சீனாவில் வாட்ஸப் சேவையில் தடங்கல்; கம்யூனிஸ்ட் மாநாட்டுக்கு முன் நடவடிக்கை

அடுத்த மாதம் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடக்கவுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக வாட்ஸப் தகவல் பறிமாற்ற செயலி சீனாவில் சரிவர செயல்படுவதில்லை.

மொபைல் மூலம் செய்தி பறிமாறிக்கொள்ளும் சீனர்கள்.

பட மூலாதாரம், Getty Images

இந்த மாநாட்டை ஒட்டி சீன அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

வாட்சப் சேவை பல நேரங்களில் வருவதும் போவதுமாக உள்ளது. இது போன்ற நேரங்களில் விபிஎன்-ஐ (வர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்) பயன்படுத்தி மட்டுமே வாட்சப்பை பயன்படுத்த முடிகிறது. விபிஎன் வழியாக மட்டுமே சீன அரசு உருவாக்கிய இணையத் தீயரணைத் (ஃபைர்வால்) தாண்ட முடியும்.

சீனப் பெருநிலப் பகுதியில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரே ஊடகம் வாட்சப் மட்டுமே. ஃபேஸ்புக்கும், படங்களைப் பகிரந்துகொள்வதற்கான இன்ஸ்டாகிராம் சேவையும் அங்கே கிடைப்பதில்லை.

சேவையில் தடங்கல்

ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே வாட்ஸப் சேவை அவ்வப்போது துண்டிக்கப்படுவதாக சீனாவில் இருந்து செயல்படும் பிபிசி செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

சீனாவில் இருந்து அந்நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுக்கு படங்களையோ, வீடியோவையோ வாட்சப் மூலம் அனுப்ப முடியவில்லை என்பது அச் செயலியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனை மூலம் தெரியவருகிறது.

வாட்சப் வீடியோ சாட் மற்றும் படங்கள் பகிர்வது ஆகியவை மீது கடந்த ஜூலை மாதம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிறகு தளர்த்தப்பட்டன.

"மாநாட்டுக்கு முன்னதாக எப்போதும் எல்லா கட்டுப்பாடுகளும் தீவிரமாகவே இருக்கும்.

மாநாட்டில் எந்த இடர்ப்பாடுகளும் வரக்கூடாது என்பதற்காகவும், மாநாடு நடக்கும்போது நல்ல சமூகச் சூழல் நிலவவேண்டும் என்பதற்காகவும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன," என்கிறார் சீனத் தலைவர்கள் பலருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆலோசகராகச் செயல்படும் ராபர்ட் லாரண்ஸ் குன்.

சமூக ஊடகக் குறியீடுகள்.

பட மூலாதாரம், Getty Images

மாநாட்டுக்குப் பின் தளர்த்தப்படுமா?

ஆனால், கடந்த காலத்தில் நடந்ததைப் போல இந்த முறை மாநாடு முடிந்ததும் இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை; பல ஆய்வாளர்கள் இந்த முறை அப்படித் தளர்த்தப்படும் என்று நம்பவில்லை என்கிறார் குன்.

இத் தடங்கல்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது வாட்சப்.

சீன இணைய வெளியை ஆளும் 'வீ சாட்'

"எனினும் வாட்சப்பை முடக்குவது சீன மக்களிடம் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாது. அவர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை.

'வீ சாட்' எனப்படும் செயலியே சீனாவின் இணைய வெளியை ஆள்கிறது. வீ சாட் பயன்படுத்தாத எவரையும் இங்கே பார்ப்பது அரிது," என்கிறார் பிபிசியின் சீனச் செய்தியாளர் ஸ்டீபன் மெக்டொன்னல்.

படம் பகிர்வது, செய்தி படிப்பது, அரட்டை அடிப்பது என்று பலவகை தகவல் பறிமாற்றங்களுக்கும் பயன்படும் 'வீ சாட்' சீன மக்களின் வாழ்வில் மையமாக உள்ளது.

இதன் மூலமாக சீன மக்கள் எல்லோரையும் கண்காணிப்பது சீன அரசுக்கு எளிது. அதே அளவுக்கு கண்காணிப்பது வாட்சப் மூலம் சாத்தியமில்லை என்கிறார் அவர்.

எனவே, முக்கியமான இந்த மாநாட்டுக்கு முன்பாக சீனாவில் சமூக வலைத்தளங்களை தணிக்கை செய்யும் பொறுப்பில் உள்ளவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.

தங்களால் கட்டுப்படுத்த முடியாத ஏதேனும் ஒரு செயலியைப் பயன்படுத்தி யாராவது ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்துவிடுவார்களோ, அதிபர் ஜி ஜின்பிங்கின் கேலியான படம் ஒன்றைப் பகிர்ந்துவிடுவார்களோ என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்கிறார் மெக்டொன்னல்.

வாட்சப் செயலி செய்திகளை சங்கேதக் குறியீடுகளாக மாற்றி அனுப்புகிறது. அனுப்புகிறவரும் பெறுகிறர்களும் மட்டுமே செய்திகளைப் பெறமுடியும்.

இது போன்ற சங்கேதக் குறிகளாக மாற்றி செய்திகளைப் பறிமாறுவதை சீனா ஏற்றுக்கொள்வதில்லை என்று பிபிசியிடம் கூறினார் லாங்ரிதம் என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆசியா பசிபிக் பிராந்தியத் துணைத் தலைவர் பில் டைலர் மவுண்ட் ஃபோர்டு.

தணிக்கையில் தவறியதற்கு அபராதம்

இதனிடையே, சீனாவில் இணையத்தில் தெரியும் தகவல்களை சரிவர தணிக்கை செய்யவில்லை என்பதற்காக டென்சென்ட், பைடு, வெய்போ போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதித்துள்ளது சீனா.

பொய்ச் செய்திகள், ஆபாசம் மற்றும் இனங்களுக்கு இடையிலான பதற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தும் தகவல்களை தணிக்கை செய்யத் தவறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :