You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டனில் வாகனங்களை இயக்கும் உரிமையை இழந்தது ஊபர் நிறுவனம்
லண்டனில் ஊபர் தனியார் வாடகைக் கார் நிறுவனம் வாகனங்களை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என லண்டன் போக்குவரத்துக்குப் பொறுப்பான டி.எல்.எஃப் தெரிவித்துள்ளது.
இந்த பயண செயலி நிறுவனம், தனியார் வாகன சேவையை நடத்த தகுதியற்றது என டிஎல்எஃப் கூறியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான விளைவுகளைக் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக உறுதிப்படுத்தியுள்ள ஊபர், மிகவும் வெளிப்படையான செயல்பாட்டை உலகுக்கு வெளிக்காட்டியதாகவும், நவீன செயல்பாடுடைய நிறுவனங்களுக்கு லண்டன் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
லண்டன் நகரில் சுமார் 35 லட்சம் மக்களும் 40 ஆயிரம் வாகன ஓட்டிகளும் ஊபர் செயலியை பயன்படுத்துகின்றனர்.
ஊபர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் "லண்டன் போக்குவரத்து துறையான டி.எல்.ஃப் மற்றும் லண்டன் மேயரும், பயன்பாட்டாளர்களின் வாய்ப்புகளை குறைக்க முயலும் சிறிய குழுவின் பக்கம் சாய்ந்துவிட்டனர்" என கூறியுள்ளது.
அந்நிறுவனம், "லண்டன் நகர் விசாலமான இடமாக இல்லாமல், புதுமையான நிறுவனங்களுக்கு மிகவும் சுருக்கமான நகராக உள்ளது" என கூறியுள்ளது.
இந்த செயலி, லண்டனில் தடை செய்யப்படலாம் என்றும் யூகங்கள் உள்ளன.
ஊபருக்கு போட்டியாக உள்ள நிறுவனங்கள், அது நெரிசல் நிறைந்த சாலைகள் உருவாகுவதற்கு காரணமாவதோடு, அதன் வாகன ஓட்டிகளை திறம்பட ஒழுங்குபடுத்துவது இல்லை என கூறுகின்றன.
பகுத்தாய்வு: பிபிசி போக்குவரத்து செய்தியாளர் டாம் எட்வர்ட்ஸ்
ஊபர் செயலி, லண்டன் நகரின் சிறிய ரக வாடகை கார்கள் மற்றும் டாக்ஸிக்களின் சந்தையை முழுமையாக மாற்றிவிட்டது. ஒரு "சீர்குலைக்கும்" தொழில்நுட்பமாக அது மிகவும் மலிவானதும், பிரபலமானதுமாக உள்ளது.
35 லட்சம் லண்டன் வாசிகளும், 40 ஆயிரம் ஓட்டுநர்களும் இந்த செயலியை பயன்படுத்துவதாக இந்த நிறுவனம் கூறினாலும், இந்த நிறுவனம் , லண்டனில் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
அதிக நெரிசல் உருவாக்குதல், பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களை சமர்பிக்க தவறுதல், ஓட்டுநர்கள் மீதுள்ள புகார்களை சரிவர விசாரிக்காமல் விடுதல் மற்றும் அதன் வாகனங்களினால் வளர்ந்து வரும் விபத்துகள் ஆகிய காரணங்களுக்காக ஊபர் குற்றம் சாட்டப்படுகிறது.
வாகன ஓட்டிகளுக்கு மிக மோசமான பணி சூழலை தருவதாக, பல ஓட்டுநர் அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் ஊபர் வந்தது முதல் அதோடு போராடி வரும், கருப்பு கார்கள் அமைப்பு கூட, கடைசி நிமிடம் வரை, வெற்றி பெற்றுவிட்டதை உறுதிசெய்ய முடியவில்லை என்கிறது.
அதனால், இது ஊபர் நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சி மட்டுமல்லாமல், உலகில் அது இயங்கி வரும் பல நாடுகளில் இந்த முடிவு எதிரொலிக்கும்.
இந்த முடிவு மேல்முறையீடு செய்யப்பட்டு, நிச்சயமாக நீதிமன்றத்திற்கு செல்லும் என்பதால், லண்டனில் ஊபர் செயலிக்கு முடிவு வந்துவிட்டதாக தற்போதுவரை எடுத்துகொள்ள முடியாது.
லண்டன் மேயர் சாதிக் கான், தனது அறிக்கையில், "டி.எல்.ஃப் எடுத்த முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். லண்டன்வாசிகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்பட்சத்தில், டி.எல்.எப் தொடர்ந்து ஊபருக்கு உரிமம் அளித்தால் , அது தவறான முடிவாகிவிடும்" என்றார்.
உரிமம் பெற்ற டாக்ஸி ஓட்டுநர்கள் அமைப்பின் பொது செயலாளரான மெக்நமாரா கூறுகையில், "ஊபருக்கு மீண்டும் உரிமம் அளிக்க கூடாது என்ற சரியான முடிவை மேயர் எடுத்துள்ளார் என்றார்.
"ஊபர் நிறுவனம், டி.எல்.ஃப் மற்றும் மேயருக்கு எதிராக கொடுமையான சட்ட சவாலை சந்திக்கும் என எதிர்பார்ப்பதோடு, தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவையே நீதிமன்றம் ஆதரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்கிறார்.
"இந்த ஒழுக்ககேடான நிறுவனத்திற்கு, லண்டன் சாலைகளில் இடமில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேல்முறையீடு செய்ய, ஊபருக்கு 21 நாட்கள் அவகாசம் உள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்