காங்கோவில் பல லட்சம் பேர் பட்டினியில் தவிப்பு: குழந்தைகள் இறக்கும் அபாயம்

பட மூலாதாரம், AFP/GETTY
மோதலால் சீர்குலைந்துள்ள காங்கோ ஜனநாயக குடியரசின் கசாய் மாகாணத்தின் உணவு நெருக்கடியைத் தவிர்க்க, ஐ.நாவின் உணவு அமைப்பின் தலைவர் உதவிகளைக் கேட்டுள்ளார்.
பட்டினியால், 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐ.நாவின் உணவு அமைப்பின் தலைவர் டேவிட் பீஸ்லே பிபிசியிடம் தெரிவித்தார்.
உதவிக் கிடைக்காவிட்டால், வரும் மாதங்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறப்பார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.
2016 ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு படையினருடனான மோதலில் உள்ளூர் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து இங்கு மோதல் வெடித்தது.
இதனால், 1.5 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்.
கசாயில் உள்ள சூழ்நிலையை டேவிட் பீஸ்லே "பேரழிவு" என வர்ணித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP/GETTY
''எங்களது குழுவினர் களத்திற்குச் சென்றனர். எரிக்கப்பட்ட வீடுகளையும், குடிசைகளையும் நாங்கள் பார்த்தோம். ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பல குழந்தைகள் இறந்துள்ளனர்.'' என்கிறார் டேவிட் பீஸ்லே.
''முதலில் நிதி, இரண்டாவது உணவு, மூன்றாவது சரியான இடத்திற்கான அணுகல். இவை கிடைக்கவில்லை என்றால் வரும் மாதங்களில் பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறப்பார்கள்'' என்றும் அவர் தெரிவித்தார்.
கசாய் மக்களுக்கு உதவியளிக்க தேவைப்படும் நிதியில், ஐ.நாவின் உணவு அமைப்பிடம் தற்சமயம் வெறும் 1% மட்டுமே இருப்பதாக அவர் கூறுகிறார்.
"எங்களுக்கு உதவித் தேவைப்படுகிறது. அது இப்போதே தேவை" என்கிறார்.

பட மூலாதாரம், Reuters
கசாயில் உள்ள ஒர் உள்ளூர் தலைவரை அரசு அங்கீகரிக்க மறுத்தபோது இங்கு மோதல் தொடங்கியது.
அவர் ஒரு போராளிக்குழுவை அமைத்தார். ஆனால், அரசு படைகள் உடனான சண்டையில் அவர் கொல்லப்பட்டார்.
அவர் இறந்ததில் இருந்து, கம்யுனா நாசப்போ என்ற போராளிக்குழுவினர் வெவ்வேறு காரணங்களுக்காக சண்டையிட ஆரம்பித்தனர். ஆனால், அரசு அதிகாரிகளையே தங்களது பொதுவான இலக்காக வைத்திருந்தனர்.
பலர் இக்குழுவில் இணைந்ததால், ஐந்து மாகாணங்களுக்கு இக்குழு பரவியது. இக்குழுவினருக்குப் பாதுகாப்பு படையினருக்குமான சண்டையில் 3000த்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் டஜன் கணக்கிலான மனிதப்புதைகுழிகளை ஐ.நா கண்டறிந்துள்ளது.
பிற செய்திகள்
- திருநெல்வேலி கந்துவட்டி தற்கொலைகள்: புதைந்து கிடக்கும் உண்மைகளும், பின்னணியும்
- மெக்சிகோ: இறந்தவர்களுக்காக ஒர் எலும்புக்கூடு பேரணி (புகைப்படத் தொகுப்பு)
- மனிதாபிமானமற்ற முறையில் பூனைகளை கொலை செய்யும் சீரியல் கில்லர்: பிரிட்டன் மக்கள் அச்சம்
- ''ஹார்வி வலுக்கட்டாயமாக என் வீட்டிற்கு நுழைந்து என்னை வல்லுறவு செய்தார்'': மேலும் ஒரு நடிகை புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













