சௌதிக்கு பிரான்ஸ் அதிபர் திடீர் பயணம்: காரணம் என்ன?
சௌதி அரேபியா மற்றும் லெபனான் அரசுகளுக்கு இடையே உள்ள மோதல் முற்றி வரும் நிலையில், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங், சௌதி அரேபியாவுக்கு முன்கூட்டியே திட்டமிடப்படாத திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், AFP/Getty Images
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி லெபனான் பிரதமர் பதவியில் இருந்த சாத் ஹரிரி, கடந்த வாரம் பதவி விலகிய நிலையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
பிரான்சின் முன்னாள் காலணி நாடான லெபனான் இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் விடுதலை அடைந்தது.
ஏமன் நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டுப் படைகள் போரிட்டு வரும் நெருக்கடி குறித்து சௌதி அதிகாரிகளிடம் மக்ரோங் விவாதித்தார்.
வியாழன்று பாரிஸ் அருங்காட்சியகத்தின் பிரிவு ஒன்றை அபுதாபியில் திறந்து வைப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்த மக்ரோங், லெபனானின் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக சௌதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேசுவதற்காக இரண்டு மணி நேரம் மட்டும் சௌதி தலைநகர் ரியாத் செல்லவுள்ளதாக அறிவித்தார்.
"லெபனான் அரசியல் அதிகாரிகள் அங்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுபவர்களுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், AFP
பதவி விலகியுள்ள ஹரிரியுடன் தான் அதிகாரபூர்வமற்ற தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2005-இல் கொல்லப்பட்ட லெபனான் முன்னாள் பிரதமரான ரஃபீக் ஹரிரியின் மகனான சாத் ஹரிரி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில் கூறியிருந்தார்.
அவரது தந்தை கொல்லப்பட்ட குண்டுவெடிப்புக்கு ஹெஸ்புல்லா அமைப்பு மீது பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.
சௌதி தலைநகர் ரியாத்தில் இருந்தபடியே வெளிநாட்டு அதிகாரிகளை அவர் தொடர்ந்து சந்தித்து வருவதாக ஹரிரியின் அலுவலகம் கூறியிருந்தது.
லெபனானில் நெருக்கடி நிலவுவதற்கு காரணமாக, இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













