புதிய தேர்தல் சட்டம்: பாகிஸ்தானில் வெடிக்கும் சர்ச்சை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் (பி.எம்.எல் - என்) தலைவராக அமர அனுமதித்து வழிவகை செய்யும் புதிய தேர்தல் சட்டத்தால், பாகிஸ்தானில் சர்ச்சை உருவாகியுள்ளது.

பி.எம்.எல் -என் கட்சியினர்

பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP/Getty Images

படக்குறிப்பு, நவாஸ் ஷரீஃப் ராஜினாமாவை தொடர்ந்து, ஷாகித் காகான் அப்பாஸி புதிய இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகலாம் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டுவந்ததற்காக பி.எம்.எல்-என் கட்சி, எதிர்கட்சிகளால் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகிறது.

இதற்கிடையே, முகமது நபிகளே, இறைவனின் கடைசி தூதுவர் என்ற தங்களின் நம்பிக்கைக்கு முரணாக இந்த சட்டதிருத்தம் உள்ளது என சில எதிர்கட்சிகளும், செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தது?

தேர்தல் சட்டம் 2017, பாராளுமன்றத்தின் கீழ் அவையில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி, எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது, உடனடியாக அதிபர் மம்நூன் ஹுச்சைன் அதில் கையெழுத்துமிட்டார். இந்த சட்டம், கடந்த செப்டம்பரில் செனட்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய சட்டம், ராணுவ அதிகாரிகளை தவிர்த்து, பாகிஸ்தானின் அனைத்து குடிமகன்களும், ஒரு அரசியல் கட்சியின் எந்த பதவியிலும் இருக்க அனுமதிக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதி உள்ளவர் மட்டுமே, அரசியல் கட்சிகளில் தலைமை பதவிகளை வகிக்க முடியும் என்ற பழைய சட்டத்தின் விதிமுறைகளை புதிய சட்டத்தின் 203 உல்கூறு தளர்த்துகிறது.

புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தால், நவாஸ் ஷெரீஃப் மீண்டும் பி.எ.எல்-என் கட்சிக்கு தலைமை வகிக்க வழிவந்துள்ளது.

கடந்த ஜூலை 28 ஆம் தேதி, பனாமா பேப்பர் ஊழல் வழக்கின் தீர்ப்பில், நவாஸ் ஷெரீஃப், எந்த பொது பணிகளிலும், பதவி வகிக்க முடியாது என கூறி, பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்தது. அதை தொடர்ந்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஷெரீஃப், தற்போது ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

காணொளிக் குறிப்பு, நவாஸ் ஷெரீஃபின் இடத்துக்கான இடைத்தேர்தல்

புதிய சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து, அக்டோபர் மூன்றாம் தேதி, ஆளும் பி.எம்.எல் -என் கட்சி மீண்டும், நவஸ் ஷெரீஃபை கட்சியின் தலைவராக்கியுள்ளது.

ஏன் இது நடக்கிறது?

இதில் சர்ச்சை உருவாக காரணம் என்னவென்றால், இந்த புதிய சட்டம், `உண்மைக்கு மாறானவர்` என குறிப்பிடப்படும் `தனி மனிதருக்கு` (நவாஸ் ஷெரீஃப்) பலனளிக்கும் வகையில் அமைந்துள்ளது என பாகிஸ்தான் தெஹரீக்க இன்சாஃப், பாகிஸ்தான் பீப்பிள் பார்ட்டி ஆகியவை தெரிவிக்கின்றன. இந்த சட்டம், அரசியலமைப்பு உணர்விற்கு எதிரானது என விவரிக்கும் அவர்கள், இந்த மாற்றம் திரும்பப்பெறப்பட்டு, மீண்டும் பழைய முறைக்கு மாற்றப்பட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, இஸ்லாமிய கட்சிகள், இந்த புதிய சட்டத்தின், வேறு ஒரு பிரிவினுள் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகளுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. தேர்தலில் போட்டியிருவதற்காக விண்ணப்பங்களை சமர்பிக்கும் போது,முகமது நபிகள் தான், இறைவனின் கடைசி தூதுவர் என்ற தமது நம்பிக்கையை விளக்கும் வகையில், வேட்பாளர்கள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழியின் ஒரு உட்கூறை அரசு மாற்றி அமைத்துவிட்டது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய சட்டத்தின் ஏ விண்ணப்பத்தில், நபித்துவத்தை குறித்த பத்தியில், வேட்பாளர்கள், `நான் சத்தியம் செய்கிறேன்` என கூறுவதை மாற்றி, `நான் அறிவிக்கிறேன்` என கொண்டுவரப்படுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

அக்டோபர் 4ஆம் தேதி, பாராளுமன்ற சபாநாயகர் அயஸ் சாதிக் கூறுகையில், இதை ஒரு எழுத்துப்பிழை என குறிப்பிட்டார்.

பிரதமர் நவாஷ் ஷெரீஃப்பை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது.

பட மூலாதாரம், Sean Gallup

படக்குறிப்பு, பிரதமர் நவாஷ் ஷெரீஃப்பை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது.

எதிர்கட்சிகளின் தீவிர விமர்சனத்திற்கு பிறகு, நபிகள் குறித்த உட்கூறை மீண்டும் பழைய வாக்கியங்களுக்கு மாற்றும் சட்ட திருத்தத்தை பாராளுமன்றம் ஏற்றுகொண்டது.

எதிர்விளைவு என்ன?

அரசியலமைப்பின் பிரிவு 62 மற்றும் 63 கீழ், உச்சநீதிமன்றம் நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்ததை, துணை அரசியலமைப்பு சட்டத்தால் மாற்ற முடியாது என எதிர்கட்சிகள் நம்புவதாக, ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் தெஹரீக்க இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், நாட்டின் ஜனநாயகத்தில் இது `கருப்பு நாள்` என விவரித்தார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ` அரசியல் ரீதியாக நவஸ் ஷெரீஃபை காப்பாற்றுவதற்காக, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் என்ற பெயரில் கேலிக்கூத்து நிகழ்ந்துள்ளது. ஊழல் கும்பல் ஆள்வதை நாடு ஒரு போதும் அனுமதிக்காது` என பதிவிட்டுள்ளார்.

முட்டஹீடா கொவுமி இயக்கத்தின் உறுப்பினரான இக்பால் காத்ரி கூறுகையில்,` சட்டத்தின் 203 உட்கூறை, பி.எம்.எல் -என் கட்சி நீக்கவில்லை என்றால், விரலாறு அதை மன்னிக்காது. ஒரு மோசடியாளர் எவ்வாறு, அரசியல் கட்சியின் தலைவராக முடியும்`, என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்லாமிற்கு ஆதரவான உருது பத்திரிக்கையான உம்மத், பி.எம்.எல் -என் கட்சியும், அரசும், `வெளிநாட்டு சக்திகளையும், மேற்கத்திய நாடுகளையும் திருப்தி படுத்தவே` இதை செய்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளது.

காணொளிக் குறிப்பு, தென்னாப்பிரிக்கா அதிபருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு

அடுத்தது என்ன நடக்கும்?

ஆங்கில பத்திரிக்கையான `தி நேஷன்` கருத்துப்படி, ஷெரீஃப் மீண்டும் கட்சி தலைவராக வருவது என்பது `எந்த மாற்றத்தையும் கொண்டுவராது` என்றுள்ளது. `அரசு அதிகாரங்களில் அமர, நவாஸ் ஷெரீஃப் இன்னும் தடுக்கப்பட்டே உள்ளார். அவர் `தலைவர்` என்ற பட்டம் இல்லாமலேயே ஏற்கனவே அக்கட்சியில் உண்மைத் தலைவராகவே இருந்து வருகிறார். பி.எம்.எல் -என் கட்சியின் வெற்றி என்பது `குறுகிய காலத்திற்கே` என்று கூறியுள்ளது.

இதனிடையே, அவாமி முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான ஷேக் ரஷித் அஹமத், நவாஸ் ஷெரீஃப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது, `அரசியலமைப்பிற்கு எதிரானது` என்று, உச்சநீதிமன்ரத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நவாஸ் ஷெரீஃப் தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இங்கிலாந்தில், புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியுடன் ஒரு மாத காலம் தங்கி இருந்துவிட்டு, செப்டம்பர் இறுதியில் தான், நவாஸ் மீண்டும் பாகிஸ்தானிற்கு வந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :