சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட்ட யானை மரணம்: விசாரணை குழு அமைத்த அரசு

பட மூலாதாரம், Getty Images
ஹபறன பகுதியில் சுற்றுலா பயணிகளின் வினோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த "கண்டுள" எனும் யானை திடீரென சந்தேகத்துக்குரிய வகையில் நேற்று காலை உயிரிழந்தது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா நியமித்துள்ள இந்த குழுவில் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தபத்து பணியாற்றுகின்றார்.
ஹபறன பகுதியில் சுகவீனமுற்றிருந்த இந்த யானை சிகிச்சைகளுக்காக பின்னவள யானைகளின் சரணாலயம் நோக்கி வாகனமொன்றில் கொண்டு சென்றுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மரணத்தில் சந்தேகங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ள சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர் நாயனக்க ரன்வெள்ள இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுவது அவசியமென்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சம்பந்தப்பட்ட யானை வாகனமொன்றில் கொண்டு செல்லும் போது அந்த வாகனம் கவனயீனமான முறையில் அதிக வேகமாக பயணித்துள்ளது. அப்போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாகவே சம்பந்தப்பட்ட யானை இறந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதாக நாயனக்க ரன்வெள்ள கூறியுள்ளார்,
யானையின் மரணத்திற்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்களை கண்டரிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமென்று அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த நாயனக்க ரன்வெள்ள, சம்பந்தப்பட்ட யானையை கலாச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன் மாத்திரமே அரசாங்கத்தினால் அதன் உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
ஆனால், அவர் சம்பந்தப்பட்ட யானையை சுற்றுலா நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி பணம் சம்பாதித்துள்ளதாக தெரிவித்த நாயனக்க ரன்வெள்ள, அதன் உரிமையாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












