வாகனம் ஓட்டுவதற்கு தடை நீக்கப்படுவதால சௌதி பெண்கள் கொண்டாட்டம்
2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் சௌதி அரேபிய பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கும் ஆணையை மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் அல் வெளியிட்டிருப்பது தொடர்பாக சௌதி மக்கள் பதிவிடும் மறுமொழிகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன.

இந்த முடிவு அறிவிக்கப்பட்டவுடன், பல்வேறு ஹேஷ்டேக்குகள் தொடங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான டுவிட் பதிவுகள், நினைவுகள் மற்றும் ஜிஃப் படங்கள் பகிரப்பட்டுள்ளன.
பெண் வாகன ஓட்டுநர்களால் ஏற்படக்கூடிய "ஆபத்துக்கள்" தொடக்க மறுமொழிகளில் சுட்டிக்காட்டப்பட்டன. ஆனால் இவைகளுக்கு பல பெண்கள் உறுதியான மறுமொழியை வழங்கியுள்ளனர்.
இந்த ஆணைக்கு எதிராக "பெண்கள் வாகனம் ஓட்டுவதை மக்கள் வெறுக்கிறார்கள்" என்ற பொருளிலான பிற ஹேஷ்டேக்குகளும் தொடங்கப்பட்டு பரவலாக பகிரப்பட்டன.
இந்த ஹேஷ்டேக்கை தொடங்கியவரை கேலி செய்து பெண் பயனர்கள் குறிப்பு அனுப்பியதும் எதிராக கருத்து பதிவிட்டவர்கள் பின்வாங்கிவிட்டனர்.
நாட்டை உண்மையாகவே ஆட்சி செய்பவராக தற்போது கருதப்படும் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 2030 ஆம் ஆண்டு பொருளாதார திட்டம் என்ற தன்னுடைய தொலைநோக்கு திட்டத்தின் பகுதியாக பெண்களுக்கு அதிக சுதந்திரங்களையும், சமூகத்தில் அதிக பங்காற்ற அனுமதியைம் வழங்குவதற்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருக்கும் தடையை நீக்குவது தொடர்பாக நீண்டகாலமாக சௌதி அதிகாரிகள் வாக்குறுதி அளித்து வந்துள்ளனர்.
இந்த தடையை புறக்கணித்து வாகனம் ஓட்டிய பல பெண் செயற்பாட்டாளர்கள் கடந்த காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலாசார செயல்பாடுகள் மற்றும் பொது பொழுதுபோக்குகளை நாட்டில் வளர்ப்பதற்கு சௌதி அரேபியாவின் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வருகின்ற இந்த முயற்சிகள், பிற்போக்கு மற்றும் மத அமைப்புக்களால் எதிர்க்கப்படுவதாக தோன்றுகிறது.
"நாம் வென்றோம் பெண்களே!"
இந்த முடிவால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஆயிரக்கணக்கான பெண்கள், சௌதி அரேபிய மன்னரையும், பட்டத்து இளவரசரின் படங்களையும் பதிவிட்டுள்ளனர். "பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு வெற்றியை மன்னர் கொண்டு வந்துள்ளார்", "நாட்டிலுள்ள பெண்களுக்கு பாராட்டுக்கள்" என்ற பொருளில் அமைந்த ஹேஷ்டேக்குகளோடு அவர்களுக்கு நன்றியும் கூறியுள்ளனர்.
இந்த முடிவை கொண்டாடி பெண்கள் நடனம் ஆடுவதைப் போல ஜிஃப் படங்களையும் பலர் பகிர்ந்துள்னர்.
@O_Wedd என்று பதிவிட்டுள்ளவர் இரண்டு படங்களை டுவிட் செய்துள்ளார். அதில் ஒன்று வேகமாக சென்று கொண்டிருக்கும் காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து வெற்றியின் சமிக்கையை ஒரு பெண் காட்டுவது போல உள்ளது. இன்னொரு புகைப்படத்தில் பம்பர் காரில் இரண்டு பெண்கள் அமர்ந்திருக்கின்றனர். அதில், "நாங்கள் அடிமட்டத்தில் இருந்து தொடங்கினோம்... இப்போது நாங்கள் இங்குள்ளோம்" என்று எழுதப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், FAYEZ NURELDINE/AFP/Getty Images
பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு .இருந்த தடையை கடந்த காலத்தில் உடைத்து அதிக உரிமைகளுக்காக போராடிய பெண் செயற்பாட்டாளர்களுக்கு பிற பெண்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.
@Yara_Albashair என்பவர் ஆங்கிலத்தில் இவ்வாறு டுவிட் செய்துள்ளார்: "இந்த சட்டத்தை ஏதிர்த்தோர் மற்றும் இது நடைபெறப்போவதில்லை என்று கூறியோரே பாருங்கள். "நாம் வென்றோம் பெண்களே!" என்று பதிவிட்டுள்ளார்.
ஃபேஸ்புக்கில் சூத் அல் ஷாமாரி என்பவர், பெண் ஆர்வலர்களின் "போராட்டம் மற்றும் செயல்பாட்டின் ஆன்மாவை" பாராட்டியுள்ளார். கடந்த காலத்தில் இந்த தடையை உடைத்த பெண்களின் புகைப்படங்கள் பெருமளவு பதிவிடப்பட்டுள்ளன.
நாட்டுக்குள் வாகனம் ஓட்டியதற்கு இரண்டுமுறை கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர், லௌஜியன் ஹாத்லெவுல், "கடவுளுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் கொண்டாடப்பட்ட தேசிய நாள் கொண்டாட்டங்களின்போது, தலைநகரான ரியாதில் மிக உயர்ந்த கட்டடங்களில் முன்நிறுத்தப்பட்ட சௌதி தடகள வீராங்கனைகளின் ஒரு புகைப்படத்தை சௌதி பெண் தொழில்முனைவர் இஸ்ரா கராட்லி பதிவிட்டுள்ளார். "பல தசாப்தங்களாக பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்த பின்னர், அவள்தான் நம்முடைய பெருமை என்பதால் இன்று நாம் அவளை கொண்டாடுகிறோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், AFP/Getty Images
கடந்த கால செயற்பாட்டாளர்களையும் பாராட்டியுள்ள எதிரணி அறிஞர் மடாவி அல்-ரஸீத், "பெண்கள் மற்றும் ஆண்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள உரிமைகளில்" இருந்து திசை திருப்பும் முடிவாக இது இருந்துவிடக்கூடாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.
"தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் ஒரு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால், நாம் பயன்பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண் வாகன ஓட்டுநர்கள்
பெண்கள் வாகனம் ஓட்ட தொடங்கினால் ஏற்படும் "ஆபத்துக்களை" சுட்டிக்காட்டியும், விரைவில் சௌதி தெருக்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தும், பல படங்களை பயனாளர்களில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
@kxa4ever என்ற முகவரியில் பதிவிட்டுள்ளவர், "பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல்" என்ற ஹேஷ்டேக்கோடு பிற வாகனங்களின் இடையில் சொருகி நிறுத்தப்பட்ட படத்தை பதிவிட்டுள்ளார். அதில், "முட்டாள், நான்தான் முதலில் இங்கு இருந்தேன்" என்று எழுதப்பட்டுள்ளது.
இதே நபர் "ஹலோ, டாடி, இங்கு வாங்க, இந்த வீடு என்னை மோதிவிட்டது" என்று எழுதப்பட்டு, சுவரில் மோதி நிற்கும் காரின் இன்னொரு படத்தையும் பதிவிட்டுள்ளார்.
பல பதிவுகளில் கார் மோதுகின்ற படங்கள்தான் பதிவிடப்பட்டுள்ளன.
மறுப்பு
ஆனால், "பெண்கள் வாகனம் ஓட்டுவதை மக்கள் வெறுக்கின்றனர்", "என்னுடைய வீட்டு பெண் வாகனம் ஓட்டமாட்டார்" என்ற பொருளில் அமைந்த ஹேக்டேகோடு, எதிரான கருத்தை பதிவிடப்பட்ட எல்லா முயற்சிகளும் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளன. எதிரான கருத்துக்களை கேலி செய்வது தற்போதைய பாணியாகிவிட்டது.

பட மூலாதாரம், LOUAI BESHARA/AFP/Getty Images
"என்னுடைய வீட்டு பெண் வாகனம் ஓட்டமாட்டார்" என்ற பொருளிலான ஹேஷ்டேக், பெண்கள் நான்கில் ஒரு பகுதி மூளையை கொண்டிருப்பதால் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிகக்கூடாது என்று கூறிய மதகுரு ஒருவரை அரசு இந்த வாரத்தின் தொடக்கத்தில் இடைநீக்கம் செய்தபோது தொடங்கப்பட்டது.
"நீங்கள் வாகனம் ஓட்டுவீர்கள் ஆனால், திரும்பி வரமாட்டீர்கள்" என்ற பொருளிலான ஹேஸ்டேக்கும் எதிரான பரப்புரை மேற்கொண்டது.
ஆனால், இந்த குறிப்புக்களை எல்லாம், சௌதி பெண்கள் கேலி செய்தனர். சென்று கொண்டிருக்கும் வாகனத்தை விட்டுவிட்டு, அது சலையில் ஊர்ந்து செல்லும் வேளையில், பிறரை கவரும் வகையில் பெண் நடந்து செல்லுகின்ற ஜிஃப் படங்கள் பல பதிவிடப்பட்டுள்ளன.
@Miss_Hilalia என்பவர் பெண்ணொருவர் ஒரு கரை ஓட்டி கொண்டிருக்கும் வேளையில் தன்னுடைய தலையை ஆட்டிகொண்டே செல்வதுபோல படத்தை பதிவிட்டு, அதில், "நாங்கள் வருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்,
பிற செய்திகள்
- ஜெயலலிதா கை ரேகையை ஏற்றுக்கொண்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
- அழிவுப்பாதைக்கு வழி அமைத்துவிட்டார் அருண் ஜேட்லி: யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு
- சினிமா விமர்சனம்: ஸ்பைடர்
- இலங்கை: கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை
- பிரதமர் வீடு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் மீது வழக்கு?
- வட கொரியா பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
- முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை
மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












