பிபிசி பணியாளர்களை துன்புறுத்துவதை இரான் நிறுத்த வேண்டும்: ஐ.நா

டேவிட் கே

பட மூலாதாரம், ADEM ALTAN/AFP/Getty Images

பிபிசி பாரசீக சேவை பணியாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் துன்புறுத்துவதை இரான் நிறுத்திகொள்ள வேண்டும் என ஐ.நா சபை நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி டேவிட் கேயி பிபிசி பணியாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தனக்கு பிபிசியிடம் இருந்து புகார் வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

"தேசியப் பாதுகாப்புக்கு எதிரான சதி" செய்ததாக பிபிசி பணியாளர்கள் 150 பேர், முன்னாள் பணியாளர்கள், பிபிசிக்கு பங்களிப்பு செய்வோர் ஆகியோர் மீது இரான் அரசு புலனாய்வைத் தொடக்கிய பிறகு இந்தப் புகார் வந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த 150 பணியாளர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டன.

இதனால் அவர்களோ அவர்களது குடும்பத்தினரோ தங்கள் சொத்துகளை, கார்களை விற்கவோ பரம்பரை சொத்துகளைப் பெறவோ முடியாது.

இரான் அரசின் செயல் "முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஊடகவியலாளர்களுக்கான ஒட்டுமொத்த தண்டனை" என்றும், அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும், பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால் தெரிவித்தார்.

பிபிசி பாரசீக சேவை, லண்டனில் இருந்து தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் இணையம் மூலம் செய்திகளை வழங்கி வருகிறது. இரானில் தடை செய்யப்பட்ட போதிலும், வாரம் தோறும், கிட்டத்தட்ட 18 மில்லியன் மக்களை சென்று சேருகிறது.

நீதிமன்ற உத்தரவு

2009ம் ஆண்டின் சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின்போது அன்னிய சக்திகள் தலையீடு இருப்பதாக இரான் அரசு குற்றம் சாட்டியது முதல் பிபிசி பாரசீக சேவைப் பணியாளர்களும் அவர்களோடு தொடர்புடையவர்களும் தொடர் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பிபிசி தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் காட்டப்பட்டுள்ள சில எடுத்துக்காட்டுகள்:

  • ஒரு பத்திரிகையாளரின் சகோதரி, எவின் சிறையில் 17 நாள்கள் அடைக்கப்பட்டார். அங்கிருந்து தமது பத்திரிகையாளர் சகோதரரை ஸ்கைப் மூலமாகத் தொடர்புகொண்டு பிபிசியில் வேலை செய்வதை நிறுத்தும்படியும் அல்லது சக ஊழியர்களை உளவு பார்க்கும்படியும் கேட்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.
  • பல பிபிசி பத்திரிகையாளர்களின் வயதான பெற்றோர் விசாரணைக்கு ஆளாயினர். குறிப்பாக பின்னிரவு நேரங்களிலும் அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.
  • கைது செய்யப்படக்கூடும் அல்லது இரானில் இருந்து வெளியேற முடியாத நிலை வரும் என்பதால் மரணத் தருவாயில் உள்ள தங்கள் பெற்றோரைக்கூட பிபிசி பணியாளர்கள் சந்திக்க முடியவில்லை.
  • பிபிசி பணியாளர்களின் மரியாதை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் மீது சமூக தளங்களில் பொய்யான தகவல்கள், தீங்கான குற்றச்சாட்டுகள் , இரானில் மரண தண்டனை தரப்படக்கூடிய பாலியல் முறைகேடுகள் நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இரான் கையெழுத்திட்டுள்ள பல சர்வதேச ஒப்பந்தங்களின் கடமைகளை மீறும் வகையில் இரான் செயல்படுவதாக பிபிசி குறிப்பிடும் சம்பவங்கள் ஐ.நா.வுக்கு அளிக்கப்பட்ட அந்தப் புகாரில் இடம் பெற்றுள்ளன.

டோனி ஹால் வேண்டுகோள்

"தங்களின் பணிகளை செய்துவரும் ஊடகவியலாளர்கள் மீது முன்பெப்போதுமில்லாத ஒட்டமொத்த தண்டனை. இது பிபிசி பாரசீக சேவை மீது மட்டுமல்ல, அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை இது. இந்த சட்ட நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என இரான் அரசை பிபிசி கேட்டுக்கொள்கிறது," என்றார் , டோனி ஹால்.

"பணியாளர்களின் சார்பாக பிபிசி தன்னிடம் உள்ள எல்லா சட்டரீதியான வழிகளையும் பயன்படுத்தி, இந்த உத்தரவை எதிர்கொள்ளும். மேலும், ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நடவடிக்கையை இரான் நிறுத்துவதற்கு, சர்வதேச சமூகங்கள் ஒன்றினைந்து தங்களின் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்."

பிபிசியின் புகார் குறித்து தனக்கு தெரியும் என்றும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இரானிய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படும் என நியூயார்க்கில் கேயி தெரிவித்தார்.

"இரான் அரசு, பிபிசி ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் துன்புறுத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்" என்றார்.

"எங்கள் வாழ்க்கையின் இருண்ட காலம்"

ரானா ரஹிம்பூர், பிபிசி பெர்ஷியன்

2013ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் எனக்கு முதல் குழந்தை பிறக்கவிருந்த நிலையில், என்னோடு இருந்த என் தாயை சந்திக்க, தந்தை டெஹ்ரானில் இருந்து லண்டன் புறப்பட்ட போது, அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இரண்டு வாரம் கழித்து என் தாய் இரான் திரும்பியபோது அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.

எங்களின் பயணத்தடை இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதை தெரிந்துகொள்ளவே எங்களுக்கு மூன்று மாதங்கள் ஆகியது. என் பெற்றோர் இதற்கான காரணத்தை அறிவதற்காக பல நாட்கள் நீதிமன்றத்தில் அலைந்தனர். அப்போதும் காரணம் தெரியவில்லை. என் தாயார், நீதிபதியின் செயலாளர் அறை முன்பு மயங்கி விழுந்த பிறகே, அவர்களுக்கான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நான் பிபிசியில் செய்தியாளராக பணிபுரிவதால்தான், விமான பயணத்திற்கு தடை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி என் தந்தையிடம் தெரிவித்தார்.

என் பெற்றோர் என்பதால், என்னைத் தடுக்கும் உரிமை அவர்களுக்கு இருப்பதாக நீதிபதி கூறினார். ஆனால், அவர்களுக்கு அவ்வாறான உரிமை கிடையாது.

ஓர் ஆண்டிற்கு பிறகு இந்த தடை நீக்கப்பட்டது. ஆனால், அந்த இருண்ட காலத்தில் இருந்து வெளியே வர எங்களுக்கு அதிக்காலம் ஆனது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்