You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தாக்கலான முத்தலாக் சட்ட மசோதா
முத்தலாக் எனப்படும் விவாகரத்து முறையை சட்டவிரோதமானதாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இம்மசோதாவை தாக்கல் செய்தார்.
அடிப்படை உரிமைகளுக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிராக இச்சட்டம் உள்ளதாக ஹைதராபாத் ஏஐஏஐஎம் கட்சியின் எம்.பி அசாசுதின் ஒவய்சி கூறியுள்ளார். இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முத்தலாக் முறையில் விவாகரத்து அளித்தால் மூன்றாண்டு சிறை தண்டனை என்று சட்டம் கூறுகிறது. ஆனால் சிறையில் இருக்கும் கணவர் எவ்வாறு ஜீவனாம்சம் வழங்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முன்னதாக இந்த மசோதா குறித்து யாரிடமும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், முத்தலாக் என்பது மதம் அல்லது நம்பிக்கை சார்ந்த விஷயம் அல்ல என்றும், பாலின நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியம் சார்ந்த பிரச்சனை என சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இது தலையிடுவதாக கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் லீக் எம்.பி மொஹமத் பஷீர் கூறினார்.
இந்த மசோதாவில் பல குறைபாடுகள் மற்றும் முரண்பாடுகள் உள்ளதாக பிஜு ஜனதாதளத்தின் பஷேரி கூறினார்.
இவ்வாறு பல எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :