கனடாவின் இடதுசாரிக் கட்சித் தலைவராக சீக்கியர் தேர்வு

பட மூலாதாரம், Reuters
சீக்கியரான ஜக்மீட் சிங் கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் (என்.டி.பி) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் இவர் கட்சியை வழிநடத்துவார்.
இடதுசாரி கட்சியான இந்தக் கட்சியில் நடந்த தலைவருக்கான தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மூவரை வென்று உறுதியான வெற்றி பெற்ற முப்பது எட்டு வயதான ஜக்மீட் சிங்தான், கனடாவில் ஒரு பெரிய கட்சியை வழிநடத்தும் முதல் சிறுபான்மை இனத்தவர் ஆவார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலில் ஜக்மீட் சிங் 53.6 சதவிகித வாக்குகளை பெற்றார்.
இந்தப் போட்டி எங்கள் கட்சியின் உற்சாகத்தை புதுப்பித்துள்ளது என்ற கூறிய சிங், இந்த வெற்றியை தனக்கான நம்பமுடியாத பெரும் மரியாதை என்று வர்ணித்துள்ளார்.
2015-ம் தேர்தலில் இந்த கட்சி 59 தொகுதிகளை இழந்தது. வலுவிழந்திருக்கும் இந்தக் கட்சியை மீண்டும் ஸ்திரப்படுத்துவதுதான் சிங்கின் முன்னால் இருக்கும் பெரும் சவால்.
பரவிய வீடியோ... வென்ற சிங்
வைரலாக பரவிய ஒரு வீடியோதான் ஜக்மீட்டின் இந்த வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.
பிரசாரத்தின் போது கோபமாக இடையூறு செய்த ஒருவருக்கு எதிர்வினையாற்றினார் சிங். இது வீடியோ வடிவில் பரவலாக பரவி ஜக்மீட்டுக்கு நற்பெயர் வாங்கி தந்தது.
கனடா நாடாளுமன்றத்தில் அவரது கட்சி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுன்றத்தில், புதிய ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 44.
கனடாவில் ஆட்சியை இந்தக் கட்சி என்றுமே கைப்பற்றியதில்லை என்றாலும், 2011-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான தொகுதிகளை கைப்பற்றி, வரலாற்று வெற்றியை பெற்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமர்ந்தது.
ஆனால், அடுத்துவந்த 2015-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஏறத்தாழ ஒரு மில்லியன் வாக்குகளை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
பருவநிலை மாற்றம், பூர்வகுடி மக்களுடனான இணக்கம், தேர்தல் சீர்திருத்தம் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்துவார் என்று மாகாண அரசியல்வாதிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சிங் முன்னாள் குற்றவியல் அரசு வழக்கறிஞராவார். அவர் அவருடைய சிகை அலங்காரத்துக்காக, குறிப்பாக கண்ணைப் பறிக்கும் வண்ணத்துடன கூடிய தலைப்பாகை, இறுக்கமான சூட் உள்ளிட்டவற்றுக்காக பரவலாக அறியப்பட்டவர்.
புதிய ஜனநாயக கட்சியின் தலைவருக்கான தேடல் படலம், 2016- ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்த கட்சிக்கான நம்பிக்கையான தலைவர் டாம் முல்கையர் வெளியேறியதிலிருந்து தொடங்கியது.
கனடாவில் அடுத்த பொது தேர்தல் 2019-ம் ஆண்டு நடக்கவுள்ளது.
பிற செய்திகள்:
- 'தூய்மை இந்தியா' திட்டம்: அவலம் குறையாத துப்புரவு பணியாளர் வாழ்க்கை
- கிம் ஜாங் -நாம் கொலை: குற்றம் செய்யவில்லை என இரு பெண்களும் மறுப்பு
- 360 டிகிரியில் காணொளி: கோப்ரோ ஃப்யூஷன் கேமிராவின் அடுத்த முயற்சி
- மும்பை ரயில் நிலையங்கள் மரண பொறிகளாக மாறியது ஏன்?
- நடிகையை அழ வைத்ததால் சமூக வலைத்தளங்களில் வதைபடும் டி.ராஜேந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












