டிடிவி தினகரன் ஆதரவு பெண் எம்.பி. அணி மாறினார்

அதிமுகவில் டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவாக இருந்து வந்த தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினரான வசந்தி முருகேசன், இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

http://loksabha.nic.in/

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வசந்தி முருகேசன், அதிமுகவின் ஆட்சியை கவிழ்ப்பேன் என டி.டி.வி.தினகரன் கூறியதை ஏற்க முடியவில்லை என்கிற காரணத்தால் தனது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதிமுகவின் அரசாங்கத்தை, அதிமுகவை அழிக்க முடியாது என ஜெயலலிதா கூறி வந்துள்ளதாகவும், அதனால் அதிமுகவின் ஆட்சியை அல்லது கழகத்தை அழிக்க நினைப்பவர்கள் பக்கம் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் துணை போக மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

அதனால்தான், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டதாகவும் வசந்தி முருகேசன் தெரிவித்தார்.

அதேசமயம் தன்னைப்போல டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவாக இருக்கும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் வசந்தி முருகேசன் குறிப்பிட்டார்.

அதிமுகவில் பிரதானமான தமிழக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள ஒருங்கிணைந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் பக்கமே நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிக அளவில் உள்ளனர்.

ஏற்கனவே டி.டி.வி.தினகரன் அணிக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வந்த சூழலில், தற்போது அது 7 ஆக குறைந்துள்ளது.

இதற்கிடையே டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் தகுதி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :