''எங்கள் நிலத்தை ரோஹிஞ்சாக்கள் ஆக்கிரமித்துள்ளனர்''- அமைதி இழக்கும் வங்கதேசத்தினர்

ரோஹிஞ்சாக்கள்

பட மூலாதாரம், EPA

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவத்சவா
    • பதவி, பிபிசி இந்தி

மியான்மரில் இருந்து தப்பித்து வந்துள்ள பெரும் எண்ணிக்கையிலான ரோஹிஞ்சா அகதிகளால், வங்கதேசத்தின் சுற்றுச்சூழல் சமநிலையில் பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கவலைகள் எழுந்துள்ளன.

கடந்த ஒன்றாரை மாதத்தில் மியான்மரில் இருந்து ரோஹிஞ்சா மக்கள் இடம்பெயர்ந்தது, உலகின் மிகப்பெரிய அகதிகள் பிரச்சனையில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

உதவிகளை எதிர்பார்த்து காக்ஸ் பஜார் பகுதியில் காத்திருக்கும் நான்கு லட்சம் ரோஹிஞ்சாக்களுக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் உதவிகளை வழங்கி வருகின்றன.

மறுபக்கம், வங்கதேசத்தின் அழகிய மாகாணமாக இப்பகுதியின் சுற்றுச்சூழல் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. அகதிகள் முகாம்களில் தங்கியிருப்பவர்களும் சுற்றுச்சூழல் விஷயத்தைக் கருத்தில் கொண்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு வேறு வழியே இல்லை.

ரோஹிஞ்சா அகதி
படக்குறிப்பு, அமீர் அகமது

"இங்குக் கழிவறைகள் இல்லை. குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் கூட இல்லை. பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்கியிருக்கிறோம். நாங்கள் வேறு இடத்திற்குச் செல்ல அதிகாரிகள் காலக்கெடு விதித்துள்ளனர். நாங்கள் செல்லுகிறோம். ஆனால், இந்தக் காட்டில் நாங்கள் எங்கு வசிப்பது?" என்கிறார் கபுடலாங்கில் வசிக்கும் ரோஹிஞ்சா அகதி அமீர் அகமது.

மலைச் சரிவுகளில் புதிது புதிதாக அகதிகளின் குடியிருப்புகள் முளைத்துள்ள. ரோஹிஞ்சாக்கள் வாழ்வதற்காக, விவசாய நிலத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது நிலச்சரிவு மற்றும் சூறாவளிகளுக்கு வாய்ப்புள்ள பகுதிகளாகும்.

ரோஹிஞ்சா அகதி

இரவு பகலாக நிவாரண பணியில் ஈடுபட்டு வரும் மாவட்ட தலைமை அதிகாரி சைப்-உல்-இஸ்லாம் கூறுகையில், "இங்குப் பல ரோஹிஞ்சாக்கள் வாழ்கின்றனர். இது ஒரு கடினமான சூழ்நிலை. எங்களது வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டிவிட்டு அங்கு வசிக்கின்றனர். ரோஹிஞ்சாக்களுக்கு இரண்டாயிரம் ஹெக்டேர் நிலத்தினை அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், அவர்கள் காடுகளை அழிப்பதால், சுற்றுச்சுழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

வங்கதேசத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய பகுதிகளில் காக்ஸ் பஜாரும் ஒன்றாகும். ஏற்கனவே இங்குப் பல ரோஹிஞ்சா அகதிகள் வந்திருக்கின்றனர்.

சைப்-உல்-இஸ்லாம்
படக்குறிப்பு, சைப்-உல்-இஸ்லாம்

அகதிகளுக்கு நிலத்தை ஒதுக்குவதில் வங்கதேச அரசு போராடிவரும் நிலையில், உள்ளூர் மக்கள் பொறுமையை இழந்து வருவது போல தெரிகிறது.

காக்ஸ் பஜாரின் உள்ளூவாசியான கலிப்லூதீன்,"ரோஹிஞ்சா மக்கள் இப்பகுதியில் எல்லா இடங்களிலும் பரவியுள்ளனர். எங்களது சொந்த விவசாய நிலங்களை கூட ஆக்கிரமித்துள்ளனர். மோசமான சுகாதார வசதிகளால் இப்பகுதி முழுவதிலும் துர்நாற்றம் வீசுகிறது. எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை" என்கிறார்.

இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றது. ரோஹிஞ்சாக்கள் மருத்துவமனையில் இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகின்றனர்.

ரோஹிஞ்சா

இப்பிரச்சனை பெரியதாக இருக்கலாம் என வங்கதேச அரசும் உணர்ந்துள்ளது.

"அதிகளவிலான மக்களால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம். ஆனால், மனிதநேயமே முக்கியமானது" என்கிறார் வங்கதேச சட்ட அமைச்சர் அனிசுல் ஹக்.

நாடற்ற வீடற்ற இம்மக்களுக்கு உணவு, உடை மற்றும் தங்குமிடமே முதன்மையானது. நிச்சயமாகச் சுற்றுச்சுழல் அவர்களின் கடைசி முன்னுரிமையாக இருக்கும். ஆனால், சுற்றுச்சூழல் சமநிலையை பேணிகாப்பது அரசுக்கு மிகப்பெரிய பணியாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்