You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் ராஜாவின் ராணுவத்தின் மீது படையெடுத்த பழங்குடி போராளிகள்
- எழுதியவர், எம். இலியாஸ் கான்,
- பதவி, பிபிசி உருது
அக்டோபர் மாதத்தின் குளிரான காலை வேளை, பாகிஸ்தானின் 550 மீட்டர் (1800 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஹபிபுல்லா நகருக்கு மேற்கிலும், முஜஃபராபாத் நகரின் கிழக்கிலும் இருக்கும் 'டப் வீதி' அமைதியாக காணப்பட்டது.
காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்திற்கும் இடையில் எல்லையை குறிக்கும் பாதுகாப்பு சாவடியின் இரு புறங்களிலும் இரண்டு டஜன் கடைகள் இருக்கின்றன.
70 ஆண்டுகளுக்கு முன்னர், பதான் பழங்குடியினர் இந்த வழியாகத்தான் காஷ்மீருக்குள் நுழைந்தார்கள். உலகின் மிக நீண்டகால எல்லை பிரச்சினைக்கான விதை அப்போதுதான் விதைக்கப்பட்டது.
காஷ்மீர்
எழுபது ஆண்டுகள் கழிந்தபிறகும் உள்ளூர்வாசியான 86 வயது மொஹம்மத் ஹசன் குரேஷிக்கு அந்த சம்பவம் நன்றாக நினைவிருக்கிறது. "பதான் பழங்குடியினர் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, காஷ்மீர் சீக்கியர்கள் முசாஃபராபாத் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக வதந்திகள் பரவின. ஒரு சில நாட்கள் கழித்து, பதான்கள் வரவிருந்ததாக கேள்விப்பட்டோம். இந்த பகுதியில் சீக்கியர்கள் அதிகமாக வசித்து வந்தார்கள்" என சொல்கிறார்,
இதுபோன்ற வதந்திகள் வருவது அந்த காலகட்டத்தில் இயல்பானதே. அதற்கான பின்னணியை முதலில் சுருக்கமாக தெரிந்துக்கொள்வோம்.
1947ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின் போது அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தங்கள் விருப்பப்படி இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைந்தனர் அல்லது தனி நாடாகச் செயல்பட முடிவெடுத்தனர்.
காஷ்மீர் அரசர் மஹாராஜா ஹரிசிங், இரு நாடுகளுடனும் இணையாமல் தனி நாடாக இருக்கும் முடிவை எடுத்தார். அப்போது காஷ்மீரின் மொத்த மக்கள் தொகையில் 77 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள்.
இதுபோன்ற நிலையில், இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இந்தியாவுடனும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி பாகிஸ்தானுடன் சேர்க்கப்படும் என்று ஜூன் மூன்றாம் தேதி அறிவித்த திட்டத்திற்கு பிறகு காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
பழங்குடி போராளிகள்
பெரும்பான்மை முஸ்லிம்களை குடிமக்களாக கொண்டிருந்த இந்து அரசரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காஷ்மீரின் எதிர்காலம் பற்றிய கவலைகள் சூழ்ந்தன.
பிராந்தியத்தின் மேற்குப் பகுதியில் வசித்த முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட நிலையில், தெற்கு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள் தொடங்கின.
இந்த நிலையில், காஷ்மீரை கைப்பற்றுவதற்காக, இருபதாயிரம் பழங்குடியின மக்களின் படையை தயார் செய்வது என்றும், அதற்கு உதவி செய்வது என்றும் பாகிஸ்தான் தரப்பில் திட்டம் தீட்டப்பட்டது.
கடி ஹபிபுல்லா
1947அக்டோபர் 21ஆம் தேதியன்று மாலை, பள்ளத்தாக்குப் பகுதியை கண்காணிப்பதற்காக குரேஷி தனது நண்பர்களுடன் மேற்குப் பகுதியின் மலை உச்சிக்கு சென்றார். கரடுமுரடான பாதையில் டிரக்குகளில் பதான்கள், கடி ஹபிபுல்லா நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
இரவு முழுவதும் அங்கேயே நின்று கொண்டு நிலைமையை கண்காணித்ததாக கூறும் குரேஷி, "நூற்றுக்கணக்கானவர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களின் கைகளில் கோடாலிகளும், வாள்களும் இருந்தன. சிலர் துப்பாக்கி ஏந்தியிருந்தார்கள், சிலரின் கைகளில் வெறும் தடி மட்டுமே இருந்தது. பாதுகாப்பு சாவடியில் இருந்த அரசரின் பாதுகாவலர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.'' என்கிறார்.
முஜாஃபராபாதுக்கான பாதை
முஜாஃபராபாத் செல்லும் பாதையில் மலைச்சரிவில் ஐந்து மைல் தூரம் முன்னேறியதும் அவர்களின் முதல் தாக்குதலை நடத்தினார்கள். கடி ஹபிபுல்லாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்கிராமில் வசித்த கெஹர் ரஹ்மான், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவர். அவரும் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.
"அந்தப் பகுதி எங்களுக்கு மிகவும் பரிச்சயமானது. நாங்கள் குறுக்குவழிகளில் நடந்து சென்றோம். எல்லைப்பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவிய பெரும் எண்ணிக்கையிலான பழங்குடியினர், நீண்ட ஆனால் செல்வதற்கு எளிதான பாதைகளில் டிரக்குகளில் காஷ்மீரை நோக்கி முன்னேறினார்கள்." குரேஷி சொல்கிறார்,
ராணுவ வரலாற்றாசிரியர்
காஷ்மீர் அரசின் வீரர்கள் இங்கும் அங்குமாக சிதற, சுமார் இரண்டாயிரம் பழங்குடியின போராளிகள் முஜாஃபராபாத் நோக்கி தடையின்றி முன்னேறினார்கள்.
அந்த சமயத்தில் காஷ்மீர் அரசின் 500 ராணுவ வீரர்கள் மட்டுமே அங்கு இருந்ததாக கூறும் ராணுவ வரலாற்றாசிரியர்கள், அதிலும் சண்டையின்போதே, அரசு தரப்பில் இருந்த முஸ்லிம் வீரர்கள் பழங்குடியினருடன் இணைந்துவிட்டார்கள் என்று கூறுகின்றார்கள்.
பழங்குடியினரின் அட்டூழியம்
கெஹர் ரஹ்மான் கூறுகிறார், "பழங்குடியினர், அரசின் ஆயுதங்களை கைப்பற்றிவிட்டார்கள். கடைவீதிகளில் இருந்த பொருட்களை கொள்ளையடித்தும், கடைகளை எரித்தும் அட்டூழியங்களில் ஈடுபட்டார்கள்.
'கல்மா' படிக்கத் தெரியாத அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். முஸ்லிம் அல்லாத பெண்கள் பலரை அடிமைகளாக்கினார்கள். மூர்க்கத்தனமான பழங்குடியினரிடம் சிக்காமல் தப்பிக்கும்பொருட்டு, பல பெண்கள் நதியில் குதித்துவிட்டார்கள்."
"பழங்குடியினரின் கோரதாண்டவத்திற்கு சாட்சியாக காஷ்மீர் மகாராஜாவின் ராணுவ வீரர்கள், உள்ளூர் ஆண்கள் மற்றும் பெண்களின் உடல்கள் காணப்பட்டன, ஆற்றில் உடல்கள் மிதந்தன. உடைந்த கட்டடங்கள், பொருட்கள், எரித்து சாம்பலாக்கப்பட்ட பொருட்களின் குவியல், கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் என சிதறிக்கிடந்த காட்சி காணவே கொடூரமாக இருந்தது."
ஜீலம் நதியை கடந்தார்கள்
மூன்று நாட்கள்வரை முஜாஃபராபாதில் இருந்த பழங்குடியினர், ஸ்ரீநகருக்கு செல்ல 170 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தது. அங்கிருந்து கிளம்பிய ஒரு குழு, ஜீலம் நதியை கடந்து பள்ளத்தாக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறியது. பாரமுல்லாவை அடைந்த அவர்கள், நகரை சூறையாடிய பின்னர் நெருப்பு வைத்தார்கள்.
200 கிலோமீட்டர் பயணித்து ஸ்ரீநகரின் புறநகர் பகுதியை அடைந்த பழங்குடியினரில் கெளஹர் ரஹ்மானும் இருந்தார். அவர்களை யாரும் எதிர்க்கவில்லை. காஷ்மீர் அரசரின் படைகள் சிதறியோடிவிட்டன. இந்துக்களும், சீக்கியர்களும் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறினார்கள். ரஹ்மானின் குழுவினர் எதிர்கொண்டது முஸ்லிம்களை மட்டுமே.
பழங்குடியினரின் பயம்
கெளஹர் ரஹ்மான் கூறுகிறார், "முஸ்லிம் பெண்கள் எங்களுக்கு உணவளிக்க தயாராக இருந்தார்கள், ஆனால் பழங்குடியினர் அவர்களிடமிருந்து உணவு வாங்கி சாப்பிட அச்சம் கொண்டார்கள். உணவில் நச்சுக் கலந்துவிடலாம் என்ற அச்சமே அதற்கு காரணம்".
"எனவே மக்களின் கால்நடைகளை பிடித்து கொன்று, தீயிலிட்டு சுட்டு சாப்பிட்டார்கள் பழங்குடியினர். ஒரு நாள் இரவு, நெருப்பு மூட்டி மாமிசங்களை எரித்துக்கொண்டிருந்த பழங்குடியினர் அடையாளம் காணப்பட்டு, விமானத்தில் இருந்து குண்டு வீசப்பட்டது. அதில் பலத்த சேதமடைந்த பழங்குடியினரின் குழுவில் பலர் உயிரிழந்தனர்" என்கிறார் ரஹ்மான்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் அரசின் அரசர் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அக்டோபர் மாதம் 26 மற்றும் 30க்கு இடையில், பழங்குடி போராளிகளை அடக்குவதற்காக, இந்தியா ஸ்ரீநகருக்கு துருப்புக்களை அனுப்பியது.
எண்ணிக்கையில் அதிகமாக இருந்த பழங்குடியினர்கள், முறையாக போரிடாமல், கொரில்லா முறையில் திடீர் தாக்குதல்களை நடத்தினார்கள். பழங்குடியினருக்கு உதவும் வகையில் பாகிஸ்தானும் ஸ்ரீநகருக்கு படைகளை அனுப்ப விரும்பியது. ஆனால் பிரிட்டிஷ் கூட்டுத் தலைமை அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
1948 வசந்த காலம்
அந்த சமயத்தில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ராணுவம் பிரித்து வழங்கப்படவில்லை. நவம்பர் மாத இறுதியில் பெரும்பாலான பழங்குடியினர் ஸ்ரீநகரில் இருந்து திரும்பிவிட்டார்கள். ஜீலம் நதியும் குறுகிவிட்டதால் கண்காணிப்பும் எளிதானது. முஜாஃபராபாதில் அதிகளவிலான இந்திய படைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதுதான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் காஷ்மீரின் கதை. 1948 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் பாகிஸ்தான் துருப்புகள் அதிகாரபூர்வமாக சில பகுதிகளை எடுத்துக்கொண்டன. குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவு ஏற்பட்டபோது, கெளஹர் ரஹ்மான் தனது சகாக்களுடன் ஹபிபுல்லாவிற்கு திரும்பினார்.
போர் பாணி
கெளஹர் சொல்கிறார், "கைப்பற்றிய பொருட்களையும், ஆயுதங்களையும் எடுத்துச் சென்ற அவர்கள், கால்நடைகளையும் ஓட்டிச் சென்றார்கள், அதுமட்டுமா? பெண்களையும் அடிமைகளாக அழைத்துச் சென்றார்கள். இந்த தாக்குதலுக்கு முன்னர் அமைதியாக வாழ்ந்துவந்த எங்களையும், காஷ்மீரையும் சிதைத்துவிட்டது. இரு நாடுகளிடையேயான உறவில் கசப்புணர்வை ஏற்படுத்தியது."
ராணுவ வரலாற்றாசிரியரான ஓய்வுபெற்ற மேஜர் ஆஹா ஹுமாயூன் அமீன் 'The 1947-48 Kashmir War: The war of lost opportunities' என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார், "அரசின் உதவியோடு, ஆனால் அரசு ஊழியர்கள் அல்லாதவர்களைக் கொண்டு ஆயுதமேந்தி ஊடுருவிச்செல்லும் போராட்டத்தின் பாணியிலான பழங்குடியினரின் தாக்குதல் என்ற சதித்திட்டத்தை தீட்டியவர் பாகிஸ்தானின் மேஜர் ஜென்ரல் அக்பர் கான் என்று கூறப்பட்டது."
பாகிஸ்தானின் உத்திகள்
1965ஆம் ஆண்டிலும், காஷ்மீரில் இதே பாணியை பின்பற்றியது பாகிஸ்தான் என்று சொல்கிறார் ஆகா ஹூமாயூன். இதே உத்தியை 1988-2003 காலகட்டத்திலும் பயன்படுத்தியது பாகிஸ்தான். 1999இல் கார்கிலிலும் இதே பாணியே பின்பற்றப்பட்டது என்கிறார் அவர்.
ஆப்கானிஸ்தானுக்கும் இதேபாணியில் அரசுடன் தொடர்பில் இல்லாத குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்.
ஆனால் காஷ்மீர் விடுதலை, ஆப்கானிஸ்தான் முன்னேற்றம் என்று ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பாகிஸ்தானின் அரசியல் நடைமுறையை பலவீனமாக்கியது பாகிஸ்தானின் பழங்குடியின தாக்குதல் பாணி.
ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரை போர்க்களமாக மாற்றிய பாகிஸ்தானும், தனது செயல்களின் பின்விளைவுகளில் இருந்து தப்பமுடியவில்லை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்