You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
’’பாகிஸ்தான் தற்போது டெரரிஸ்தான்’’: ஐ.நா.வில் இந்திய அதிகாரி சீற்றம்
ஐ.நா பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஆற்றிய உரைக்கு இந்தியா மிகவும் சீற்றத்துடன் பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அபாஸி தனது உரையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் போர் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதாகவும் இந்தியா மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
சனிக்கிழமையன்று ஐ.நாவில் இந்தியா உரையாற்ற உள்ளது. ஆனால், பதில் கூறும் உரிமையை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு உடனடியாக ஒரு சீற்றமான பதிலைத் தந்தது.
சமீப காலங்களில் முக்கியமாக காஷ்மீர் விவகாரத்தில் அணு ஆயுதத் திறன் கொண்ட இந்த அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.
1947 ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றவுடன் இருநாடுகளும் மூன்று போர்களை சந்தித்துள்ளன. அதில் இரண்டு சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியை மையப்படுத்தி நடந்தவை ஆகும்.
'அசாதாரணம்'
ஆஃப்கன் போர் குறித்து உரையாற்றிய அபாஸி, மோதலுக்கு பலிகடா ஆக பாகிஸ்தான் மறுத்துவிட்டது என்றார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய அவர், டெல்லியின் ஆட்சியை எதிர்த்துப் போராடும் பொதுமக்களுக்கு எதிராக மிகப்பெரிய மற்றும் கண்மூடித்தனமான பலத்தை இந்தியா பிரயோகிக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
''பெல்லட் குண்டுகளால் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் பார்வையையும், உடலுறுப்பையும் இழந்துள்ளனர். இவையும், இவை போன்ற கொடுஞ்செயல்களும் போர்க்குற்றமாகின்றன. இவை ஜெனீவா உடன்படிக்கையை மீறுவதாகவும் உள்ளன,'' என்றார் அவர்.
காஷ்மீர் விவகாரத்தில் நடக்கும் பிரச்சனைகளை கண்காணிக்க சிறப்பு தூதர் ஒருவரை ஐ.நா நியமிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.
பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு
பதில் கூறும் உரிமையை பயன்படுத்தி உடனடியாக அவருக்குப் பதிலளித்த ஐ.நாவுக்கான இந்தியாவின் முதன்மைச் செயலாளர் ஈனம் கம்பிர் ''ஒசாமா பின்லேடனை காப்பாற்றிய ஒரு நாடு, முல்லா ஒமருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு தாங்கள் பாதிக்கப்பட்டுவிட்டோம் என்று கூறுவது அசாதாரணமானது'' என்றார்.
''பாகிஸ்தான் தற்போது தற்போது ஒரு டெரரிஸ்தான். உலகளாவிய தீவிரவாதத்தை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யும் தொழில் அங்கே உண்டு,'' என்று அவர் கூறினார்.
''தனது அண்டை நாடுகளின் பகுதிகளை ஆக்கிரமிக்க தீய முயற்சிகளை மேற்கொள்கிறது'' என்றும் அவர் பாகிஸ்தானைக் குற்றம் சாட்டினார்.
வியாழக்கிழமை, இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவத்தில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :