You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - பாகிஸ்தான் போர்; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தகவல்கள்!
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி
1965-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1962-இல் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற போரோ, 1971-இல் நடைபெற்ற வங்கதேச யுத்தமோ மக்களின் மனதில் அந்த அளவு இடம்பெறவில்லை.
1965 செப்டம்பர் ஆறாம் தேதியன்று, இந்தியாவின் மேற்கு பகுதியில் சர்வதேச எல்லையை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்ட இந்திய ராணுவம், யுத்தத்திற்கு தயாரானது.
இந்த நாளை பாகிஸ்தான், 'பாகிஸ்தான் பாதுகாப்பு தினம்' என்று கொண்டாடுகிறது. அன்று வெற்றி ஊர்வலமும் நடத்தப்படுகிறது. ஆனால் இந்தப் போரில் வெற்றி பெற்றது இந்தியாவே என்று இந்தியா நம்புகிறது.
போர் முடிந்து 52 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அதன் நினைவுகளும், புகைப்படங்களும் மங்கிவிட்டன. ஆனால் மங்கிய நினைவுகளை, கடந்துபோன காலங்களை, மங்கலான புகைப்படங்கள் சிறப்பாகவே காட்டிவிடும்.
மக்களுக்கு இந்த போர் தொடர்பான பல விஷயங்கள் தெரிந்திருக்காது, அதிலும் இளம் தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், 22 நாட்கள் நடந்த போர் தொடர்பாக 22 கட்டுரைகள் எழுதலாம் என்று முடிவுசெய்தோம்.
ஆனால், இது மிகவும் சுலபமான வேலை இல்லை. போர் நடந்த காலகட்டத்தில் இணையதள வசதி கிடையாது. எந்தத் தகவல் தேவையென்றாலும் கூகுளில் சில நொடிப் பொழுதில் தேடி எடுத்துக் கொள்வதைப் போல 50 ஆண்டுகள் பழைய விஷயங்களை சேகரிப்பது எளிதானதல்ல.
ஆனால் வேலையைத் தொடங்கிவிட்டோம். நூலகங்களில் இருந்து தேர்ந்தெடுத்த நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்து, எழுத்தாளர்களைச் சந்தித்து, ஆவணங்களைச் சேகரித்து (சில நேரங்களில் ரகசிய ஆவணங்களையும்) இலக்கை அடையக் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டோம்.
முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தி, ராணுவ மையங்களுக்குச் சென்று, இந்தக் குறிப்பிட்ட போர் தொடர்பான பழைய டயரி குறிப்புகளைத் தலைகீழாகப் புரட்டினோம்.
47 பேருடன் உரையாடல்
போரில் ஈடுபட்டவர்களில் பலர் இறந்துவிட்ட நிலையில், எஞ்சியவர்களைத் தேடுவதும், கண்டறிந்தவர்களில் மிகவும் வயதான நிலையில் இருந்த அவர்கள் பேசும்நிலையில் இல்லை என்பதுடன், முதுமையின் காரணமாக ஏற்பட்ட ஞாபக மறதியும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டன.
இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்து, எண்ணிலடங்காத் தொலைபேசி அழைப்புகளை விடுத்து, 47 பேரை நேரடியாகச் சந்தித்தோம். அதற்காக நாட்டின் பல இடங்களுக்கும் பயணங்கள் மேற்கொண்டோம்.
இந்தியத் தரப்பு மட்டுமல்ல, பாகிஸ்தான் தரப்பையும் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டோம். அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களில் இருந்தும் பயனுள்ள பல தகவல்கள் கிடைத்தன.
பாகிஸ்தான் விமானப்படை கமாண்டர் சஜ்ஜாத் ஹைதரின் அனுபவம் இது. பதான்கோட்டில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர், அவர் ஒரு வாளி நீரில், முழு குப்பி வாசனை திரவியத்தை கலந்து எட்டு துண்டுகளில் நனைத்து எட்டு விமான ஓட்டிகளிடம் பாகிஸ்தான் கமாண்டர் ஹைதர் கொடுத்தார். போருக்குப் போகும்போது நறுமணத்தால் தோய்க்கப்பட்ட துண்டு எதற்கு?
போரில் எதுவேண்டுமானாலும் நடைபெறலாம், அல்லாவிடம் செல்லவேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே துண்டுகளால் முகத்தை துடைத்து நறுமணம் கமழ இருங்கள் என்று அறிவுறுத்தினாராம் ஹைதர்!
தாராபோரின் கடைசி ஆசை
'யுத்தத்தில் இறந்துபோனால், யுத்த பூமியிலேயே தனது இறுதி சடங்குகள் நடைபெறவேண்டும்' என்று சவிண்டாவில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கர்னல் தாராபோர், தனது சகாக்களிடம் இறுதி ஆசையை தெரிவித்திருந்தார்.
'என்னுடைய பிரார்த்தனை புத்தகத்தை அம்மாவிடம் ஒப்படைக்கவும், மோதிரத்தை எனது மனைவியிடமும், ஃபவுண்டைன் பேனாவை எனது மகன் ஜர்ஜிஸிடம் கொடுக்கவும்' என்பதையும் இறுதி விருப்பமாக தெரிவித்திருந்தார் தாராபோர்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் டாங்கியின் குண்டுக்கு பலியான தாராபோர் வீரமரணத்தைத் தழுவினார். மரணத்திற்கு பின்பு வழங்கப்படும் வீரத்திற்கான உயரிய விருதான பரம்வீர் சக்ர விருது கொடுத்து அவர் சிறப்பிக்கப்பட்டார்
'கர்னல் தாராபோரின் விருப்பப்படி அவரது இறுதி சடங்குகள் யுத்த பூமியில் நடத்தப்பட்டால், அங்கிருந்து எழும் புகையை அடையாளம் கண்டு பாகிஸ்தான் டாங்கிகள் தாக்குதல் நடத்தினால் போரின் போக்கே மாறலாம் என்பதால் இறுதிச்சடங்கை யுத்த பூமியில் செய்ய வேண்டாம்' என்று சிலர் கருதினார்கள்' என்று சொல்கிறார் அந்தப் போரில் இந்திய தரப்பில் இருந்து பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த அஜய் சிங் என்ற வீரர்.
ஆனால், என்ன நடந்தாலும் பாரவாயில்லை, கர்னலின் இறுதி ஆசையை நிறைவேற்றும் முடிவை ராணுவம் எடுத்தது. கர்னல் தாராபோரின் இறுதிச் சடங்குகள், பாகிஸ்தானின் குண்டுகளின் முழக்கத்துடன், மீதமிருந்த வீர்ர்களின் உயிரை பயணம் வைத்து, யுத்த பூமியிலேயே நடத்தப்பட்டது.
போர் தொடர்பான தகவல்களும், புள்ளிவிவரங்களும் சற்று இட்டுக்கட்டியே கூறப்படுகிறது. ஆனால் அதை தவிர்க்க வேண்டும் என்று இந்தத் தொடரை தொடங்குவதற்கு முன்பே நாங்கள் தெளிவுபடுத்திக் கொண்டோம். போரில் தவறுகளும் நேரிடலாம். 1965 போரிலும், இரு தரப்பினரும் தவறுகள் செய்தனர்.
அவற்றை மறைக்கவும் நாங்கள் முயற்சிக்கவில்லை. ஒரு தரப்பினர் எதிர் தரப்பினரை பாராட்டியதையும் கேட்டோம், பதிவும் செய்திருக்கிறோம். ஆச்சரியமாக இருந்தாலும், 'பகைவர்களாக இருந்தாலும், வீரத்தை பாராட்டுவதற்கு யாரும் தயங்குவதில்லை' என்பதை இதில் இருந்து புரிந்து கொண்டோம்.
இந்த சிறப்புத் தொடரில், 52 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய-பாகிஸ்தான் போர் பற்றிய தகவல்களை கூறுகிறோம். யுத்தத்தில் வெற்றிவாகை சூடியவர்கள் மட்டுமல்ல, தாய்நாட்டுக்காக யுத்த வேள்வியில் உயிரை ஆகுதியாக்கியவர்கள், வெற்றியோ தோல்வியோ வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் திரும்பியவர்கள் என பலரின் பல்வேறு பரிணாமங்களை கொண்ட தொடர் இது.
யாரையும் பாராட்டுவதோ, சரி-தவறு என்று விமர்சிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல. யுத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, சம்பவங்களை, படிப்பினைகளை, உண்மைகளை உங்கள் முன்வைப்பதே எங்கள் தலையாய நோக்கம். எங்கள் முயற்சி வெற்றியடைந்ததா என்பதை சொல்ல வேண்டியது நீங்களே!
யுத்தம்
'டாங்கிகள் முன்னால் சென்றாலும் சரி,
பின்னால் சென்றாலும் சரி,
அவை விட்டுச் செல்வது தரிசு நிலத்தையே
வெற்றியோ தோல்வியோ அது போரின் முடிவு.
ஆனால் எப்போதும் தோற்பது பூமியே
அழுகுரல் ஒன்றே போரின் எச்சம்
யுத்தமில்லா உலகம் நன்றே
யுத்த பூமியில் சிதைகள் எரிவதைவிட
வீட்டில் அடுப்புகள் எரிவதே
இரு தரப்புக்கும் நன்று'
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :