தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இத்தாலி பெண்

வெள்ளை கவுன், மூன்று அடுக்கு திருமண கேக், மணமகள் தோழிகள் மற்றும் 70 விருந்தினர்கள் கொண்ட ஒரு விழாவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார் ஒரு இத்தாலிய பெண்.

"நாம் ஒவ்வொருவரும் முதலில் நம்மை நேசிக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறுகிறார் 40 வயதான மெஸ்ஸி லாரா.

"இதனால் நீங்கள் இளவரசன் இல்லாத ஒரு தேவதைக் கதையை படைக்கலாம்" என்று கூறும் அவர் ஒரு உடற்தகுதிப் பயிற்சியாளர்."

இந்தத் திருமணத்துக்கு எந்த சட்டமதிப்பும் இல்லை.

உலகம் முழுவதும் பல நாடுகளிலும் நடக்கும் தம்மைத் தாமே மணக்கும் 'சோலோகாமி' எனற சுய திருமணப் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடே லாரா திருமணம்.

இது சுய அங்கீகாரம், சுய காதல், திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு இருக்கும் சமூக அங்கீகாரத்தைத் தமக்கும் கோருதல் என்று இந்தத் திருமணத்துக்கு விளக்கம் அளிக்கிறார்கள் இத்தகைய திருமணத்தின் ஆதாரவாளர்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், தன்னுடைய 12 வருட உறவு முறிந்தபோது தனக்கு இந்த சுய திருமண யோசனை வந்தது என லாரா கூறுகிறார்.

"என் 40 ஆவது பிறந்த நாளில் என் துணையை நான் கண்டுபிடிக்கவில்லை என்றால், என்னை நானே திருமணம் செய்துகொள்வேன் என்று நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் கூறியிருந்தேன்" என்று ரிப்பிளிகா என்ற செய்தித்தாளிடம் லாரா தெரிவித்தார்.

"ஒரு நாள் எனக்கானவரை கண்டு ஒரு நல்ல வருங்காலத்தை அவருடன் இணைந்து நான் திட்டமிட முடியும் என்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன், ஆனால் என் சந்தோஷம் அவரை சார்ந்து இருக்காது என்கிறார்.

சுய திருமணம் செய்துகொண்ட முதல் இத்தாலிய பெண் தாமே என்கிறார் லாரா. என் எதிர்காலத்தை இணைத்துத் திட்டமிடக்கூடிய ஆண் ஒருவனை நான் கண்டடைந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், என் மகிழ்ச்சி அவனைச் சார்ந்திருக்காது என்கிறார் இவர்.

கடந்த மே மாதத்தில் நேபிள்ஸில் நடந்த ஒரு விழாவில், நெல்லோ ருகிரியோ என்பவர் தன்னை தானே மணந்து கொண்டார்.

ஜப்பானில், ஒரு பயண நிறுவனம் 2014ஆம் ஆண்டு ஒற்றைப் பெண்களுக்கான மணமகள் விழாவைத் துவங்கியது.

1993 ஆம் ஆண்டிலிருந்தே தன்னை தானே திருமணம் செய்துகொள்வது இருந்து வருகிறது. இது பல புத்தகங்கள் உருவாக வித்திட்டது. மேலும் பாலியல் உறவு, நகரம் மற்றும் மகிழ்ச்சி தொடர்பான பல கதைப் பொருளாகவும் இருந்தது.

அமெரிக்காவில், "ஐ மாரிட் மி" என்ற ஒரு வலைத்தளம் சுயதிருமணம் தொடர்பான தகவல்களை வழங்குகிறது. கனடாவில், ஒரு வருடத்திற்கும் மேலாக இயங்கும் "மேரி யுவர்செல்ஃப் வான்கூவர் " என்ற ஒரு நிறுவனம், சுய திருமணங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருவதற்குக் காரணம், திருமணம் செய்யாத நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே என்று கூறியுள்ளது.

ஒருவர் மட்டுமே என்பது புதிய இயல்பு. உங்கள் தனி நிலைமையை கொண்டாடுங்கள்!" என்று அது வலியுறுத்துகிறது.

ஆனால் அனைவரும் இதனை வரவேற்கவில்லை, சிலர் இதை தனி சுயமோகம் என்று விமர்சிக்கின்றனர், மற்றவர்கள் இது ஒரு அர்த்தமற்ற வேலை என்று விமர்சித்துள்ளனர்.

லாராவின் திருமண புகைப்படங்களில் வாசகங்கள் எழுதிய சிலர் "இது வருத்தத்திற்குரியது" என்றும், "நீ நல்ல நிலையில் இல்லை" என்றும், "உங்கள் மூளையில் ஏதோ கோளாறு இருக்கிறது" என்றும் தெரிவித்திருந்தனர்.

கடந்த மாதம் சுயதிருமணம் செய்து கொண்ட பிரிட்டனை சேர்ந்த தன்னார்வலரான சோஃபி டன்னர் ஒரு சிலர் தன்னை "ஒரு சோகமான பெண்ணியவாதி" என்று குறிப்பிட்ட்தாக பிபிசியிடம் தெரிவித்தார் .

மற்றவர்கள் தன்னை பற்றி தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் புறம்தள்ளிவிட்டு தன்னுடைய புன்னைகையை யாராலும் அணைக்க முடியாது என்கிறார் லாரா.

ஆனால் சுயதிருமணம் என்பது அனைவருக்கும் பொருந்தக்கூடியது அல்ல என ஊடக நேர்காணல்களில் அவர் ஒப்புக்கொண்டார். உங்களை நீங்களே திருமணம் செய்து கொள்ள, உங்களுக்கு தேவை பணம், உங்களை சுற்றியுள்ளவர்களின் ஆதரவு, எல்லாவற்றிற்கும் மேலாக கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் மட்டுமே என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

  • பிபிசி தமிழ் முகநூல்
  • பிபிசி தமிழ் ட்விட்டர்
  • பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
  • பிபிசி தமிழ் யு டியூப்