You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக, முழுநேர ஆளுநராக, பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தற்போது அசாம் மாநில ஆளுநராக இருந்துவருகிறார்.
சனிக்கிழமை காலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து புதிய ஆளுநர்களை நியமித்தார்.
அதன்படி தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தும் அருணாச்சல பிரதேசத்தின் ஆளுநராக பி.டி. மிஸ்ராவும், பிகார் ஆளுநராக சத்ய பால் மாலிக்கும், அசாமின் ஆளுநராக ஜகதீஷ் முகியும் மேகாலயாவின் ஆளுநராக கங்கா பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதல் பொறுப்பாக கவனித்துவந்தார்.
தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர்.
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவர் அசாம் ஆளுநராக இருந்துவருகிறார்.
தமிழக ஆளுனராக இருந்த ரோசைய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் முடிவடைந்ததையடுத்து, மகாராஷ்டிராவின் ஆளுநராக இருந்த சி. வித்யாசாகர் ராவுக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
இதற்குப் பிறகு, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமான நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின்போது வித்யாசாகர் ராவின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. தமிழகத்திற்கு என தனியாக ஆளுநர் நியமிக்கப்படாதது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
யார் இந்த பன்வாரிலால் புரோஹித்?
1940ஆம் ஆண்டு, ஏப்ரல் 16-ஆம் தேதி பன்வாரிலால் அப்போதைய விதர்பா பகுதியில் பிறந்தார். அவரது முதலாவது அரசியல் பயணம் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியில் தொடங்கியது.
பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தபோது இந்திரா காந்தி தலைமையில் இயங்கிய கட்சியில் சேர்ந்தார்.
1978ஆம் ஆண்டில் நாக்பூர் கிழக்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980ஆம் ஆண்டில் நாக்பூர் தெற்கு தொகுதியில் மீண்டும் சட்டப்பேரவைக்கு தேர்வான அவர், 1982ஆம் ஆண்டு, மகராஷ்டிர அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிசை மேம்பாடு, வீட்டுவசதித் துறை அமைச்சரானார்.
1984 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் எம்.பி. ஆனார். பின்னர் 1989 லும் எம்.பி.ஆனார்.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்ட பாஜக முயன்றபோது அதில் ஆர்வம் கொண்டு, பாஜகவில் சேர்ந்தார்.
1991 மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் தத்தா மேகேவிடம் தோல்வியடைந்தார்.
மீண்டும் 1996ஆம் ஆண்டில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1999ஆம் ஆண்டில் மகராஷ்டிராவை சேர்ந்த பிரமோத் மகாஜனுக்கு கட்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து பாஜகவில் இருந்து விலகினார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் ராம்டெக் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
2003ஆம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து விலகி "விதர்பா ராஜ்ய கட்சி" என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். 2004ஆம் ஆண்டில் நாக்பூர் தொகுதி மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டார்.
2009ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் அக்கட்சி வேட்பாளராக மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டார். அப்போதும் காங்கிரஸ் வேட்பாளர் விலாஸ் முட்டெம்வாரிடம் அவர் தோல்வியுற்றார்.
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்ட்டார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :