You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கெஜ்ரிவாலிடம் கமல் கேட்ட அரசியல் ஆலோசனைகள் என்ன?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். கமல் அரசியலுக்கு வரவேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் அப்போது அழைப்பு விடுத்தார்.
அண்மைக் காலமாக நடிகர் கமல்ஹாசன், நேரடியாக பல அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார். தமிழகத்தை ஆளும் அதிமுக அரசில் ஊழல் அதிகரித்துள்ளதாகக் கூறியிருந்த கமல், அரசை விமர்சிக்கும் விதமாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் பல டிவிட்களை பதிவு செய்திருந்தார்.
கமல், அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் எழுந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனைக் கமல் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கமலை சந்தித்துப் பேசியுள்ளார். ஒரு மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
முதலில் பேசிய கமல், "நாங்கள் பேசியது என்னவாக இருக்கும் என உங்களால் யூகிக்க முடியும். ஊழலுக்கு எதிரானவர்கள் என்னுடன் உறவாடுகிறார்கள். அந்த வகையில் இந்த உறவு தொடர்கிறது. இது நான் கற்றுக்கொண்டிருக்கும் காலம். அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்தும் கற்றுக்கொள்கிறேன்" என்றார்.
"இலக்கு ஒன்றுதான். ஊழலையும், மதவாதத்தையும் எதிர்த்துப் போரிடுவதுதான் அந்த இலக்கு. அந்தக் கொள்கைக்காகப் போராடுபவன் என்ற பெயரும் எனக்கு ஓரளவு இருக்கிறது", என்றார் கமல்ஹாசன்.
அடுத்துப் பேசிய கெஜ்ரிவால்,"ஊழலும், மதவாத சக்திகளும் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் அரசியல் குறித்து, தமிழ்நாட்டின் அரசியல் குறித்தும் விவாதித்தோம். நேர்மைக்கும் தைரியத்துக்கும் பெயர் பெற்ற கமல் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்." என்றார்.
இனிவரும் காலங்களிலும் கமலுடன் ஆலோசனைகள் தொடரும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்