You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: எஜமானரை கடித்துக் கொன்ற நாய்கள்
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில், பெத்தனி ஸ்டீஃபன்ஸ் என்ற 22 வயதுடைய பெண், அவருடைய நாய்களால் கொல்லப்பட்டது குறித்து கலங்கவைக்கும் தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
பெத்தனியின் உடல் கண்டெடுக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகு, அவரின் மரணம் குறித்த விவரங்களை தெரிவிக்கவும், அது குறித்து நிலவிவரும் புரளிகளுக்கு முடிவு கட்டவும் , காவல்துறை இரண்டாவது செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.
பெத்தனி வளர்த்துவந்த நாய்களை, காவல்துறையினர் முதன்முதலில் பார்த்தபோது, அவற்றின் அருகில் இருப்பது ஏதோ ஒரு விலங்கின் உடல் பாகங்களே என்றே அவர்கள் நினைத்தனர்.
ஆனால், அந்த சடலம் பெத்தனியுடையது என்று கூறிய அதிகாரிகள், அந்த பிட்புல் வகை நாய்கள், அவரது உடலைத் தின்றுகொண்டிருந்ததாகக் கூறினர்.
எச்சரிக்கை: கீழே உள்ள தகவல்கள் வருத்தமளிக்கக்கூடியதாக இருக்கும்.
"நானும், மற்ற நான்கு அதிகாரிகளும் கவனித்தபோது, நாய்கள் விலா எலும்பை திண்றுகொண்டு இருந்தன" என்று கூறினார், கூச்லாண்ட் கவுண்டியின் காவல் அதிகாரியான ஜிம் ஆக்நியூ.
"தொண்டையிலும், முகத்திலும் ஏற்பட்ட காயத்தாலேயே அவர் உயிரிழந்தார்" என்று அவர் கூறினார்.
அவர் கீழே தள்ளப்பட்ட பிறகு, நாய்கள் அவரைக் கொன்றுள்ளன என்று தெரிவதாக காவல் அதிகாரி கூறினார்.
முதலில், குடும்பத்தினரை மனதில் வைத்து, இந்த மரணம் குறித்த துல்லியமான விவரங்களை வெளியிட வேண்டாம் என்று நினைத்ததாகத் தெரிவித்தார் அக்நியூ.
ஆனால், இது குறித்து பல புரளிகள் பரவத் தொடங்கியதாலும், பல தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியதாலும், யாரும் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டு தப்பவில்லை என்பதை விளக்குவதற்காக, இந்த தகவல்களை வெளியிட்டதாகக் கூறினார் அவர்.
குட்டியாக இருந்தது முதல், அந்த நாய்களை எடுத்து வளர்த்த பெத்தனியை நாய்கள் எதற்காக கொல்லவேண்டும் என்ற கேள்வியை அவரின் நண்பர்கள் முன்வைத்துள்ளனர்.
அந்த நாய்கள் மிகவும் சாந்தமானவை என்று கூறிய, பெத்தனியின் தோழியான பார்பரா, "அவை தங்களின் முத்தங்களால் நம்மை கொல்லும்" என்று, டபிள்யூ. டபிள்யூ.பி.டி என்ற செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்த இருநாய்களின் மொத்த எடை, 45 கிலோ எடையுள்ள பெத்தனியின் எடையைப் போல இருமடங்கு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"பெத்தனி மிகவும் கொடுமையாக காயமடைந்திருந்தார், அவர் இறந்து கொஞ்ச நேரம் ஆகியிருந்தது என்பது தெரிந்தது" என்றும் அக்நியூ குறிப்பிட்டார்.
அவரின் உடல் மிகவும் சிதைந்திருந்ததாக கூறும் அதிகாரி, "அவரின் உடலில் இருந்த காயங்கள் எதனுடனும் ஒப்பிடத்தக்கவை அல்ல" என்று கூறினார்.
அவரின் தலையில் இருந்த, கடித்த காயங்களின் தடங்கள், நாய்களின் பல்தடங்களுடன் ஒத்துப்போவதாகவும், கரடி போன்ற வேறு எந்த மிருகத்தின் பல் தடத்துடனும் அவை ஒத்துப்போகவில்லை என்றும் அவர் கூறினார்.
குடும்பத்தினரின் அனுமதியோடு, அந்த நாய்கள் கொல்லப்பட்டன.
தற்போது, அவற்றின் உடல்கள், பிரேதப்பரிசோதனைக்காக, பாதுக்காத்து வைக்கபட்டுள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்