காணாமல் போன எம்.எச் 370 விமான மர்மம்: கைவிரித்த கடைசி விசாரணை அறிக்கை

பட மூலாதாரம், AFP/Getty
காணாமல் போன மலேசியாவின் எம்.எச் 370 விமானம் குறித்த கடைசிகட்ட அறிக்கையை சமர்ப்பித்த ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள், அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது, சிந்திக்க கூட முடியாத விஷயம் என்று தெரிவித்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த போது மாயமானது.
1,046 நாட்களுக்கு பின்பு, மலேசியா மற்றும் சீனாவுடன் இணைந்து நடந்த தேடுதல் முயற்சி ஜனவரியில் கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலிய தேடுதல் அதிகாரிகள், விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனது, "ஆழ்ந்த வருத்தத்திற்கு உரியது" என்றனர்.
"நாள்தோறும் 10 லட்சம் மக்கள் விமானங்களில் பயணிக்கையில், ஒரு பெரிய விமானம் காணாமல் போனதும், அந்த விமானத்திற்கு, பயணிகளுக்கும் என்ன ஆனது என்பதே, இத்தகைய நவீன விமான காலகட்டத்தில், உலகிற்கு தெரியாமல் போனதும், கிட்டத்தட்ட சிந்திக்க முடியாத, சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புத்துறை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
"உலகளவில் நூற்றுக்கணக்கானோர் சிறப்பாக தேடுதல் முயற்சி செய்தும், விமானத்தை கண்டறிய முடியவில்லை" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், AFP/Getty Images
இந்த கடைசி அறிக்கை, போயிங் 777 ரக விமானத்தை தேட, டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற பணிகளில், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் முன்பு குறிப்பிடப்பட்டு இருந்த இடத்தில் இருந்து, 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் வடக்கில் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து வரலற்றிலேயே இந்த தேடுதல் பணிதான் மிகவும் பெரிய பரப்பளவிலும், ஆழ்கடலிலும் நடைபெற்றது.
முதல்நிலையில் 52 நாட்கள் நடைபெற்ற தேடுதல் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தேடுபவர்கள் கடல்பரப்பில் 12 ஆயிரம் சதுர கிலோ மீட்டரையும் கடந்தும் விமானத்தை தேடினர்.
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், எம்.எச் 370 விமானத்தின் பாகங்கள் என சந்தேகப்படக்கூடிய கழிவுகள், இந்திய பெருங்கடல் தீவுகளிலும், ஆப்பிரிக்க கடலின் கிழக்கு பகுதியிலும் கரை ஒதுங்கின.
கழிவுகளின் நகர்வு மாதிரி மற்றும் செயற்கைகோள் தகவல்களை ஆராய்ந்த பின்பு, தேடுதல் குழு, விமானத்தின் தற்போது யூகிக்கப்பட்ட இடத்தை குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், எம்.எச்.370 விமானத்தின் இருப்பிடம் குறித்த புரிதல், `முன்பை விட தற்போது நன்றாக உள்ளது` என தேடுதல் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசு, `நம்பகமான` தடயங்கள் மட்டுமே, உடனடியாக தேடுதலை தொடர வழிவகை செய்யும் என தெரிவித்துள்ளது.
மலேசிய அரசு, விமானம் மாயமானதை சுற்றியுள்ள சூழல் குறித்த விசாரணையை தொடர்கிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












