ரோஹிஞ்சா தீவிரவாதிகளின் போர் நிறுத்தத்தை ஏற்க மியான்மர் அரசு மறுப்பு

பட மூலாதாரம், AFP
ரகைன் மாகாணத்தில்,ரோஹிஞ்சா தீவிரவாதிகள் அறிவித்த ஒருதலைப்பட்ச ஒரு மாத கால போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மியான்மர் அரசு மறுத்துள்ளது.
அரகன் ரோஹிஞ்சா சால்வேஷன் ராணுவம் (அர்சா) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ரோஹிஞ்சா தீவிரவாதிகள், போர் நிறுத்தத்தை அறிவித்ததுடன் மியான்மர் ராணுவமும் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டுமென்று என்றும் வலியுறுத்தினர்.
மியான்மர் அரசு 'பயங்கரவாதிகளுடன்' பேச்சுவார்த்தை நடத்தாது என அரசு செய்தி தொடர்பாளர் ஜாவ் ஹாட்டே கூறியுள்ளார்.
கடந்த மாதம் ரகைன் மாகாணத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து கிட்டதட்ட 294,000 ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசத்திற்கு தப்பி சென்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி போலீஸ் சாவடிகள் மீது தாக்குதல் நடத்திய அர்சா, 12 பேரை கொன்றது. இச்சம்பவம் பாதுகாப்புப் படைகளிடமிருந்து ஒரு எதிர் தாக்குதலை தூண்டியது.
மியான்மரில் வசிக்கும் நாடற்ற சிறுபான்மை இஸ்லாமிய ரோஹிஞ்சாக்கள், ரகைன் மாகாண பெளத்தர்கள் தங்கள் மீது வன்முறையை ஏவுவதாகவும், கிராமங்களை கொளுத்துவதாகவும் கூறுகிறார்கள்.
மியான்மர் அரசு இதனை மறுத்துள்ளது. தாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது.
இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தை டிவிட்டரில் அறிவித்த அர்சா, மனிதாபமான அமைப்புகள் தங்கள் உதவிப் பணிகளை வழங்கவே இதனை அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து ஞாயிறன்று டிவிட்டரில் கருத்து தெரிவித்த அரசு செய்தி தொடர்பாளர் ஜாவ் ஹாட்டே," பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கொள்கை எங்களுக்கு இல்லை"என கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













