ஷி ஜின்பிங் ஆ்ட்சியில் சித்ரவதை: சீன வழக்கறிஞரின் அனுபவம்
- எழுதியவர், ஜான் சட்வோர்த்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஷிய யான் இயை பொருத்தவரையில், உடல்ரீதியாக செய்யப்படும் தாக்குதல்கள் தான் சகித்துக் கொள்வதற்கு கடினமானது என்றும் இல்லை. எனினும் வேண்டுமென்றே செய்யப்படும் கொடூரம் என்று அவர் அளிக்கும் பட்டியல் நீள்கிறது.

பட மூலாதாரம், WANG FAMILY
அவர் மிகவும் நெருக்கடியான சூழலில் உட்கார வைக்கப்பட்டார். மிகவும் குள்ளமான ஒரு இருக்கையில், காலை 6 மனி முதல் இரவு 10 வரை உட்கார வைக்கப்பட்டார்.
இவ்வாறு 15 நாட்கள் உட்கார வைக்கப்பட்ட பிறகு தன்னுடைய கால்கள் உணர்ச்சி இழந்துவிட்டதாகவும், தன்னால் சரியாக சிறுநீரகம் கழிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார்.
சில நேரங்களில் அவருக்கு உணவு மறுக்கப்பட்டதோடு, பல மணிநேரங்களுக்கு கடுமையான விசாரணை நடைபெற்றுள்ளது.
அவர் அடிக்கப்பட்டார்.
அவர் தூங்கும் போது கண்காணிக்கப்பட்டார். அவர் படுத்துள்ள முறையில் இருந்து மாறிப்படுக்காமல் இருக்க காவலாளிகளால் கண்காணிக்கப்பட்டார்.
இது எல்லாவற்றையும் விட கொடுமையானதாக அவர் குறிப்பிடுவது தனிமைச்சிறையையே.
"நான் ஒரு சிறிய அறையில் தனியாக வைக்கப்பட்டேன். அங்கு ஜன்னல்கள் இல்லை, ஆறு மாதங்களுக்கு சூரிய ஒளியையே நான் பார்க்கவில்லை. நான் படிப்பதற்கு ஒன்றுமில்லை, செய்வதற்கும் ஒன்றுமில்லை, உட்கார குள்ளமான இருக்கை மட்டுமே இருந்தது."
"அத்தகைய சூழலில், மனிதர்கள் பைத்தியமாகக்கூடும். நான் உலகத்தில் இருந்து தனிமைபடுத்தப்பட்டேன். இது சித்திரவதை, அடிப்பதை விட இந்த தனிமையே மிகவும் வலியானது."
இவர் கூறும் தகவல்களை சரிபார்ப்பது என்பது கடினம் என்றாலும், இவர் கூறும் கதைகள், "சட்டத்தின் மீதான போர்" என்பதற்கு கீழ் வருகிறது. "சட்டத்தின் மீதான போர்" என்பது, ஷி ஜின்பிங்கின் முதல் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது.
ஷியவின் விவகாரத்தில் மட்டும், இது மிகவும் அரிதான, முதல் தகவலாக உள்ளது.
பிற வழக்கறிஞர்கள் போலவே, விடுதலை செய்யப்படும் போது, எந்த வெளிநாட்டு ஊடகத்துடனும் பேசக்கூடாது என இவருக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டு இருந்தாலும், அதை அவர் தவிர்த்துவிட்டார்.
"இந்த நேர்காணல் சற்று சிக்கலானது" என அவர் என்னிடம் கூறினார்.

பட மூலாதாரம், Reuters
சினாவின், "சட்டத்தின் மீதான போர்"
ஏற்கனவே சிக்கலுக்கு உள்ளான சீனாவின் மனித உரிமைகள் களம், ஜின்பிங்கின் முதல் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் மத்தியில் மேலும் அரசு நடவடிக்கைகளுக்கு இலக்கானது.
சமீபத்தில் முடிந்த மாநாட்டிற்கு பிறகு, இரண்டாவது முறை, அதிபர் அலுவலகத்தை அலங்கரித்துள்ள ஜின்பிங்கின், மிக முக்கியமான இருண்ட மரபாக இது உள்ளது.
300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், சட்ட உதவியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் ஆகியோர் விசாரணைக்காக கொண்டுவரப்பட்டனர். அதிலும், இரண்டு டஜனுக்கும் அதிகமானோர் மீது முறையான புலன் விசாரணையாக நடத்தப்பட்டது.
இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், சிலருக்கு நீண்ட சிறைவாசம் வழங்கப்பட்டுள்ளது, சிலர் தங்களுக்கான தண்டனைக்காக காத்திருக்கின்றனர். குறைந்தபட்சம் ஒருவர் முழுமையாக காணாமலே போயுள்ளார்.
ஷிய யான் இயை மற்றும் அவரை போன்று இந்த நடவடிக்கையில் குறிவைக்கப்பட்டவர்கள் எல்லோருமே, தங்களின் பெரும்பாலான சட்டப்பணிகளில், துறை ரீதியான ஊழல்களில் பாதிக்கப்பட்டவர்கள், காவல்துறையின் வன்முறை அல்லது மதரீதியான துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்டவர்களுடைய வழக்குகளில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். துன்புறுத்தல் என்பது இவர்களின் பணிகளில் இணைந்த ஒரு விஷயமாகவே இருந்திருக்கிறது.
அமைதியான ஜனநாயக சீர்திருத்தத்திற்கு மிகவும் துணிவான ஆதரவாளராக இவர் இருந்துள்ளார். சீனாவின் முன்னாள் அதிபரான ஜியாங் ஜெமின், அதிபர் பதவிக்காலம் முடிந்த பின்பும், மத்திய ராணுவக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகமறுத்ததை எதிர்த்து இவர், வழக்குத் தொடுத்துள்ளார்.
ஆனால், தற்போதுள்ள சீன அதிபரின் ஆட்சியில், விஷயம் மோசத்தில் இருந்து படு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.

2012ஆம் ஆண்டு, ஜின்பிங் ஆட்சிக்கு வந்த சிறிது காலங்களில், கசிந்த ஓர் ஆவணம், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு மிரட்டலை அளிக்க கூடிய, அதனால் பல்கலைக்கழகங்களில், ஊடகங்களில் தடை செய்யப்பட்ட ஏழு முக்கிய சித்தாந்த விஷயங்களைக் கொண்டிருந்தது.
மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் நெருக்கமான ஒருவரின் அலுவலகத்தில் இருந்து விநியோகிக்கப்பட்ட இந்த ஆவணம், "மேற்கத்திய அரசியலமைப்பு சட்ட ஜனநாயகம்" , "உலகளாவிய மதிப்புகள்" மற்றும் "குடிமைச் சமூகம்" போன்ற தடை செய்யப்பட்ட சிந்தாந்தங்களின் பட்டியலைக் கொண்டிருந்தது.
அந்த காலகட்டத்திற்கு பிறகு என்ன நடந்தது என்பதை முன்கூட்டியே சொன்னதாகத்தான் அந்த ஆவணம் இருந்துள்ளது என்றும் கூறலாம்.
பொது கலந்தாய்வுகளுக்கான வாய்ப்புகளைக் குறைத்தல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல், வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மீது புதிய கட்டுபாடுகள் மற்றும் மனித உரிமை வழக்கறிஞர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வழிநடத்தினார் ஷி.
நொறுக்கப்பட்ட நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும்
இது இவ்வாறாக நடந்திருக்க வேண்டியது இல்லை.
சீனாவுடனான வர்த்தகத்தை அதிகப்படுத்தினால் அங்கு அரசியல் சீர்திருத்தம் மலரும். தசாப்தங்களாக, மேற்கில் கூறப்பட்டு வந்த வாக்கியம் என்பது இது தான்.
"பொருளாதார சுதந்திரம் என்பது, சுதந்திர பழக்கத்தை உருவாகும்" என்று, சீனா குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்து இருந்தார்.

பட மூலாதாரம், EPA
மேலும், அந்த உறுதிமொழி, கேட்பதற்கு நல்ல விஷயம் போலவே அன்று தோன்றியது.
2007ஆம் ஆண்டிற்கான கட்சி மாநாட்டில், ஷி ஜின்பிங் வருங்கால தலைவராக வரலாம் என்பது போன்ற தோற்றம் உருவாக துவங்கியது. அப்போது தான் அந்நாட்டு ஊடகங்கள் உத்தேசமாக, அதிகரிக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து பேசின.
2012ஆம் ஆண்டு மாநாட்டின் சமயத்தில் தான், நேர்மறையான வாய்ப்புகள் மறையத்துவங்கி இருந்த நிலை. அப்போதும் கூட, சுதந்திரமான நீதித்துறை உரிமைக்கான சட்டம் வருவதன் மூலம், ஜனநாயகத்தில் சீர்திருத்தம் கொண்டுவர முடியும் என்பதை விளக்கும் வகையிலான திறந்த மடல்களும், மனுக்களும் வெளியிடப்பட்டன.
அத்தகைய மனுவில் கையெழுத்து போடுவது என்பது, வழக்கறிஞர், ஊடகவியலாளர் என யாராக இருந்தாலும் மிகவும் தைரியமான செயலாக இருக்கும்.
விமர்சனம்= பொய்யான செய்தி?
சீன அரசு நடத்தும் ஊடகம், மனித உரிமை வழக்கறிஞர்களுக்கு நடந்த சித்திரவதை குறித்த செய்தியை, `பொய்யான செய்தி` என கூறியதோடு, இந்த செய்திகளை ஒளிபரப்பக்கூடிய வெளிநாட்டு ஊடகங்களை, `எதிர்மறையான செய்திகளை` வெளியிடுவதில் அதிக ஆர்வமுள்ளவர்கள் என்றும் குற்றம் சாட்டுகிறது.
வெளிநாட்டு பார்வையாளர்கள் கூட, சீனாவில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களையும், அதிவேக ரயில்களையும், உயர்ந்துவரும் பொருளாதாரத்தையும் கண்டு வியக்கின்றன.
ஒரு சில வழக்கறிஞர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் குரல் என்பது, இந்த விஷயங்களில் இருந்து அவர்களை திசை திருப்பும் காரணிகளாக பார்க்கப்படுகிறது.
ஆனால், ஷிய யான் இ மற்றும் அவரை போன்றவர்களின் சித்திரவதை என்பது நம்மிடம் எதோ முக்கியமான ஒரு விஷயத்தை கூற வருகிறது.
முன்னெடுத்து செல்லக்கூடிய, சிறப்பான பொருளாதாரத்திற்கு அரசியல் சுதந்திரம் தேவை என்று முன்நிபந்தனை வைத்து வந்த பழமைவாய்ந்த சிந்தனைகள் எதுவுமே இல்லாமல், சிறந்த சக்தி, அதிகாரம் மற்றும் நம்பிக்கையோடு சீனா வளர்ந்து வருகிறது.
1.4 பில்லியன் மக்களுக்கும் அனுப்பப்பட்ட செய்தி மிக தெளிவாக உள்ளது. அந்நாட்டு நீதிமன்றமாக இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்திற்கு சவால் விடுவதற்கு முன்பு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை கூறுகிறது.
`விழித்திருங்கள், நடவடிக்கை எடுங்கள்`
18 மாத சிறை தண்டனைக்கு பிறகு, ஷிய யான் இ ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆனால் அவர் இன்னும் கண்காணிப்பில் இருந்து வெளியே வரவில்லை.
கடந்த ஆகஸ்டு மாதம் நாம் நேர்காணலை எடுத்த சில காலங்களில், அவரை அதிகாரிகள் சந்தித்து, எச்சரித்துள்ளனர்.
இந்தமுறை அது மிகவும் தெளிவாக இருந்தது. வரவிருக்கும் கட்சியின் மிக முக்கிய கூட்டத்தின் ஆயத்த பணிகளை குலைக்கும் வகையில் எந்த செயலையும் செய்ய வேண்டாம்.
அவரின் பாதுகாப்பிற்காக, அந்த மாநாடு முடியும் வரையில் இந்த நேர்காணலை வெளியிடாமல் இருக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













