கூகுள் நிறுவனத்தின் தானியங்கி வாகன தொழில்நுட்பத்தை திருடவில்லை: ஊபர்

கூகுள் நிறுவனத்தின் தானியங்கி தொழில்நுட்பத்தை ஊபர் நிறுவனம் திருடிவிட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை ஊபர் நிறுவனம் உறுதியாக மறுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் கூகுள் நிறுவனத்திலிருந்து பிரிந்து சென்ற வேய்மோ என்ற நிறுவனம் ஓர் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தது.

அதில், வேய்மோ நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான ஆண்ட்ரூ லெவண்டோஸ்கி, லிடார் என்ற தானியங்கி வாகனங்களுக்கு வழிகாட்ட பயன்படுத்தப்படும் ஓர் மைய தொழில்நுட்பம் தொடர்புடைய சுமார் 14 ஆயிரம் ஆவணங்களை திருடி சென்றுவிட்டதாக அவ்வழக்கில் கூறியிருந்தது.

லெவண்டோஸ்கி ஓட்டோ என்ற நிறுவனத்தை கூட்டாக நிறுவினார்.

தானியங்கி டிரக் நிறுவனமான ஓட்டோவை ஊபர் நிறுவனம் கடந்தாண்டு சுமார் 660 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது.

இந்த சர்ச்சைக்குரிய தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு தடை உத்தரவு கேட்டு நீதிமன்றத்தில் வேய்மோ கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், தொழில்நுட்பத்திற்கு தடை உத்தரவு பிறப்பிப்பது நியாயமாக இருக்காது என ஊபர் நிறுவன தரப்பு, நீதிபதியை ஏற்க வைக்க முயற்சித்தது.

''வேய்மோவின் தடை உத்தரவு நகர்வானது தவறான முடிவு ''என்று ஊபர் தரப்பு வழக்கறிஞரான ஏங்கெல்லா பாடில்லா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

''திருடப்பட்டதாக சொல்லப்படும் 14 ஆயிரம் ஆவணங்கள் எதுவும் ஊபர் நிறுவனத்தின் கணினி சர்வர்களில் பதிவேற்றம் செய்ததற்கான எவ்வித ஆதரமும் இல்லை. மேலும், வேய்மோ நிறுவனத்தில் மல்டி லென்ஸ் லிடார் தொழில்நுட்பமானது ஊபர் நிறுவனத்தின் சிங்கிள் லென்ஸ் லிடார் தொழில்நுட்பம் போல இருப்பது என்று சொல்வது சுத்த பொய்'' என்கிறார் ஏங்கெல்லா.

ஐந்தாவது திருத்த உரிமை

கடந்த டிசம்பர் மாதம் வேய்மோ நிறுவனத்திற்கு இ மெயில் மூலம் தவறுதலாக அனுப்பட்ட ப்ளூபிரிண்ட்கள் எதிர்காலத்தில் திருடப்பட்ட வடிவமைப்புகளை பயன்படுத்த ஊபரின் திட்டங்களாக இருக்கும் என்பதை காட்டுவதாக வேய்மோ நிறுவனம் வாதிட்டது.

அதேசமயம், ஊபர் நிறுவனத்தின் சர்வர்களில் எவ்வித முக்கிய ஆவணங்களும் பதிவேற்றப்படவில்லை என்ற அந்நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்த வேய்மோ, நிறுவனத்தின் தேடுதல் என்பது இந்த சர்ச்சைகளுக்கு மையமாக இருக்கக்கூடிய லெவண்டோஸ்கி வைத்திருந்த கணினிகளுக்கு பொருந்தாது என்று சுட்டிக்காட்டியது.

சமீபத்தில் இந்த வழக்குத் தொடர்பாக தனிமையில் நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில், லெவண்டோஸ்கி தனக்கு இருக்கும் ஐந்தாவது திருத்த உரிமையை பயன்படுத்தினார்.

இந்த உரிமையின்படி, அமெரிக்க குடிமக்கள் தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்பட்சத்தில் சுய சாட்சியம் அளிக்க விடுக்கப்படும் கோரிக்கையை எதிர்க்க முடியும்.

திருடுப்போனதான சொல்லப்படும் ஆவணங்களை அடைய லெவண்டோஸ்கி உடன் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஊபர் நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார்.

''உங்களுடைய தரவுகளில் ஆவணங்கள் இல்லாவிட்டால் முதற்கட்டமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்'' என்று நீதிபதி வில்லியம் அல்சப் ஊபர் நிறுவனத்தை எச்சரித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்