பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் ரஷ்ய தலையீடா? ஃபேஸ்புக், ட்விட்டரிடம் விசாரணை
கடந்த 2016-இல் நடைபெற்ற, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான 'ப்ரெக்ஸிட்' கருத்து வாக்கெடுப்பில் செல்வாக்கு செலுத்தும் வகையில் ரஷ்யா மறைமுகமாக சமூக வலைத்தளப் பிரசாரத்தில் ஈடுபட்டதா என்பது குறித்த தகவல்களை பிரிட்டன் அரசுடன் பகிர்ந்துகொள்ள ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் மாத மத்தியில், பிரிட்டன் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என்று நம்புவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸிட் வாக்கெடுப்புக்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெற்ற சமூக வலைத்தள நடவடிக்கைகள் குறித்து அந்த ஆணையம் விசாரித்து வருகிறது.
எதிர்வரும் வாரங்களில் தாங்கள் கண்டறிந்த தகவல்களை பகிர முடியும் என்று ட்விட்டர் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டன் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு கூகுள் நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பிபிசி புரிந்துகொள்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா சமூக வலைத்தளப் பிரசாரம் மூலம் தலையிட்டதா என்பது குறித்து அந்நாட்டிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரிட்டனின் இணையம், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேமியன் காலின்ஸ் அனுப்பிய ரஷ்ய தொடர்புடைய சமூக வலைத்தள நடவடிக்கைகள் பற்றி விசாரிக்கும் கடிதத்துக்கு இந்த இரு சமூக வலைத்தள நிறுவனங்களும் இவ்வாறு கூறியுள்ளன.
அந்தக் குழுவின் வேண்டுகோளுக்கு எவ்வளவு சிறப்பாக பதில் அளிக்க முடியும் என்பதைப் பரிசீலித்து வருவதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் கொள்கை வகுப்புக்கான இயக்குநர் சைமன் மில்னர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
போலியான செய்திகள் குறித்த விரிவான விசாரணைகளுக்கு உதவ ஃபேஸ்புக் உறுதியாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின், பிரிட்டனுக்கான பொது கொள்கைகளுக்கான தலைவர் நிக் பிக்கில்ஸ், வாரத்துக்கு சந்தேகத்திற்குரிய 32 லட்சம் கணக்குகளையும், அதேபோல தினமும் சந்தேகத்திற்குரிய 4.5 லட்சம் உள்நுழைவுகளையும் தாங்கள் அடையாளம் கண்டதாகக் கூறியுள்ளார்.
அதே நேரம் எல்லா 'தானியங்கி' கணக்குகளும் மோசமானவை அல்ல என்று கூறிய அவர், காற்று மாசுபாடு குறித்து ட்வீட் செய்யும், விக்கிபீடியா பக்கங்களில் திருத்தங்களை செய்யும் தானியங்கி இணையப் பொறிகளை (பாட்கள்) உதாரணமாகக் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












