இது சென்னையின் "சினிமா பாரடைஸோ"

- எழுதியவர், கே. முரளிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதியில் இயங்கிவரும் நூறாண்டு பழமையான பாட்சா தியேட்டர், நகரில் ஃபிலிம் மூலம் திரையிடப்படும் ஒரே திரையரங்கமாகும்.
பிற்பகல் 2.15 மணி. அந்தத் திரையரங்கின் முன்பாக கூலித் தொழிலாளர்கள், சில குப்பை பொறுக்குபவர்கள், ரிக்ஷாகாரர்கள் என சுமார் 20 பேர் கூடியிருக்கிறார்கள். முகப்பில் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்ட ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார் அந்த நடுத்தர வயதுக்காரர்.
"டேய், ஓனருக்கு வழிய விடுடா" என்றபடி கூட்டம் சற்று விலகுகிறது. விசாலமான படிகளில் ஏறி, தன் அலுவலகத்தை வந்தடைகிறார் எஸ்.எம். பாட்சா. முன்பு மினர்வா என்று அழைப்பட்ட பாட்சா தியேட்டரின் உரிமையாளர்.
பாட்சாவின் அலுவலகம் எங்கும் ஃபிலிம் ரோல்கள், பழைய போஸ்டர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. "சரவண பாலாஜி தியேட்டர் மூடப்பட்ட பிறகு, சென்னையில் ஃபிலிம் மூலம் படங்கள் திரையிடப்படும் ஒரே தியேட்டர் இதுதான்" என்றபடி பேச ஆரம்பிக்கிறார் பாட்சா.
சென்னை தங்க சாலையில் இயங்கிவந்த கிரௌன் தியேட்டர் சில ஆண்டுகளுக்கு முன்பாக இடிக்கப்பட்ட பிறகு, சென்னையில் தற்போது இயங்கிவரும் திரையரங்குகளிலேயே மிகப் பழமையான திரையரங்கு பாட்சா தியேட்டர்தான்.
நேஷனல் தியேட்டர் என்ற பெயரில் 1916ல் டபிள்யு.எச். மர்ச் என்ற பிரிட்டிஷ்காரரால் இந்த அரங்கம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட காலத்தில் தமிழகத்திலேயே மிக நவீனமான, குளிர்ச்சியான அரங்கம் இதுதான். தமிழகத்தில் முதன் முதலில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அரங்கமும் இதுதான்.

1930களின் மத்தியில் இந்த திரையரங்கம் டாண்டேகர் குடும்பத்தின் வசம் வந்தது. அப்போதுதான் நேஷனல் என்ற பெயர், மினர்வா என்று மாற்றப்பட்டது. அப்போதிலிருந்து பெரும்பாலும் ஆங்கிலப் படங்களே திரையிடப்பட்டன.
இதன் பிறகு பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் நீண்ட காலக் குத்தகைக்கு எடுத்திருந்ததால், தொடர்ந்தும் ஆங்கிலப் படங்களே திரையிடப்பட்டன. இருந்தபோதும், பல முக்கியமான தமிழ்த் திரைப்படங்களும் இங்கே திரையிடப்பட்டன என்கிறார் எஸ்.எம். பாட்சா. 1952ல் பராசக்தி திரைப்படம் இங்கு திரையிடப்பட்டுதான் சென்சார் செய்யப்பட்டது.
"சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்கள் இங்கு வந்து படம் பாத்திருக்கிறார்கள். ஆனால், கூட்டம் சேர்ந்துவிடும் என்பதால் படம் முடிவதற்கு முன்பாகவே புறப்பட்டுவிடுவார்கள்" என்கிறார் பாட்சா.
ஆனால், 1970களின் மத்தியில் சென்னையில் பல இடங்களில் இரண்டு - மூன்று திரையரங்குகளைக் கொண்ட மல்டி - ஸ்க்ரீன் திரையரங்குகள் வர ஆரம்பித்ததும் மினர்வா போன்ற ஒற்றைத் திரை அரங்குகளின் செல்வாக்கு குறையத் துவங்கியது.

ஒரு காலத்தில் மிக மிக வசதியான, அந்தஸ்தில் உயர்ந்தவர்களுக்கான திரையரங்கமாக இருந்த மினர்வா, 80களுக்குப் பிறகு வசதி குறைந்தவர்களுக்கான திரையரங்கமாக மாறியது. எல்லாத் திரையரங்குகளும் திரையிடுதல், ஒலி, ஒளி, இருக்கை உள்ளிட்ட வசதிகளில் நவீனமயமாக, மினர்வா பின்தங்கத் துவங்கியது.
இதன் பிறகு வேறு ஒரு சினிமா வினியோக நிறுவனம் குத்தகைக்கு எடுத்து இந்தத் திரையரங்கை நடத்தத் துவங்கியது. அதற்குப் பிறகு மினர்வாவை ஐம்பதாண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்தார் பாட்சா.
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த பாட்சாவுக்கு எப்போதுமே சினிமா மீது ஒரு ஈர்ப்பு. நீண்ட காலமாக திரைப்பட விநியோகம் உள்பட சினிமா சார்ந்த வேலைகளைப் பார்த்துவந்த அவர், 2000ன் துவக்கத்தில் சென்னை மயிலாப்பூரில் உள்ள காமதேனு திரையரங்கை வாடகைக்கு எடுத்து திரைப்படங்களை வெளியிட்டுவந்தார். ஆனால், அங்கு வசூல் குறையவே, 2006ல் மினர்வாவை குத்தகைக்கு எடுத்தார் எஸ்.எம். பாட்சா.
"பேரு கொஞ்சம் டிரெண்டா இருக்கட்டுமேன்னு என் பெயரையே வைத்துவிட்டேன்" என்று சிரிக்கிறார் பாட்சா.
கடைகள் நிறைந்த ஜார்ஜ் டவுன் பகுதியில் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களே இந்தத் திரையரங்கின் பார்வையாளர்கள். 290 பேர் உட்காரக்கூடிய இந்தத் திரையரங்கில் தற்போது ஒரு காட்சிக்கு அதிகபட்சமாக 30-40 பேர் வருகிறார்கள். ஞாயிற்றுக் கிழமையன்று இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கும். கட்டணம் ஜி.எஸ்.டி. உட்பட 20 ரூபாய்.
இங்கு திரையிடப்படுவது பெரும்பாலும் பழைய படங்கள்தான். தமிழ்நாட்டில் ஒரு சில திரையரங்குகளைத் தவிர, பிற திரையரங்குகள் எல்லாம் க்யூப் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டதால் தற்போது வெளியாகும் எந்தத் திரைப்படமும் ஃபிலிமின் பிரிண்ட் செய்யப்படுவதில்லை. ஆகவே இந்தத் திரையரங்கில் புதிய திரைப்படங்களைத் திரையிட முடியாது.
"துப்பாக்கி, பாண்டிய நாடு போன்ற படங்கள் வரைகூட ஃபிலிம் பிரிண்டுகள் கிடைத்தன. இனி அவை வராது. என்னிடம் பழைய படம், புதிய படங்கள் என சுமார் 160 படங்கள் இருக்கின்றன. அவற்றையே திரும்பத் திரும்பத் திரையிடுவேன்" என்கிறார் பாட்சா.
தமிழ்நாட்டில் முதல் தளத்தில் அமைந்திருக்கும் ஒற்றைத் திரையரங்கு இது மட்டும்தான். அரங்கத்தின் கீழ் பகுதி சரக்குக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. திரையரங்கின் நிலையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பல இருக்கைகள் உடைந்துகிடக்கின்றன.
"சற்று நவீனப்படுத்தி, டிஜிட்டல், ஏசி ஆகிய வசதிகளையெல்லாம் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன். வீட்டிலிருப்பவர்களும் இதை நவீனப்படுத்தும்படி சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். பார்க்கலாம்" என்கிறார் பாட்சா.

ஜார்ஜ் டவுன் பகுதியில் கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் துவங்கப்பட்டு, மிகப் பிரபலமாக விளங்கிய பிராட்வே, பிரபாத், தங்கம், செலக்ட் போன்ற பல திரையரங்குகள் கடந்த சில ஆண்டுகளில் இடிக்கப்பட்டுவிட்டன. பாரத் திரையரங்கு சற்று நவீனமாக்கப்பட்டுள்ளது.
"நாம் எல்லோருடைய வீட்டிலும் டிவி இருக்கிறதென நினைக்கிறோம். தெருவோரம் வசிப்பவர்களுக்கு வீடே இல்லையெனும்போது டிவி எப்படியிருக்கும்? பல வீடுகளில் வயதானவர்களை பகல் நேரத்தில் கொஞ்சம் ரூபாயைக் கொடுத்து வெளியில் துரத்திவிடுவார்கள். அவர்கள் எங்கு செல்வார்கள்? 20 ரூபாய் கொடுத்தால்கூட எங்கே தூங்க அனுமதிக்கிறார்கள்? இங்கு வந்தால் நிம்மதியாக இருக்கலாம்" என்றபடி டிக்கெட் கொடுக்கப் புறப்படுகிறார் பாட்சா.
ஆபரேட்டர், நிர்வாகி உள்பட மொத்தம் நான்கு பேர் மட்டுமே இந்தத் திரையரங்கில் வேலை பார்க்கிறார்கள்.
டிக்கெட் கவுண்டர் இருந்தாலும் திரையரங்கில் நுழையும் இடத்தில் நின்றபடி, காசை வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்கிறார். சிலர் ஐந்து ரூபாய் குறைவாக இருப்பதாக சொல்கின்றனர். வாங்கிக்கொண்டு அனுமதிக்கிறார்.
மணிச் சத்தம் ஒலிக்கிறது. கதவுகள் மூடப்படுகின்றன. "நாற்காலிக்குச் சண்டை போடும் நாடு நம் பாரத நாடு" என்ற பாட்டுடன் துவங்குகிறது குரு - சிஷ்யன் படம்.
"ரஜினி படம், இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை, சாயங்காலம் நல்ல கூட்டம் வரலாம்" என்றபடி, தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் காலங்களில் இருந்து வெளியில் வந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்படுகிறார் எஸ்.எம். பாட்சா.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












