ஃபுளோரிடாவின் தீவுகளைத் தாக்கியது இர்மா சூறாவளி
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள தீவுக்கூட்டத்தை இர்மா சூறாவளியின் மையம் தாக்கியுள்ளது.

பட மூலாதாரம், AFP
வானியல் ஆய்வாளர்கள் அதை நான்காம் வகை புயல் என்று வகைப்படுத்தியுள்ளனர். புயல்களிலேயே இராண்டாவது அதிக சக்தி வாய்ந்ததாக இவ்வகைப் புயல்கள் கருதப்படுகின்றன.
ஃபுளோரிடாவின் கல்ஃப் கோஸ்ட் கடற்கரைப் பகுதியை நோக்கி வட மேற்குத் திசையில் நகரும் முன்பு, ஃபுளோரிடா கீஸ் என்று அழைக்கப்படும் தீவுக்கூட்டத்தின் தாழ்வான பகுதிகளை அது மணிக்கு 209 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் சூறாவளியில் சிக்கிக்கொண்டால், அது உயிராபத்தை விளைவிக்கக்கூடும் என்னும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அம்மாகாணத்தில் இருந்து 63 லட்சத்துக்கும் மேலானவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கூறியிருந்தனர்.
லோயர் ஃபுளோரிடா கீஸ் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரம் இந்த சூறாவளி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நேரத்தில் அந்தத் தீவுகளில் வசிப்பது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

ஃபுளோரிடா கீஸ் தீவுகளைத் தாக்கியபின், அந்த சூறாவளியின் மையம் வடக்கு நோக்கி ஃபுளோரிடா மாகாணத்தின் பிரதான நிலப்பரப்பை அடையும்போது ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் விநியோகம் தடைபடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அங்கு சுமார் 50,000 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இத்தகைய பெரிய சூறாவளி மிகவும் அச்சத்தைத் தந்ததாகவும், இதற்காக ஒரு வார காலம் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், ஃபுளோரிடா மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் என்.பி.சி தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.
கியூபா, செயின்ட் மார்ட்டின் தீவுகள், டர்க்ஸ் மற்றும் காகோஸ் தீவுகள், பார்புடா தீவு, போர்டோ ரிகோ, பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள், அமெரிக்க வர்ஜின் தீவுகள், ஹைத்தி மற்றும் டோமினிக்க குடியரசு ஆகிய பகுதிகளும் இந்த சூறாவளியால் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













