சீனா செல்வதற்கு முன் என்ன பேசினார் டிரம்ப்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஷி ஜின்பிங்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சீனா சென்றடைந்தார். இந்த சீன பயணத்தில் டிரம்ப் வணிகம் மற்றும் வட கொரியாவுடனான பதற்றமான சூழல் குறித்து கவனம் செலுத்துவார் என்று கருதப்படுகிறது.

பீஜிங் செல்வதற்கு முன்னதாக, தென் கொரியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், சீனா வட கொரியாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

டிரம்ப் சீனா செல்வதற்கு முன் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை புகழ்ந்திருந்தார். சீன அதிபரின் அண்மைய மிகப்பெரிய அரசியல் வெற்றிக்கு பின்பு, தான் அவரை சந்திக்க ஆவலாக இருப்பதாக கூறி இருந்தார்.

அவர் சீன அதிபரை புகழ்ந்து இருந்தாலும், இரண்டு தலைவர்கள் இடையே நிறைய கருத்து வேற்றுமைகள் உள்ளன. டிரம்ப் பல முறை சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, சீனா அறமற்ற வணிகத்தில் ஈடுபடுவதாக டிரம்ப் சீனாவை கடிந்துள்ளார்.

டிரம்ப் வட கொரியா குறித்து என்ன சொன்னார்?

சீனா செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தென் கொரியாவில் உரையாற்றிய டிரம்ப், வட கொரியாவை `யாரும் வாழ தகுதியற்ற ஒரு நரகம்` என்று வர்ணித்து இருந்தார்.

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை, சர்வதேச சமூகத்தின் கண்டிப்புக்கு உள்ளானது. இதுவரை மேற்கொண்டதிலேயே மிகப்பெரிய அணு ஆயுத சோதனையை கடந்த செப்டம்பர் மாதம் வட கொரியா மேற்கொண்டது. கடுமையான மொழியில் இதனை கண்டித்த டிரம்ப், "எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். எங்களிடம் மோதி பார்க்க நினைக்க வேண்டாம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

காணொளிக் குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சீனா சென்றடைந்தார்.

மேலும் அவர், வட கொரியாவிடம், "நாங்கள் உங்களின் நல் எதிர்காலத்துக்கான சரியான திசைவழியை காட்டுகிறோம்" என்றும் பேசியிருந்தார்.

ரஷ்யாவையும், சீனாவையும் குறிப்பிட்டு டிரம்ப், அனைத்து பொறுப்புமிக்க தேசங்களும், வட கொரியாவை தனிமைப்படுத்த வேண்டும். ஐ.நா. விதித்த பொருளாதார தடைகளை அமல்படுத்த வேண்டும். அந்த நாட்டுடனான அனைத்து ராஜ தந்திர உறவுகளையும், வணிக, தொழிற்நுட்ப உறவுகளையும் முறிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

சீனாதான் வட கொரியாவின் முக்கியமான கூட்டாளி. ஆனால், வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா விதித்துள்ள பொருளாதார தடைகளை தாங்கள் அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் என்று சீனா கூறியுள்ளது.

காணொளிக் குறிப்பு, வட கொரியா குறித்து பேசிய டிரம்ப்

சீனா குறித்து என்ன பேசியிருந்தார் டிரம்ப்?

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அரசியல் ஏறுமுகத்தை டிரம்ப் தற்போது வாழ்த்தி இருந்தாலும், முன்னதாக பலமுறை சீனாவை விமர்சித்து இருக்கிறார் டிரம்ப்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப், சீனாவை பண மோசடியில் ஈடுபடுபவர்கள் என்றும், அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளை திருடுபவர்கள் என்றும் விமர்சித்து இருந்தார்.

சீனாவில் ட்வீட்டர் தடைசெய்யப்பட்டு இருக்கிறது. டிரம்ப்பின் விருப்பமான தகவல்தொடர்பு தளம் ட்விட்டர்தான். அவர் சீனாவில் இருக்கும்போது ட்விட்டரை பயன்படுத்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், வெள்ளை மாளிகை அதிகாரி, "அதிபர் தாம் விரும்புவதை ட்விட் செய்வார்" என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :