`எங்களை சீண்ட வேண்டாம்`: வடகொரியாவிற்கு டிரம்ப் எச்சரிக்கை

பட மூலாதாரம், Chung Sung-Jun/Getty Images
தென் கொரிய நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
`எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். எங்களை சீண்டவேண்டாம்` என்று கூறியதோடு, வடகொரியாவில் வாழ்க்கை என்பது `இருண்ட கற்பனை` என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வட கொரியா தலைவர் கிம்மை குறிப்பிட்டு பேசிய அவர், `நீங்கள் பெறும் ஆயுதங்கள் உங்களை வலுவாக்கவில்லை` என்றார். மேலும், வடகொரியாவை தடுக்க மற்ற நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆசியாவின் ஐந்து நாடுகள் பயணத்தின் ஒரு பகுதியாக, டிரம்ப் தென்கொரியா சென்றுள்ளார்.
அவர் இந்த பயணத்தில், சீனாவின் அதிபர் ஜின்பிங்கை சந்திப்பார் என்றும், பேச்சுவார்த்தையில் வணிகமும், வடகொரியா பிரச்சனையும் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில், வடகொரியாவின் அணுஆயுத திட்டமே, டிரம்பின் முக்கிய விஷயமாக உள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக, ஐ.நாவின் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து தனது ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம், தனது மிகப்பெரிய மற்றும் ஆறாவது அணுஆயுத சோதனையை அது நடத்தியது.
தென்கொரிய தலைவர்கள் மத்தியில் டிரம்ப் அளித்த உரை மிகவும் கவனிக்கப்பட்டது. அவரின் உரையில் அப்பட்டமான கோபம் இருந்தாலும், முன்பு போல வட கொரியாவை டிரம்ப் தொடர்ந்து தாக்கவில்லை.
கிம் ஜாங்-உன் குறித்து பேசினார்
எதிர்பாராத விதமாக, டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் குறித்து நேரடியாக பேசியதோடு, அந்நாடு தங்களின் அணுஆயுத திட்டங்களையும், ஆயுதங்களையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், EPA
`அவை உங்கள் நாட்டை மிகவும் மோசமான ஆபத்தில் தள்ளுகிறது. இந்த பாதையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியும், நீங்கள் ஆபத்தை சந்திக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தும்` என்று எச்சரித்தார்.
இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்து செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டதை வலியுறுத்தும் வகையில் பேசிய அவர், `நீங்கள் குற்றங்கள் செய்திருந்தாலும் கூட, நாங்கள் உங்களுக்கு மேம்பட்ட ஒரு வருங்காலத்திற்கான பாதையை வழங்குகிறோம் ` என்றார்.
எச்சரிக்கை: `தவறான கணக்கீடு`
முன்பு கட்டுப்பாடுகளுடன் இருந்த அமெரிக்கா வலுவிழந்தது போல தெரிந்தது என்பதை வைத்து வடகொரியா `தவறான கணக்கீடு செய்யக்கூடாது என்றும், தற்போது புதிய நிர்வாகம் அமெரிக்காவில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters
வடகொரியாவிடம், `எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள், எங்களை சீண்ட வேண்டாம் என்று கூறுவது, எங்கள் நாட்டிற்காக மட்டுமில்லாமல், அனைத்து நாகரிகமடைந்த நாடுகளுக்காகவும் பேசுகிறேன் என்று நம்புகிறேன்` என்றார்.
`மோசமான இந்த ஆட்சியை ஒதுக்கிவைக்க, அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் ` என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கொரிய தீபகற்பத்தில் , வான்வழி படை மற்றும் ஜெட் விமானங்கள் ஆகிய அமெரிக்க படைகள் உள்ளதை குறிப்பிட்ட அவர், `நான் வலிமையின் மூலமாக அமைதியை வேண்டுகிறேன்` என்றார்.
மேலும், வடகொரியாவின் பொருளாதார ஆதரவாளர்களான ரஷ்யா மற்றும் சீனாவையும் குறிப்பிட்டு பேசிய டிரம்ப், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விதமான தொடர்புகளையும் வடகொரியாவுடன் அவர்கள் துண்டித்துக்கொள்ள அழைப்பு விடுத்தார்.
வடக்கின் `திகில்`வாழ்க்கையும் -தெற்கின் `அதிசய` வாழ்க்கையும்
கொரிய போருக்கு பிறகான, தென் கொரியாவின் சாதனைகள் குறித்து தனது உரையில் அதிகமான அளவு பேசினார் டிரம்ப்.
தென்கொரியாவின் வாழ்க்கைக்கு எதிர்மாறாக, வடகொரியாவில் வாழ்க்கையை `திகில் வாழ்க்கை` என்று குறிப்பிட்ட அவர். அவர்கள் பிரிந்து சென்ற பாதை என்பது, `வரலாற்றின் ஆய்வுக்கூடத்தில் நடந்த சோகமான சோதனையை` போன்றது என்று கூறினார்.
`தென் கொரியா எவ்வளவு வெற்றிகரமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவிற்கு, கிம்மின் இதயத்தில் உள்ள இருண்ட கற்பனைகளை நீங்கள் உறுதியுடன் இழிவு செய்கிறீர்கள் என்று அர்த்தம்` என்றார் டிரம்ப்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












