பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்திய ஜெனரல்

    • எழுதியவர், ரெஹான் ஃபஜல்
    • பதவி, பிபிசி

1971 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி, பாகிஸ்தான் ஜெனரல் ஏ.ஏ.கே. நியாஜி டாக்காவில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சரணடைந்தவுடன் இந்திய வீரர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

தனது படைப்பிரிவினருடன் ஜென்ரல் சகத் சிங்

பட மூலாதாரம், Gen Sagat Singh Family

படக்குறிப்பு, தனது படைப்பிரிவினருடன் ஜென்ரல் சகத் சிங்

அப்போது கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட கல் ஒன்றால் ஜெனரல் நியாஸி காயமடைந்தார். மிகுந்த பிரயாசையுடன் நியாஸி காருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஜெனரல் சகத் சிங்கின் ஏ.சி.சியாக இருந்தவரும் பின்னர் லெப்டினென்ட் ஜெனரலாக பதவி வகித்தவருமான ஜென்ரல் ரண்தீர் சிங் நினைவுகூர்கிறார், "நாங்கள் டாக்காவிற்கு வந்தபோது, நகர மக்கள் அனைவரும் தெருக்களில் இருந்தார்கள். சாலையின் இருபுறங்களில் எங்கள் வீரர்கள் நின்றிருந்தாலும், மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை."

1971 போரில் நியாஸி சரணடைந்தபோது அவருக்கு பின்னால் நிற்கும் ஜென்ரல் சகத் சிங்

பட மூலாதாரம், Gen JS Arora Family

படக்குறிப்பு, 1971 போரில் நியாஸி சரணடைந்தபோது அவருக்கு பின்னால் நிற்கும் ஜென்ரல் சகத் சிங்

பதவி உயர்வு

ரண்தீர் சிங்கின் கூற்றுப்படி, "அவருடைய ஆயுதங்களுக்கு பெண்கள் பூத்தூவி வரவேற்றார்கள். வீடுகளை இந்திய வீரர்களுக்காக திறந்துவிட்டார்கள். சரணடையும் நிகழ்வு தொடங்கியதும், ஆகாசவாணியின் செய்தியாளர் சுர்ஜீத் சென், கையில் ஒரு மைக்ரோபோனுடன் மேஜைக்கு கீழே அமர்ந்துவிட்டார்."

ஆவணங்களில் கையெழுத்திடும் வேளையில் தன்னிடம் பேனா இல்லை என்று நியாஸி கூறினார். அதைக் கேட்டவுடன் சுர்ஜீத் சென் தனது பேனாவை அவருக்கு கொடுத்தார்

1961 ல் பிரிகேடியர் பதவி வழங்கப்பட்டபோது ஜெனரல் சகத் சிங்கின் ராணுவ வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஆக்ராவில் இருந்த 50 பாராசூட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகித்தார். ஆனால் அவர் பாரசூட் வீரர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் சகத் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேஜர் ஜெனரல் வி.கே.சிங் கூறுகிறார் "நாற்பது வயதுக்கும் அதிகமாக இருந்த அவருக்கு பாரா பிரிகேடியின் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. பாரா பிரிகேடியர் என்ற பொறுப்பு அதுவரை பாரசூட் வீரர்களுக்கே வழங்கப்பட்டது, காலாட்படைக்கு வீரருக்கு வழங்கப்பட்டதில்லை."

தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேஜர் ஜென்ரல் பி.கே. சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்
படக்குறிப்பு, தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேஜர் ஜென்ரல் பி.கே. சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்

கோவா விடுதலை

"பிரிகேடியராக இருந்தாலும் அவர் தகுதிகாண் தேர்வுகளை நிறைவு செய்தார். பாராவின் செயல்முறை முடிந்த பிறகே அதற்கான அடையாளம் வழங்கப்படும். அப்போதுதான் பாராசூட் வீரராக அடையாளம் காண்பது சாத்தியமாகும். அவருக்கு அடையாளச் சின்னம் கிடைக்கும்வரை, படைப்பிரிவினர் தன்னை மதிக்க மாட்டார்கள் என்பதையும் சகத் சிங் அறிந்திருந்தார். விரைவில் பயிற்சியை நிறைவு செய்த அவர், நாளொன்றுக்கு இரண்டு முறை பாராசூட்டில் இருந்து குதிப்பார்."

1961 கோவா நடவடிக்கையின்போது, ஜென்ரல் சகத் சிங் 50 பாரா அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் தனக்கு வழங்கப்பட்டதைவிட பலமடங்கு அதிகமாக அவர் பணியாற்றினார். துரிதகதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, எதிர்பார்த்ததைவிட விரைவில் கோவாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததை பார்த்து அனைவரும் அதிசயத்தார்கள்.

மேஜர் ஜெனரல் வி.கே. சிங் கூறுகிறார்: "டிசம்பர் 18 ம் தேதி நடவடிக்கை தொடங்கியது. 19ஆம் தேதியன்று அவருடைய படைப்பிரிவு பனாஜியை அடைந்தது பனாஜி மக்கள் நெரிசலாக வசிக்கும் பகுதி. இரவுநேரத்தில் நடவடிக்கை எடுத்தால் உயிரிழப்பு அதிகமாகும் என்பதால் சகத் சிங் தனது படைப்பிரிவை இரவு நேரத்தில் பணியில் ஈடுபடுத்தவில்லை."

"காலையில் நதியை கடந்தார்கள். கோவா அரசு பாலங்களை எல்லாம் தகர்த்தெறிந்திருந்தது. படைவீரர்கள் நதியை நீந்திக் கடந்தனர். உள்ளூர்வாசிகளும் ராணுவத்திற்கு ஆதரவு கொடுத்தனர். 36 மணி நேரத்தில் அவர்கள் பனாஜியை கைப்பற்றினார்கள்."

ஜென்ரல் சகத் சிங்

பட மூலாதாரம், General VK Singh

படக்குறிப்பு, ஜென்ரல் சகத் சிங்

போர்ச்சுக்கலில் சுவரொட்டிகள்

1962 ஜூன் மாதத்தில் 50 பாரா படைப்பிரிவினர் கோவாவில் தங்களது நடவடிக்கையை முடித்துவிட்டு ஆக்ராவுக்கு திரும்பிவிட்டார்கள். அப்போது ஆக்ராவில் இருக்கும் பிரபல ஹோட்டல் கிளார்க்ஸில் ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது.

ஜெனரல் வி.கே. சிங் கூறுகிறார், "ஜெனரல் சகத் சிங் ராணுவ உடையணியாமல், சாதாரண உடையில் அங்கு சென்றிருந்தார். அங்கே சில அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருந்தனர், அவர்கள் சகத் சிங்கை உன்னிப்பாக கவனித்தார்கள். இதை ஜென்ரலும் கவனித்தார். அதில் இருந்த ஒருவர் சகத் சிங்கிடம் வந்து கேட்டார், நீங்கள் பிரிகேடியர் சகத் சிங் தானே?"

"ஆம் நான்தான் சகத் சிங். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர்கள் அளித்த பதில் ஆச்சரியம் அளித்தது. 'நாங்கள் போர்த்துகலில் இருந்துவருகிறோம். அங்கு பல இடங்களில் உங்கள் புகைப்படம் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. உங்களை பிடித்துக்கொடுத்தால் பத்தாயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று வெளிநாட்டவர் பதிலளித்தார்.

"சரி நீங்கள் விரும்பினால் நான் உங்களுடன் வருகிறேன் என்றார் ஜென்ரல் சகத் சிங். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த அமெரிக்கப் பயணி, நாங்கள் மீண்டும் போர்த்துகல் செல்லவில்லை என்றார்."

ஜெனரல் சகத் சிங் மவுண்டன் பிரிவின் 17ஆம் படைப்பிரிவுக்கு கட்டளை பொது அதிகாரி (GOC) ஆனார். அவர் இந்த பதவியில் இருந்தபோது, நாதுலாவில் சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே ஒரு பெரிய மோதல் ஏற்பட்டது.

சீனாவுடன் போர்

1962க்கு பிறகு முதல்முறையாக சீனாவுக்கு சமமாக சண்டையிடுவதோடு, அவர்கள் மீது கடுமையான தாக்குதலையும் நடத்தலாம் என்பதை ஜெனரல் சகத் சிங் நிரூபித்துக் காட்டினார்.

ஜெனரல் வி.கே.சிங் கூறுகிறார், "அந்த சமயத்தில் அவர் அங்கு பணியில் இருந்தது எதிர்பாராத ஆச்சரியம். இந்தியா மற்றும் சீனாவுக்கான எல்லைப்பகுதி குறிக்கப்படவேண்டும் என்று ஜெனரல் அரோராவிடம் ஜெனரல் சகத் சிங் தெரிவித்தார். மேலும், எல்லைப் பகுதிக்கு நேரடியாக செல்லப்போவதாக சொன்ன அவர், சீனா எதிர்க்காவிட்டால் அதையே எல்லை என்று என்றும் சொன்னார்."

"எல்லையில் அவர் பணியை தொடங்கியதும் சீன தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. சீன வீரர்கள் முன்னேறினார்கள். கர்னல் ராய் சிங், கிரேனடியர்களின் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார். அவர் பதுங்குகுழிக்கு வெளியே வந்து சீன தளபதியிடம் பேச ஆரம்பித்த சமயத்தில் சீன வீரர்கள் துப்பாக்கி சூட்டை தொடங்கினார்கள். கர்னல் ராய் சிங் மீது தோட்டாக்கள் பாய அவர் அங்கேயே வீழ்ந்தார்."

பங்களாதேஷுக்கான போருக்கு பிறகு வீரர்களுடன் சகத் சிங்

பட மூலாதாரம், Gen Randhir Sinh

படக்குறிப்பு, பங்களாதேஷுக்கான போருக்கு பிறகு வீரர்களுடன் சகத் சிங்

"கோபமடைந்த இந்திய வீரர்கள் தங்கள் பதுங்குகுழிகளிலிருந்து வெளியே வந்து சீன வீரர்களைத் தாக்கினார்கள். நடுத்தரமான பீரங்கியை கொண்டு ஜெனரல் சகத் சிங் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பல சீன வீரர்கள் இறந்தனர்."

"போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபோது, நீங்கள் எங்களைத் தாக்கினீர்கள் என்று சீனர்கள் சொன்னார்கள். ஒருவித்ததில் அவர்கள் சொன்னது சரிதான். இந்திய வீரர்களின் சடலங்கள் அனைத்தும் சீன எல்லைக்குள் இருந்தது. தேவையிலாமல் சண்டையை உருவாக்கிவிட்டீர்கள் என்று பிறகு சகத் சிங்கின் அதிகாரி அவரை கடிந்துக்கொண்டார்."

"கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்தனர், 65 பேர் உயிரிழந்தனர், சீனத் தரப்பில் கிட்டத்தட்ட 300 பேர் பாதிப்படைந்தார்கள். 1962 போருக்கு பிறகு சீன வீரர்கள் பற்றி இந்திய வீரர்களிடம் நிலவிய அச்ச உணர்வை போக்கினார் ஜெனரல் சகத் சிங் என்பதே இதில் முக்கிய அம்சம். சீன வீரர்களை எதிர்க்கமுடியும் என்ற நம்பிக்கை இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்டது. முதல் முறையாக எங்களால் சீனர்கள் குருதி சிந்தியதை பார்த்தோம்."

1970 நவம்பரில், பிராதானப் படைகளின் நான்காவது பிரிவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றது, ஜென்ரல் சகத் சிங்கின் ராணுவ வாழ்க்கையின் பொன்னான தருணம். அதனாலேயே அவர் 1971 பங்களாதேஷ் போரில் குறிப்ப்பிடத்தக்க பங்காற்றமுடிந்தது.

ஜெனரல் ரண்தீர் சிங் சொல்கிறார்: "அகர்தலா வந்த சகத் சிங் அங்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டார். 1400 கிலோமீட்டர் தொலைவுக்கு அகன்ற பாதை இருந்தது. அனைத்தையும் சரிசெய்ய அவர் தேவையான முயற்சிகளை எடுத்தார்".

"பல பொறியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலமும் எங்களுக்கு சாதகமாக இருந்தது அதிர்ஷ்டம்தான். மார்ச் மாதம் முதல் பாகிஸ்தானிய ராணுவம் தனது சொந்த மக்களையே சித்திரவதையை செய்யத் தொடங்கியதால், திரிபுராவிற்கு அகதிகளாக பெருமளவிலான மக்கள் வந்தார்கள்."

மனைவி மற்றும் மகன் ரண்விஜய் சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்

பட மூலாதாரம், Gen Sagat Singh Family

படக்குறிப்பு, மனைவி மற்றும் மகன் ரண்விஜய் சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்

"அகதிகளின் உதவியுடன், பொறியாளர்கள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் வீரர்கள் அங்கு வரவிருந்தார்கள் என்பதையும், சுமார் 30 ஆயிரம் டன் ராணுவ உபகரணங்களும், தளவாடங்களும் அங்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த்தையும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்காக 5000 வாகனங்கள் மற்றும் 400 கழுதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கு ஒற்றை சாலை மட்டுமே இருந்த்து, பாலம் மிகவும் பலவீனமாக இருந்தது."

பறக்கும் ஜென்ரல்

போர் நடைபெற்ற சமயத்தில் ஜெனரல் சகத் சிங், விமானத்தில் பறக்கும் ஜென்ரல் (Flying General) என்ற செல்லப் பெயரால் அறியப்பட்டார். காலை ஆறு மணிக்கெல்லாம் ஹெலிகாப்டரில் கிளம்பிவிடுவார் சகத் சிங் என்று சொல்கிறார் அவரது ஏ.டி.சி லெப்டினென்ட் ஜெனரல் ரண்தீர் சிங்.

அவருக்கு தேவையான கோல்ட் காபியையும் சாண்ட்விச்சையும் நான் ஒரு பையில் கொண்டு செல்வேன். சண்டை நடந்துக் கொண்டிருக்கும் இட்த்திற்கு மேல் ஹெலிகாப்டரில் செல்வார். சில சமயங்களில் சண்டை நடக்கும் இடத்திலேயே இறங்கிவிடுவார். மாலையில் இருள் கவிந்த பிறகே அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி 'ஆபரேஷன்' அறைக்கு சென்றுவிடுவார்."

ஒருமுறை அவர் ஹெலிகாப்டரில் சென்றுக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் வீரர்கள் ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஜென்ரல் சகத் சிங்கின் ஹெலிகாப்டரை தாக்கிய தோட்டாக்கள்

பட மூலாதாரம், Randhir Sinh

படக்குறிப்பு, ஜென்ரல் சகத் சிங்கின் ஹெலிகாப்டரை தாக்கிய தோட்டாக்கள்

ஜெனரல் ரண்தீர் சிங் கூறுகிறார்: "தரையிறங்க சாத்தியமான இடத்தை ஆய்வு செய்ய என்பதைப் பார்க்க விரும்பினார் ஜென்ரல் சகத் சிங். நாங்கள் மேகனா ஆற்றையொட்டியே சென்று கொண்டிருந்தோம், ஆஷுகஞ்ச் பாலம் அருகே ஹெலிகாப்டரை தாக்கிய தோட்டாவால் விமானஓட்டி காயமடைந்தார்.

எனக்கு பின்னால் அமர்ந்திருந்தவர் மீது தாக்கிய தோட்டா ரத்தத்தையும், சதைத் துண்டுகளும் தெறித்தது, ஜெனரல் சகத் சிங்கின் நெற்றியிலும் காயம் ஏற்பட்டது."

"உடனே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த துணை விமானஓட்டி விமானத்தை அகர்தலாவுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார். ஹெலிகாப்டரில் 64 ஓட்டைகள் இருந்தன. அந்த ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய சகத் சிங் வேறொரு ஹெலிகாப்டரில் ஏறி ஆய்வுகளை மேற்கொள்ள சென்றுவிட்டார்."

ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மேகனா ஆற்றில் நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட பாலம் ஒன்றை உருவாக்கியதற்காக ஜெனரல் சாகத் சிங் அனைவராலும் பாராட்டப்பட்டார். இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷ் போரில் ஜென்ரல் சகத் சிங்கின் தலைமையில் பணிபுரிந்த லெஃப்டினெண்ட் ஜென்ரல் ஓ.பி.கெளஷிக் கூறுகிறார், "அப்போது எம்.ஐ 4 ரக ஹெலிகாப்டர்கள் இருந்தன. இரவு நேரத்தில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதிகள் கிடையாது. ஆனால் அதிகளவிலான வீரர்கள் மேக்னா நதியை கடக்கவேண்டும் என்பதற்காக, இரவிலும் தரையிறங்குவதற்கு ஏற்ற ஒளிபொருந்திய ஹெலிபேட்களை அமைக்க சகத் சிங் உத்தரவிட்டார்.

காலியான பால் புட்டிகளில் மண்ணெய் ஊற்றி விளக்காக பயன்படுத்தினோம். மண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் அசாத்தியமான விஷயத்தை நாங்கள் சாத்தியமாக்கினோம். இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

எம்.ஐ 4 ஹெலிகாப்டரில் எட்டு சிப்பாய்கள் அமரலாம். நாங்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான முறை ஹெலிக்காப்டரை பயன்படுத்தி முழு படைப்பிரிவையும் மேக்னா நதியை கடக்கச் செய்தோம்.

இதில் குறிப்பிடத்தக்க சுவையான ஒரு பின்னணியும் இருக்கிறது. மேற்கு படைப்பிரிவின் தலைவர் ஜென்ரல் ஜக்கி அரோரா, மேக்னா நதியை தாண்டவேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார். படை முழுவதும் நதியைத் தாண்டியபிறகு அரோராவின் போன் வந்தது. விஷயத்தை தெரிந்துக் கொண்ட அவர், சகத் சிங்குடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

படையணியினரின் நலம் விசாரிக்கும் ஜென்ரல் சகத் சிங்

பட மூலாதாரம், Gen Sagat Singh Family

படக்குறிப்பு, படையணியினரின் நலம் விசாரிக்கும் ஜென்ரல் சகத் சிங்

தகுதிக்கேற்ற முழு மரியாதை கிடைக்கவில்லை

ஜெனரல் கெளஷிக் கூறுகிறார், "நான் அந்த நேரத்தில் ஜெனரல் சகத் சிங்கிற்கு அருகில் அமர்ந்திருந்தேன், கொல்கத்தாவில் இருந்து தொலைபேசியில் அழைத்த ராணுவ தளபதி அரோரா, ஏன் மேக்னா நதியை தாண்டி சென்றீர்கள் என்று கேட்டார். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைவிட மேலும் அதிகமாக செய்திருக்கிறேன் என்று பதிலுரைத்தார் ஜென்ரல் சகத் சிங்."

"இந்த பதில் அரோராவை திருப்திபடுத்தவில்லை, நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டே நான் செயல்படுகிறேன். நம் வீரர்கள் மேக்னா ஆற்றை மட்டும் கடக்கவில்லை, டாக்காவின் புறநகர்ப்பகுதிக்கும் சென்றுவிட்டார்கள் என்றார் சகத் சிங்."

'நீங்கள் மேலும் முன்னேறவேண்டாம், வீரர்களை திரும்பச் சொல்லுங்கள் என்று ஜெனரல் அரோரா உத்தரவிட்டார்".

"என் படைவீரர்களில் யாரும் திரும்பி வரமாட்டார்கள் என்று துணிச்சலும் பதிலளித்தார் ஜென்ரல் சகத் சிங். நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், டெல்லிக்கு இந்த விஷயத்தை கொண்டு செல்லுங்கள் என்று உரத்த குரலில் பதிலளித்த சகத் சிங் தொலைபேசியை வைத்துவிட்டார்".

"நமது ராணுவ வீரர்களை திரும்ப அழைத்துச் செல்லும்படி என்னிடம் கூறினார். அது என் சடலத்தின் மீதுதான் அது நடக்கும் என்று கோபத்துடன் வெடித்தார்."

இப்படி வேறு யாரும் செய்யாத பல சாகசங்களை துணிச்சலுடன் செய்த ஜென்ரல் சகத் சிங்கிற்கு வீரத்திற்கான எந்த விருதும் வழங்கப்படவில்லை. இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

மேஜர் ஜென்ரல் வி.கே.சிங் சொல்கிறார், "1971ஆம் ஆண்டு போரில் மிக சிறப்பாக செயல்பட்டவருக்கு வீர விருது எதுவும் வழங்காதது வருத்தத்திற்குரியது. பலருக்கு வீர் சக்ர விருது, மஹாவீர் சக்ர விருது வழங்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய வீர சாகசங்களை துணிச்சலுடன் செய்த ஜென்ரல் சகத் சிங்கிற்கு வீர விருது எதுவும் வழங்கப்படவில்லை."

"அதுமட்டுமா? அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. ராணுவத் தளபதியாக இல்லாவிட்டாலும், ராணுவ கமாண்டராகவாவது அவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அவர் தனது மேலதிகாரிகளிடம் மோதல் போக்கை கொண்டிருந்ததே விருதும், பதவி உயர்வும் கிடைக்காததற்கு காரணம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது."

பேத்தி மேக்னா சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்

பட மூலாதாரம், Meghna Singh

படக்குறிப்பு, பேத்தி மேக்னா சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்

கூட்டத்திற்குள் புகுந்துவிடும் ஜெனரல்

பணிஓய்வுக்கு பிறகு ஜென்ரல் சகத் சிங் ஜெய்பூரில் வசித்தார்.

அவருடைய பேத்தி மேக்னா சிங் கூறுகிறார், "கூட்டத்திலும் கண்டுப்பிடித்துவிடக்கூடியவர் என் தாத்தா. ஆறடி மூன்று அங்குல உயரமும், வெண்கல குரலை கொண்ட கம்பீரமான அவர் அனைவருடனும் எளிமையாக பழகக்கூடியவர். விடுதியில் தங்கி படித்துவந்த நாங்கள் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போது, எங்கள் பண்ணைத்தோட்டத்தில் இருந்த பறித்த பழங்களை அவரே வெட்டி, தட்டில் வைத்து கொண்டுவந்து தருவார். ஜெய்பூரில் பிட்ஸா ஹட் திறந்தபோது எங்களை அங்கே கூட்டிச் சென்றார்."

இந்தியாவின் துணிச்சலான ஜென்ரல் என்று ஜெனரல் சாகத் சிங் கருதப்படுகிறார். அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பல ராணுவ நடவடிக்கைகளில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், வழக்கமாக ஒரு ராணுவ அதிகாரி செய்யும் கடமைகளைவிட மிக அதிக வேலை செய்தார்.

அமெரிக்க ராணுவத்தில் ஜென்ரல் பைடனுக்கும், ஜெர்மன் ராணுவத்தில் ரோமெலுக்கும் புகழப்பட்ட அளவு இந்திய ராணுவத்தில் புகழ் பெற்றவர் ஜென்ரல் சகத் சிங்.

இந்திய பாகிக்ஸ்தான் போர், 1971

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பாகிக்ஸ்தான் போர், 1971

ஜென்ரல் சகத் சிங்குடன் பணியாற்றிய ஓ.பி கெளஷிக் கூறுகிறார், "நான் பல போர்களில் பங்கெடுத்திருக்கிறேன். 1962இல் இந்திய-சீன யுத்தத்தில் கேப்டனாக பங்கேற்றேன். அதன்பிறகு 1965 மற்றும் 1971 போரிலும் பங்களித்தேன். சியாச்சின் மற்றும் காஷ்மீரிலும் பணிபுரிந்திருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் இந்திய ராணுவத்தின் சிறந்த கள அதிகாரியாக ஜென்ரல் சகத் சிங் பணியாற்றினார் என்பதை உறுதியாக சொல்வேன்".

"திறமையறிந்து வேலைகளை பிரித்துக் கொடுப்பதில் வல்லவரான ஜென்ரல் சகத் சிங், பணிகளை மையப்படுத்தாமல் அனைவருக்கும் பிரித்துக்கொடுப்பார். அனைவரையும் அரவணைத்து செல்லும் சகத் சிங், தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மீது அதீத நம்பிக்கை வைப்பார். ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்கு பிறரை பொறுப்பாக்காமல் தன்னையே காரணமாக சொல்வார்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :