You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படையினர் சிக்கிக் கொண்டது எப்படி: 1965 போர்
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி
1965 செப்டம்பர் 6-ஆம் தேதி இரவு முதல் 7-ஆம் தேதி காலை வேளைக்குள் பாகிஸ்தானின் பி-57 விமானங்கள் இந்திய நிலைகளில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. அவற்றைத் தொடர்ந்து வந்த சி-130 ஹெர்குலஸ் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன.
ஒவ்வொரு விமானத்திலும் எலைட் சிறப்பு சேவைகள் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர்.
இந்தியாவின் அல்வரா, ஆதம்பூர், பதான்கோட் ஆகிய நகரங்களின் விமான நிலையங்களில் நள்ளிரவில் பாராசூட் மூலம் இறங்குவது அவர்கள் திட்டம்.
விமான நிலையங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அங்குள்ள இந்திய விமானங்களை அழிக்கவேண்டும் என்பது அவர்கள் இலக்கு.
இரவு இரண்டு மணிக்கு 'மேஜர் காலித் பட்' தலைமையில் 60 பாகிஸ்தானிய கமாண்டோக்கள் பதான்கோட் விமானத் தளத்திற்கு அருகில் இறங்கினார்கள். இறங்கியவர்களை ஒன்றன்பின் மற்றொன்றாக பல சிக்கல்கள் சூழ்ந்தன.
விமான நிலையத்தைச் சுற்றி கால்வாய்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் சேறு நிறைந்த வயல்கள் அவர்களுடைய வேகத்தைத் தடுத்தன.
மூன்று மணி நேரத்திற்குள் அவர்கள் சூழப்பட்டனர். எதிரிகளின் ஊடுருவலை பார்த்த கிராமவாசி ஒருவர் பதான்கோட் ராணுவ தலைமையகத்திற்குத் தகவல் கொடுத்துவிட்டார்.
தப்பித்து சென்ற கமாண்டோக்கள்
அக்கம்பக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 பேர் கூடிவிட்டனர். உடனே பல கமாண்டோக்கள் காவலில் எடுக்கப்பட்டனர். இரண்டு நாட்களில் 'மேஜர் காலித் பட்' பிடிபட்டார். அல்வாராவில் இரவின் இருள் சூழ்ந்திருந்தபோதிலும், அங்கு தரையிறங்கிய ராணுவ வீரர்களை நன்றாகவே பார்க்க முடிந்தது.
விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார். இந்திய விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவருக்கும் துப்பாக்கிகளையும், கைத்துப்பாக்கிகளையும் விநியோகித்தார்.
விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் புல்வெளிகள், மைதானங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து சந்தேகத்திற்கு இடமான யாராவது தென்பட்டாலோ நடமாடினாலோ தயங்காமல் துப்பாக்கியைப் பிரயோக்கிக்க அனுமதி கொடுத்தார்.
விமானத் தளத்தின் வளாகத்திற்குள் சில பாகிஸ்தானிய கமாண்டோக்கள் இறங்கியிருந்தாலும், அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரே பிடிக்கப்பட்டு போர்க் கைதிகளாக்கப்பட்டனர்.
'பாகிஸ்தானுக்கான போர்' (Battle for Pakistan) என்ற புத்தகத்தில் ஜான் ஃபிரிக்கர் எழுதியிருக்கும் தகவல் சற்று வேறுபட்டிருக்கிறது.
'பாகிஸ்தான் கமாண்டோ மேஜர் ஹஜூர் ஹசைனென், ஒரு இந்திய ஜீப்பை கடத்தி, தனது சகா ஒருவருடன் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்வதில் வெற்றிபெற்றார்' என்று ஜான் ஃபிரிக்கர் குறிப்பிடுகிறார்.
அல்வாரா தளத்தின் அதிகாரியும் நிதித்துறையின் பிரபலமான ஸ்காவர்டன் தலைவர் கிருஷ்ணா சிங், பாகிஸ்தானின் கமாண்டர்களின் தலைவரை தானே நேரடியாகக் கைது செய்தார். இவர் ஒருவர் மட்டுமே 1965, 1971 ஆகிய இரு போர்களிலும் வீரதீர செயல்கள் புரிந்ததற்காக 'வீர் சக்ர' விருது பெற்ற பெருமைக்குரியவர்.
காட்டிக்கொடுத்த நாய்களின் குரைப்பு
ஆதம்பூரிலும் பாகிஸ்தானி வீரர்கள் இதே நிலைமையைச் சந்தித்தார்கள். விமானதளத்தில் இருந்து மிகத் தொலைவில் தரையிறங்கிய அவர்களால் ஒன்றிணைய முடியவில்லை. இரவு நேரத்தில் ஓசையில்லாமல் அவர்கள் தரையிறங்கினாலும், நாய்களின் குரைப்பு அவர்களை காட்டிக் கொடுத்துவிட்டது.
சூரிய உதயத்தின்போது பாகிஸ்தான் வீரர்கள் சோளக்காட்டிற்குள் அடைக்கலம் புகுந்துவிட்டனர். லூதியானாவில் இருந்து வந்த தேசிய மாணவர் படை (NCC) இளைஞர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சீற்றமுற்றிருந்த கிராமவாசிகள் சில பாகிஸ்தானி வீர்ர்களை கொன்றுவிட்டனர்.
விமானம் மூலம் தரையிறங்கிய மொத்தம் 180 பேரில் 138 பேர் கைது செய்யப்பட்டனர். 22 பேர் ராணுவம், போலிஸ் அல்லது கிராமமக்களுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டனர், மீதமிருந்த 20 பேர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.
தப்பித்தவர்களில் பெரும்பான்மையோர் பதான்கோட் விமானதளத்தின் அருகே தரை இறங்கியவர்கள். அங்கிருந்து பாகிஸ்தான் எல்லை வெறும் பத்து மைல் தொலைவில் இருந்ததே அதற்கு காரணம்.
பி.வி.எஸ் ஜகன்மோஹன் மற்றும் சமீர் சோப்ரா எழுதிய 'இந்தியா-பாகிஸ்தான் விமானப் போர்' (The India Pakistan Air War) புத்தகத்தில், "60 கமாண்டோக்களின் குழு பெரிதாக இருந்ததால் அது வெற்றி பெற்றிருக்கமுடியும். ஆனால், பெரிய குழுவாக இருந்ததால் பிறரின் கவனத்தை ஈர்க்காமல் செயல்பட முடியவில்லை. அதேபோல், இந்த எண்ணிக்கையானது தங்களைப் பாதுகாக்கும் திறனற்ற சிறிய குழுவாக இருந்தது" எனக் கூறப்பட்டுள்ளது.
இதைத்தவிர, கெளஹாத்தி மற்றும் ஷிலாங்கிலும் சில பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தரையிறங்கினார்கள். ஆனால் அவர்கள் எதிர் தரப்புக்கு சேதம் எதுவும் ஏற்படுத்தும் முன்பே கைது செய்யப்பட்டனர்.
அச்சத்தில் டெல்லிக்கு விரைந்த துணை ராணுவப்படை
இரு நாடுகளிலும் இந்த சம்பவங்கள் அனைத்தும் பல மோசமான நிலைமைகளை உருவாக்கின. ஓர் அதிகாரியின் கனவிலும் எதிர் தரப்பின் சிப்பாய்களே தொடர்ந்து வந்தார்கள்.
"எதிரி, எதிரி வந்துவிட்டான், சுடுங்கள், ஃபயர்" என்று அவர் உறக்கத்திலும் உத்தரவிட்டாராம்.
காரிருள் சூழ்ந்த இரவு வேளையில் அருகில் இருப்பவர்களைக்கூட பார்க்கமுடியாது. எனவே இது கனவில் இட்ட கட்டளை என்று தெரியாமல் திடீரென்று எழுந்த பிற வீர்ர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு எதிரியை தாக்க தயாராகிவிட்டார்கள். நல்லவேளை, துப்பாக்கியை பயன்படுத்துவதற்குள் சுதாரித்துக்கொண்ட கமாண்டிங் அதிகாரி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
போர் சில நாட்களில், சில சமயங்களில் சில மணி நேரத்திலும்கூட முடிவடையலாம். ஆனால் அதில் பங்குபெற்றவர்களின் வாழ்நாள் முழுவதிலும் போரின் நினைவுகளும், பாதிப்புகளும், தாக்கங்களும் தொடர்வது மட்டும் முடிவடையாது.
ஏர் மார்ஷல் பூப் பிஷ்னோயி தன்னுடைய நினைவுகளை பிபிசியுடன் பகிர்ந்துக்கொள்கிறார், "அல்வாராவில் பாராசூட் மூலம் பாகிஸ்தானி வீர்ர்கள் இறங்கியதும், டெல்லிக்கு அருகில் உள்ள ஹிண்டன் விமானத்தளத்திலும் எதிரிகள் புகுந்துவிடலாம் என்று ஊகங்கள் பரவின. ஹிண்டனில் வீரர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்தனர். எனவே, தங்கள் குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிடலாம் என்று அங்கிருந்த தலைமை அதிகாரி அறிவுறுத்தினார். எனவே, அந்த நேரத்தில் உடனே கிடைத்த வாகன்ங்களை பிடித்துக் கொண்டு அங்கிருந்தவர்கள் டெல்லிக்கு விரைந்தார்கள்."
தங்களுக்குள்ளே தவறுதலாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு
மற்றொரு சுவாரஸ்யமான சம்பவம் பாகிஸ்தானில் நடந்தது. சர்கோதா விமான நிலையத்தில் இந்திய பாராசூட் வீரர்கள் இறங்கப்போகிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. உடனே பாகிஸ்தானின் விமானத் தலைமையகம், கமாண்டோக்களுடன் C-130 விமானத்தை சர்கோதாவுக்கு அனுப்பி வைத்தது.
வெளிச்சம் இல்லாத இரவு நேரத்தில் பாகிஸ்தான் வீர்ர்கள் தரையிறங்க முற்பட்டப்போது, அது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட்து.
தளத்தில் இருந்த மற்றும் தரையில் இறங்கிய பாகிஸ்தானி வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த தவறான புரிதலால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. (ஏர் கமாண்டர் மன்சூர் ஷா, த கோல்ட் வர்ட்: பாகிஸ்தான் அண்ட் இட்ஸ் ஏர்ஃபோர்ஸ்)
அதேபோல், பதான்கோட்டில் குண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் விதமாக அங்கிருந்த அனைத்து ஊழியர்களுக்கும் 9 மி.மீ ஸ்டென் கார்பைன் துப்பாக்கி வழங்கப்பட்டது. விமான ஓட்டி லெப்டினெண்ட் பதானியாவுக்கும் ஸ்டென் கார்பைன் துப்பாக்கி ஒன்று கிடைத்தது.
பதானியாவுக்கு துப்பாக்கியை இயக்கவே தெரியாது. எனவே லெப்டினன்ட் துஷார் சென் துப்பாக்கியை இயக்க அவருக்கு கற்றுக்கொடுத்தார்.
அப்போது துப்பாக்கியில் விரல் தவறாகப்பட்டு, இலக்கு மாறி சீறிப்பாய்ந்த 9 மி.மீ குண்டுகள், அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சக விமானிகளின் தலைக்கு மேல் பாய்ந்தது. தலைக்கு மேல் சில அங்குல தொலைவில் சீறிப் பாய்ந்த குண்டுகளைக் கண்டு அவர்கள் வெலவெலத்துப் போனார்களாம்.
அதற்கு பின் லெப்டினெண்ட் பதானியாவின் துப்பாக்கியால் சுடும் திறமைக்கு, சக ஊழியர்களின் சன்மானம் என்னவாக இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :