You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உயிரை பணையம் வைத்து பனிக்குளத்திலிருந்து சிறுவனை மீட்ட போலீஸ் அதிகாரி
அமெரிக்காவில், கடுமையான பனியால் உறைந்த குளத்தில் குதித்து பனிக்கட்டிகளை உடைத்து, 8 வயது சிறுவனை தான்காப்பாற்றியது எப்படி என்பது பற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யூட்டா மாநிலத்தில் உள்ள நியூ ஹார்மனி என்ற இடத்தில், நாய் துரத்தியதால் ஓடிவந்த சிறுவன் ஒருவன் குளத்தில் விழுந்ததையடுத்து சார்ஜென்ட் ஏய்ரன் தாம்சன் அங்கு அழைக்கப்பட்டார்.
குளத்தின் விளிம்பிலிருந்து 25 அடி பரப்பளவுக்குகீழ் அச்சிறுவன் மிதந்து கொண்டிருந்ததாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
நீரினுள் சுமார் 30 நிமிடங்கள் அவன் இருந்திருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜேசன் என்ற அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வருவதாக வாஷிங்டன் ஷெரிஃப் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கிறிஸ்துமஸ் அன்று நிகழ்ந்த அதிசயம்" இது என்று இந்த மீட்பு நடவடிக்கையை விவரிக்கிறார் அச்சிறுவனின் தந்தை.
பனிக்கட்டிகளுக்கு இடையில் அச்சிறுவனின் கை மேலே தெரிந்ததாக பெண் ஒருவர் கூறியதையடுத்து குளத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு தாம் சென்றதாக, செய்தியாளர்களிடம் பேசிய தாம்சன் தெரிவித்தார்.
பனிகட்டிகளுக்கு இடையே சிறிது தூரம் சென்ற பிறகு, "பனி தடிமனாகிவிட்டதாகவும், தனது கைகளால் அவற்றை உடைக்க முடியவில்லை" என்றும் அவர் குறப்பிட்டார்.
"எனவே அந்த பனிக்கட்டிகள் மீது மேலும் கீழுமாக குதித்து அதனை உடைத்தேன்" என தாம்சன் கூறினார்.
பின்பு, நீரின் ஆழம் மற்றும் குளிர்ச்சியை மதிப்பிட்டு சிறுவனைத் தேடத் தொடங்கியதாவும் அவர் குறிப்பிட்டார்.
"கழுத்து வரை இருந்த தண்ணீரில் மிதந்து… என் கைகளை மேலும் கீழுமாக நகர்த்திக் கொண்டிருந்தேன். எப்படியும் அவனை கண்டுபிடித்துவிடுவேன் என்பது தெரியும். அவ்வாறே நடந்தது" என்றார் அவர்.
"சிறுவனின் முகத்தை பார்த்ததும், அவன் தலையை தண்ணீருக்கு மேல் இழுத்து, உடனடியாக உதவியாளர்களை அழைத்ததாகவும்" தாம்சன் தெரிவித்தார்.
'பெரிய வீரர்' என்று தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியர்களாலும் சமூகத்தாலும் தாம்சன் பாரட்டப்பட்டாலும், அவசர சேவையின் போது மற்ற நபர்கள் உதவியில்லாமல் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறியதாக ஸ்பெக்ட்ரம் செய்தித்தாள் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :