You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இந்து தீவிரவாதம் இல்லையென இனியும் சொல்ல முடியாது": புயலைக் கிளப்பும் கமல்ஹாசன் கருத்து
தமிழகத்தில் இந்துத் தீவிரவாதம் இல்லையென இனியும் சொல்ல முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தத் தீவிரவாதம், இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வோருக்கு எந்த விதத்திலும் வெற்றியோ முன்னேற்றமோ அல்ல என்றும் கமல் கூறியிருக்கிறார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வினய் கட்டியார், "கமல்ஹாசனின் மனநிலை சரியில்லை. அவரை மருத்துவமனையில் வைத்து, சிகிச்சையளிக்க வேண்டும். அவர் தன் வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற பெயரில் தமிழ் வார இதழான ஆனந்த விகடன் இதழில் நடிகர் கமல்ஹாசன் தொடர் ஒன்றை எழுதிவருகிறார்.
இதுவரை 5 தொடர்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வாரம் பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டு அதுசார்ந்த கருத்துகளையும், அறிவுரைகளையும் கட்டுரையில் அவர் எழுதி வருகிறார்.
மேலும், சமூகத்திற்கு பயனுள்ள வகையில் இயங்கும் நபர்களையும் தனது கட்டுரையில் அடையாளம் காட்டி வருகிறார்.
அவர் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடலாம் என்று கருதப்படும் நிலையில், அவரது ட்விட்டர் குறிப்புகளும் இந்தத் தொடரும் அரசியல் நோக்கர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வாரம் வெளியாகியுள்ள தொடரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கமல்ஹாசனிடம் கேட்டிருக்கும் ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
"சமீப காலமாக இனவாத பேதமும் பிற்போக்குத்தனமும் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி செய்வதைப் பார்க்க முடிகிறது. இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவதன் மூலம் திராவிடப் பண்பாட்டை பலவீனப்படுத்துகின்றன. ஒரு சமூக ஆர்வலராக இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?" என பினராயி விஜயன் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்கு நீண்ட பதிலளித்திருக்கும் கமல்ஹாசன், "சமூகம் சமச்சீர் அடைவதில் கலக்கம் கொள்ளும் பழைய தலைமுறையினர் அதிலும் மேல் சாதியினரில் உள்ள பழந்தலைமுறையினர், இளைய சமுதாயத்தினருள் தங்கள் பழமைவாதத்தை சாதிய சனாதனக் கட்டுப்பாடுகளை நவீன தேன் தடவித்தர திணிக்க முயற்சி செய்கின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
`ஒரு சமுதாயமே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்துவரும் வேளையில் இத்தலைமுறையினர் உலவும் நவீனத் தளங்களிலும் பழமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்கத் துவங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணைய தளத்தில் சினிமாக் கலைஞர்களை சாதிவாரியாகப் பிரித்து பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன' என்று கூறியுள்ளார்.
`முன்பெல்லாம் இத்தகைய இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல் வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர்' என கருத்து வெளியிட்டுள்ளார்.
`ஆனால், இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும் யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்' என்கிறார்.
`எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்? என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவிக்கிடக்கிறது. இந்தத் தீவிரவாதம் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் முன்னேற்றமோ பெருமையோ அல்ல" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கருத்துகளின் பின்னணியில்தான், பாரதிய ஜனதா கட்சி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் கமல்ஹாசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கமல்ஹாசனின் இந்தக் கருத்து தொடர்பாக பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன், " பினராயி விஜயனின் ஊதுகுழலாகியிருக்கிறார் கமல். இந்துத் தீவிரவாதம் என்பதே வரலாற்றில் கிடையாது. இந்துக்கள்தான் தீவிரவாதத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விஸ்வரூபம் படத்தால், கமல் மாநிலத்தை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னது யாரால்?" என்று கூறினார்.
`இந்து தீவிரவாதம் எங்கேயிருக்கிறது, யார் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைக் கமல் சொல்ல வேண்டும். அரசியலுக்கு வர விரும்பும் கமல் பொறுப்பற்றதனமாகப் பேசக்கூடாது. அவர் அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும்' என்கிறார் நாராயணன்.
இந்துக்களுக்கு எதிரான அவதூறுப் பிரசாரத்தின் தூதுவராக கமல் மாறியிருக்கிறார் என்கிறார் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத்.
முன்பு காவித் தீவிரவாதம் என ப. சிதம்பரம் குறிப்பிட்டார். அதைப் போலத்தான் இதுவும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இதனை உடனடியாக அவர் திரும்பப் பெற வேண்டும் என்கிறார் அர்ஜுன் சம்பத்.
மாலேகாவ்ன் போன்ற சம்பவங்களை இந்துக்களுடன் தொடர்புபடுத்தினாலும் அதில் யாரும் தண்டிக்கப்படவில்லை என்கிறார் அர்ஜுன் சம்பத்.
ஆனால், இந்த விவகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் அரசியல் நோக்கருமான து. ரவிக்குமார் வேறு விதமாகப் பார்க்கிறார்.
"பயங்கரவாதம் என்பதை வெறும் குண்டுவெடிப்போடு சேர்த்து மட்டும் புரிந்துகொள்ளக்கூடாது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதும் பயங்கரவாதம்தான் என்கிறது ஐ.நா.வின் விளக்கம்.
அப்படி ஏற்படுத்தப்படும் அச்ச உணர்வும் அதற்காக தூண்டப்படும் வன்முறையும் பயங்கரவாதம் என்றால் இன்று இருக்கிற சாதி அமைப்பும் அதனால், செயல்படுத்தப்படும் வன்முறையும் பயங்கரவாதமே என்கிறார்.
தீவிரவாத எதிர்ப்புதான் உண்மையான நோக்கமென்றால் இந்து அமைப்பினர் மட்டுமன்றி கமல்ஹாசனும் சாதிய வன்முறைகளை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்." என்கிறார் ரவிக்குமார்.
சமீப காலமாக அரசியல் தொடர்பாக தொடர்ந்து பேசிவரும் கமல்ஹாசன், நவம்பர் 5ஆம் தேதியன்று தனது நற்பணி இயக்கத்தினரை சந்திக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களையும் அந்தக் கூட்டத்தில் உரையாற்ற அழைத்திருக்கும் கமல்ஹாசன், இறுதியாக ரசிகர்கள் மத்தியில் பேசவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
பிற செய்திகள்
- கேட்டலோனியா: விசாரணையில் ஆஜராகவில்லை பூஜ்டிமோன்
- 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
- நியூயார்க் தாக்குதல்: சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு
- இந்தியாவுக்கு இந்திரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
- இலங்கை: இரட்டைக் குடியுரிமையால் பதவியிழந்தார் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்