You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் போரில் இந்தியா பின்னடைவை சந்தித்த தருணங்கள்: யார் காரணம்?
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி
1965-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் மூன்றாம் பாகம்.
லாகூர் பகுதியில் இந்திய வீரர்கள் ஆரம்பத்தில் வெற்றி பெற்றாலும், தொடர்ந்த போரில் நிலைமை பாதகமானது. தரைப்படை பிரிவில் மேஜர் ஜெனரல் நிரஞ்சன் பிரசாதின் 15 படைப்பிரிவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் இரண்டு படைப்பிரிவுகள், தனது படைப்பிரிவை தாக்குவதாக, இந்திய தரப்பின் மேற்கத்திய கமாண்ட் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கிற்கு வயர்லஸ் செய்தியை அனுப்பினார் ஜெனரல் நிரஞ்சன் பிரசாத்.
தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் 'இச்சோஹில் கணவாய்' பகுதியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கி 'கோசல்காயல்' வரை வந்துவிட்டதாகவும் வயர்லஸ் செய்தி ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கிற்கு வியப்பளித்தது.
"என்ன நடந்தாலும் சரி, இப்போது இருக்கும் இடத்தில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்கக்க்கூடாது. நானும் மத்திய கமாண்டரும் அங்கு வருகிறோம்" என்று உடனே அவர் ஜெனரல் நிரஞ்சன் பிரசாத்திற்கு செய்தி அனுப்பினார்.
குண்டுமழை பொழிந்த விமானங்கள்
தனது ஜோங்கா ஜீப்பில் ஏறிய ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் தனது ஓட்டுநரை பின்பக்கத்தில் உட்கார சொல்லிவிட்டு, தானே வாகனத்தை ஓட்டிச்சென்றார். ஜி.டி சாலைக்கு வந்ததும், அங்கிருந்த நிலைமையை கண்ட அவர் நிலைகுலைந்து போனார். ஆங்காங்கே இந்திய வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தன.
பாகிஸ்தான் விமானங்கள் குண்டுவீசி நடத்திய தாக்குதலால், சாலையில் பெரிய அளவிலான பல குழிகள் ஏற்பட்டிருந்தன. பாகிஸ்தானின் விமானங்கள் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் தனது சுயசரிதை புத்தகமான 'த லைன் ஆஃப் டியூட்டி' (In the Line of Duty) இல் இவ்வாறு எழுதியுள்ளார், "இந்திய ராணுவத்தின் 15ஆம் படைப்பிரிவின் வாகனங்கள் அங்கும் இங்கும் நின்றுகொண்டிருந்தன. அவற்றின் ஓட்டுநர்கள் அப்படியே விட்டுவிட்டு தப்பித்து ஓடியிருந்தார்கள்".
"சில வாகனங்களில் எஞ்சின்கூட நிறுத்தப்படவில்லை. சாலையின் நடுவில் அனாதரவாக நின்றுகொண்டிருந்த ஆயுத கவச வாகனத்தில் சாவி தொங்கிக் கொண்டிருந்தது. நான் அதை சாலையின் நடுவில் இருந்து அப்புறப்படுத்தி, ஒரு ஓரத்தில் நிறுத்தினேன்".
கரும்புக்காட்டில் ஜெனரல்
பிராந்தியத்தின் ராணுவ போலிஸ் வாகனம் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கை கரும்புத் தோட்டத்திற்கு அருகில் அழைத்துச் சென்றது. 15ஆம் படைப்பிரிவின் மத்திய கமாண்டர் ஜெனரல் மேஜர் நிரஞ்சன் சிங், பாகிஸ்தானின் குண்டுவீச்சுத் தாக்குதலில் இருந்து தப்பித்து அங்குதான் ஒளிந்திருந்தார்.
ஹர்பக்ஷ் எழுதுகிறார், "நிரஞ்சன் பிரசாத் என்னை பார்க்க வந்தபோது, அவருடைய காலில் இருந்த ஷூ முழுக்க சேறு அப்பியிருந்தது. அவர் தலையில் தொப்பி இல்லை, முகச்சவரமும் செய்திருக்கவில்லை, சீருடையில் அவரது பெயர் பட்டையை காணவில்லை".
"அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, நீங்கள் ராணுவ படையணியின் ஜெனரல் கமாண்டிங் அதிகாரியா அல்லது கூலியா? ஏன் முகச்சவரம் செய்யவில்லை? உங்கள் ரேங்கை தெரிவிக்கும் பேட்ஜ் எங்கே?
கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே, தாழ்வாக பறந்துவந்த விமானத்தில் இருந்து பாகிஸ்தானி வீரர்கள் இருவர் தரையில் குதிக்க முற்பட்டதை கவனித்த ஜெனரல் நிரஞ்சன் பிரசாத், ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கை அருகில் இருந்த புதருக்குள் மறைவாக இழுக்க முயன்றார்.
ஹர்பக்ஷ் சிங், நிரஞ்சன் பிரசாதை பார்த்து கத்தினார், "எதிரிகளுக்கு நம் மீது ஆர்வம் இல்லை, நம்மை பார்க்கவும் இல்லை, நீங்கள் சாலைகளில் அநாதரவாக விட்டு வந்த வாகனங்களைத்தான் அவர்கள் குறிவைக்கிறார்கள்".
"உங்கள் பிரிகேடின் காமாண்டர் எங்கே?" என்று ஹர்பக்ஷ் சிங் கேட்டதும், "பாதக், பாதக்" என்று குரல் கொடுத்தார் நிரஞ்சன். அங்கு வந்த பாதக்கின் முகமெல்லாம் வெளுத்துக்கிடந்தது.
"மற்ற வீரர்கள் எங்கே என்று பாதக்கிடம் கேட்டதற்கு, "அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள், பலர் இறந்துபோனதால் அவர்கள் செயலற்று போய்விட்டார்கள்" என்று பதிலளித்தார்.
"சரி, இறந்தவர்கள் எத்தனை பேர்?" என்று ஹர்பக்ஷ் கேட்டதற்கு, "30 பேர் காயமடைந்தார்கள்" என்றார் பாதக்.
"4000 வீரர்களில் 30 பேர் காயமடைந்ததால், முழு படைப்பிரிவும் செயலற்று போய்விட்டதா?" என்று அதிர்ச்சியடைந்தார் ஹர்பக்ஷ் சிங்.
வயலில் விடப்பட்ட ஜோங்கா ஜீப்
ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் முன்னேறும்படி புதிய ஆணையிட்டார். படைப்பிரிவின் செயல்பாடு, முன்னேற்றம் பற்றி கவனிக்குமாறும், மேலதிகாரியிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் ஜெனரல் நிரஞ்சன் பிரசாத்துக்கு அவர் ஆணையிட்டார்.
ஏழாம் தேதி காலை, ஜெனரல் நிரஞ்சன் தனது படைப்பிரிவினரின் நிலைமையை தெரிந்துக் கொள்வதற்காக ஜோங்கா ஜீப்பில் சென்றார். இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் அவரை பின்தொடர்ந்தன.
அவர்கள் சிறிது தொலைவு செல்வதற்குள், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியது. நிரஞ்சன் பிரசாதும் அவருடைய ஏ.டி.சியும் அருகில் இருந்த வயல்களில் மறைந்துகொண்டார்கள்.
திரும்பிச் சென்றுவிடலாம் என்று சிறிது நேரத்தில் முடிவெடுத்த அவர்கள், தாங்கள் பாதுகாப்பு வாகனங்களில் செல்வதாக கூறிவிட்டு, அவற்றில் வந்தவர்களை நடந்துவரச் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
வயல்வெளிகளில் அப்படியே விடப்பட்ட ஜோங்கா ஜீப்பில் ராணுவக் கொடி இருந்தது, நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஜெனரல் நிரஞ்சன் பிரசாதின் ப்ரீப்கேஸ். அந்த ஜீப்பில் இருந்தது. அதை அவர் எடுக்கவில்லை.
பாகிஸ்தான் வானொலியில் ரகசிய ஆவணங்கள் பரப்புரை
தனியாக நின்றுகொண்டிருந்த ஜீப்பில் இருந்த ஆவணங்களை பாகிஸ்தான் வீரர்கள் கைப்பற்றினார்கள். அதில் இருந்த ஆவணங்களில், ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங்கின் தலைமைக்கு எதிரான புகாரின் நகலும் இருந்தது. இந்தியாவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் அந்த ஆவணங்களில் இருந்த தகவல்கள் பாகிஸ்தான் வானொலியில் பிரசாரம் செய்யப்பட்டது.
நிரஞ்சன் பிரசாதின் தவறான செயல்பாடுகளுக்காக அவரை ராணுவ சட்டத்தின்படி 'கோர்ட் மார்ஷல்' செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஜெனரல் செளத்ரி, நிரஞ்சன் பிரசாத்தை பதவியில் இருந்து விலகச் சொல்லி உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக, 15-ஆவது படைப்பிரிவின் புதிய கமாண்டராக மொஹிந்தர் சிங் நியமிக்கப்பட்டார்.
பிறகு ஜென்ரல் ஜோகிந்தர் சிங்கிடம் பேசியபோது, தான் எந்தவொரு ஆவணத்தையும் டோங்கா ஜீப்பில் வைத்திருக்கவில்லை என்று நிரஞ்சன் பிரசாத் கூறினார்.
"ஜோங்காவில் எழுத பயன்படுத்தும் 'நோட் பேட்' மட்டுமே வைத்திருந்தேன். இந்த அற்ப விஷயத்தை வைத்து அதிகாரிகள் என்னை அச்சுறுத்த முயன்றார்கள். பிறகு, ரகசிய அறிக்கையில் யாருக்கு எதிராக நான் எழுதியிருந்தேனோ, அவரிடமே எனக்கு எதிரான விசாரணையை ஒப்படைத்தார்கள்".
இந்தியாவிற்கு சங்கடம்
"ஜெனரல் நிரஞ்சன் சிங் கடமையை சரியாக செய்யாததற்காக பணியிலிருந்து நீக்கப்படவில்லை, அவர் 'அடிபணியாத சகாவாக இருந்தார்' என்பதால் நீக்கப்பட்டார்" என்று 'behind the scene' என்ற புத்தகத்தில் ஜொஹிந்தர் சிங், நிரஞ்சன் பிரசாதுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஜோஹிந்தர் சிங் மற்றும் ஹர்பக்ஷ் சிங்கிற்கு ஒத்துப்போகாது என்பதால் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் மேஜர் கே.சி.ப்ரவல் மற்றும் மேஜர் ஆகா ஹுமான்யூ அமீன் ஆகியோரின் கருத்துப்படி, மேஜர் ஜெனரல் நிரஞ்சன் சிங் ஒரு நல்ல சந்தர்ப்பதை கை நழுவவிட்டதால், இந்திய தரப்புக்கு பின்னடைவும், பல சங்கடங்களும் நேர்ந்தன.
யார் சரி-யார் தவறு, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டார்களா இல்லையா, வெற்றி தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதைவிட, தனி மனிதர்களின் தனிப்பட்ட கருத்துகளும், நடவடிக்கைகளும் போரின் போக்கையே மாற்றும் தன்மை படைத்தது என்பதற்கு உதாரணம் இது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் பிரிந்த காதல்!
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்