அசல் ஓட்டுனர் உரிமம்: செவ்வாய்க்கிழமை வரை அமலுக்கு வராது என்கிறது தமிழக அரசு

அசல் ஓட்டுனர் உரிமத்தை ( ட்ரைவிங் லைசென்ஸ்) வைத்திருக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய உத்தரவை செவ்வாய்க்கிழமை வரை அமல்படுத்தப்போவதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்திருக்கிறது.

Peter Macdiarmid/Getty Images

பட மூலாதாரம், Peter Macdiarmid

படக்குறிப்பு, அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற ஆளும் அரசின் உத்தரவை எதிர்க்கட்சிகள் எதிர்த்துள்ளன

இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களை ஓட்டுபவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தங்களது அசல் ஓட்டுனர் உரிமங்களை தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை சமீபத்தில் உத்தரவிட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இருந்தபோதும் இந்த உத்தரவு கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்த தமிழக அரசு, இது தொடர்பாக பல்வேறு இடங்களில் அறிவுறுத்தல் பலகைகளையும் வைத்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு பொது நல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார்.

அசல் ஓட்டுனர் உரிமங்களை ஓட்டுனர்கள் வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதால், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரினார்.

இன்று காலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி துரைசாமி, இது நடைமுறை சாத்தியமில்லாத உத்தரவு என்று சுட்டிக்காட்டினார். அப்போது, இது தொடர்பான பொதுநல வழக்குகள் இன்றே விசாரணைக்கு வருவதால் இந்த வழக்கை சற்று ஒத்திவைக்குமாறு அரசுத் தரப்பு கோரியது.

வாகனங்கள்

பட மூலாதாரம், Oli Scarff/Getty Images)

படக்குறிப்பு, “குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் மட்டுமே அசல் உரிமங்கள் கேட்கப்படும்” - காவல்துறை

பொதுநல வழக்குகள் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், உரிமம் ரத்துசெய்யப்பட்ட பலரும் அதன் நகல்களை வைத்து வாகனங்களை இயக்குவதால்தான் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அசல் உரிமங்களை எடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கலைச் சுட்டிக்காட்டினார்.

அசல் உரிமங்களை சோதிக்க அரசு வேறு ஏற்பாடுகளை ஏன் செய்யக்கூடாது என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், ஒருவரது உரிமத்தின் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டால், அசல் உரிமத்தை எடுத்துவந்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் காண்பிக்க கால அவகாசம் வழங்கலாமே என்று கேட்டார்.

இந்த உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் செவ்வாய்க்கிழமை வரை இந்த உத்தரவு நடைமுறைக்கு வராது என்பதை போக்குவரத்துக் காவல்துறைக்குத் தெரிவிக்கும் பொறுப்பை தான் ஏற்பதாகவும் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை ஏதும் விதிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதற்கிடையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள காவல்துறை, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் மட்டுமே அசல் உரிமங்கள் கேட்கப்படும் என்றும் இதற்கென தனியான சோதனைகள் நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் உரிமங்கள் தொலைந்துவிட்டால் எளிதில் பெறுவதற்கான வழிமுறைகளையும் காவல்துறை அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :