவே இருந்தது. அந்த சமயத்தில் வெளியான ஒரு நாளிதழின் கார்ட்டூனில், சோ என்லாய் ஒரு பாம்பாக சித்தரிக்கப்பட்டிருந்தார்" என்று சொல்கிறார் நட்வர் சிங்.

அந்த பயணத்தில் சீன தூதரகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சோ என்லாய் பயணித்த கார் பழுதானது.

அந்த மோசமான நிகழ்வை நட்வர் சிங் நினைவு கூர்கிறார்: "பழுதடைந்த காரில் இருந்து இறங்கிய சோ என்லாய் மாற்று வாகனத்திற்காக சாலையில் காத்திருந்தார். அவருடன் இருந்த சீன பாதுகாப்பு அதிகாரிகள் மிகவும் கவலையடைந்தனர், அவரது இந்திய பாதுகாப்பு அதிகாரி ராம்நாத் காவ் அங்கே இருந்தார். நானும் அங்குதான் இருந்தேன்.

இந்தியா குறித்த மனப்பாங்கு

அந்த தர்மசங்கடமான நேரத்தை மறக்கவே முடியாது என்று கூறும் நட்வர் சிங், "வெளிநாட்டு விருந்தாளிகளுக்கு சிறந்த காரைக்கூட வழங்க முடியாத நாடு என்று இந்தியாவை பற்றி சோ என்லாய் மட்டமாக நினைப்பாரே என்று நாங்கள் வருத்தப்பட்டோம். ஆனால் அவர் எந்தவித உணர்வையும் வெளிகாட்டாமல், எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தார்."

ஆனால் 1973ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிரான சோ என்லாயின் அணுகுமுறை முழுமையாக மாறிவிட்டது அல்லது மாறத் தொடங்கிவிட்டது.

அந்த சமயத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளராக பணியாற்றிய லகன்லால் மெஹ்ரோத்ரா சுவாரஸ்யமான கதை ஒன்றை கூறுகிறார்: "பாகிஸ்தானில் இருந்து பெய்ஜிங்கிற்கு வருகை தந்த பூட்டோவை வரவேற்க சோ என்லாயும் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்த எங்களிடம் கைகுலுக்கிவிட்டு விமானத்திற்கு அருகே சென்றார்."

"திடீரென்று என்னிடம் திரும்பி வந்த அவர், என் தோள்பட்டையை தட்டி, அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்று இந்திராவிடம் சொல்லுங்கள் என்ற பொருள் பொதிந்த 'Mister extrenal affairs, please tell Indira Every Thing Will Be Fine' ஆங்கில வார்த்தையை கூறினார்.

அவர் பிரதமர் என்று சொல்வதற்கு பதில் இந்திரா என்ற வார்த்தையை பயன்படுத்தியதும், அவரது வார்த்தையில் பாச உணர்வு மேலோங்கியிருந்ததும் எனக்கு ஆச்சரியமளித்தன.

அதுமட்டுமல்ல, நேருவை அவர் சந்தித்தபோதெல்லாம் இந்திராவும் அவருடன் இருந்ததையும் அவர் குறிப்பிட்டார் என்பதும், இந்த விடயத்தைச் சொல்ல அவர் என்னை நோக்கி வந்த்தும் இதில் குறிப்பிட்டு சொல்லத்தக்கவை."

காஷ்மீர் குறித்த கருத்து

ஆனால் அதற்கு பிறகுதான் பிரச்சனைகள் முளைத்தன. அன்று இரவு பூட்டோவுக்கு சோ என்லாய் விருந்து அளிப்பதாக இருந்தது. ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் திட்டத்தில் மாறுதல் ஏற்பட்டது.

அந்த நாள் நினைவுகளை பகிர்ந்துக் கொள்ளும் மெஹ்ரோத்ரா, "அந்த விருந்துக்கு எனக்கும் அழைப்பு இருந்த்து. சோ என்லாய்க்கு பதிலாக விருந்தில் உரையாற்றிய தங் ஷியாவோ பிங், காஷ்மீர் மக்களின் சுயாட்சி பற்றி குறிப்பிட்டார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விருந்தில் இருந்து நான் வெளியேறிவிட்டேன்."

"அடுத்த நாள் இந்த விவகாரத்தின் சூடு சற்றே தணிந்தது. அடுத்த நாள் சோ என்லாய்க்கு பூட்டோ அளித்த விருந்தில் காஷ்மீர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஆச்சரியமளிக்கும் விதமாக என்னிடம் வந்த பூட்டோ விருந்தில் இருந்து ஏன் வெளியேறினீர்கள் என்று கேட்டார்" என்று கூறுகிறார் மெஹ்ரோத்ரா.

"நீங்கள் இருவரும் கழிப்பறைக்கு செல்கிறீர்கள் என்றே நான் முதலில் நினைத்தேன் என்றும் அவர் சொன்னார். அவருக்கு உடனடியாக பதிலளித்த என் மனைவி ஷீலா, எங்கள் நாட்டு ஆண்களும் பெண்களும் கழிப்பறைக்கு ஒன்றாக செல்லும் வழக்கமில்லை என்று சொன்ன பதிலைக் கேட்டு அவர் சிரித்துவிட்டார்" என்று பூட்டோவின் நினைவுகளையும் மெஹ்ரோத்ரா பகிர்ந்துக் கொள்கிறார்.

சோ என்லாயின் மரணம்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான தூதரக உறவுகளை ஏற்படுத்த சோ என்லாய் முயற்சிகளை எடுத்தார். பிற்காலத்தில் இந்திய குடியரசுத் தலைவராக பணிபுரிந்த கே.ஆர்.நாராயணன், சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதுவராக பணியாற்றினார்.

வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோயால் 1975 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டார் சோ என்லாய். அவரது இறுதி காலத்தில் சோ என்லாயின் சிகை அலங்கார நிபுணர் ஜூ டின் ஹுவா அவரை பார்க்கச் சென்றபோது என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள் என்று சொன்னார். ஆனால் துரதிருஷ்டவசமாக புகைப்படக்காரர் யாரும் அப்போது அங்கே இல்லை.

மூன்று மாதம் கழித்து முடி திருத்த வரட்டுமா என்று தகவல் அனுப்பினார் ஜூ டின் ஹுவா. அதற்கு பதிலளித்த சோ என்லாய், என்னை மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. என்னை இந்த நிலையில் பார்த்தால் அவரது மனம் உடைந்துவிடும், எனவே வேண்டாம்," என்று மறுத்துவிட்டார்.

1976 ஜனவரி எட்டாம் தேதி காலை 9.25 மணிக்கு சோ என்லாய் நோய்க்கு இரையாகிவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :