வட கொரியாவுக்கு எதிரான எல்லா சாத்தியங்களும் தயார்: டிரம்ப்
வட கொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியிருப்பதன் மூலம் தான் தனிமைப் படுத்தப்படுத்துவதை அதிகரித்துக்கொள்ளும் என்றும், 'எல்லா சாத்தியப்பாடுகளும்' விவாத மேசை மீது தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், EPA
ஜப்பான் வான்பரப்பைக் கடந்து செல்லும் வகையில் வட கொரியா செலுத்திய ஏவுகணை பற்றிக் குறிப்பிட்ட டிரம்ப், அது அண்டை நாடுகள் மற்றும் ஐ.நா அவையை அவமதிக்கும் செயல் என்றார்.
வட கொரியாவின் ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு மேல் பறந்து சென்று வட பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.
அமெரிக்கா- தென் கொரியா சேர்ந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி தம்மைத் தூண்டியதாகவும், அது தம் மீதான படையெடுப்புக்கான ஒத்திகை என்றும் வடகொரியா குறிப்பிடுகிறது.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் அந்த ராணுவப் பயிற்சியையே சமீபத்திய பதற்றத்திற்கான காரணம் என்று கூறியுள்ளன.
வடகொரியாவின் இச்செயலைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஏவுகணை சோதனை அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றைப் புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளதாக ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார். தனது சர்வதேசக் கடமைகளை நிறைவேற்றுமாறு அவர் வட கொரியாவை வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிபரின் அறிக்கையில் "வட கொரியா வெளிப்படுத்தியுள்ள இச்செய்தி உலகத்துக்கு உரத்தும் தெளிவாகவும் கேட்டுள்ளது," என்று டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், ஐ.நாவுக்கான வட கொரியத் தூதர் ஹன் டே-சோங், "பல எச்சரிக்கைகளை மீறி, தென் கொரியாவுடன் மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சி மூலம் வட கொரியா மீதான பகை உணர்ச்சி நிரம்பிய நோக்கங்களை அமேரிக்கா வெளிப்படுத்தியுள்ளது. இந்த ராணுவப் பயிற்சிக்கு பதில் நடவடிக்கை மேற்கொள்ள எங்கள் நாட்டுக்கு உரிமை உள்ளது," என்று ஜெனீவாவில் நடந்த, ஐ.நாவின் ஆயுதத் தடுப்பு மற்றும் தவிர்ப்பு தொடர்பான மாநாடு ஒன்றில் பேசியுள்ளார்.
இதற்கு முன்னர் 1998 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் வட கொரியாவின் ஏவுகணைகள் ஜப்பான் வான்வெளியைக் கடந்து சென்றுள்ளன. ஆனால், அவை செயற்கைகோள்களை ஏவப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் என்பதால் அவற்றை ஆயுதங்கள் எனக் கூற முடியாது என்று வட கொரியா கூறியிருந்தது.
செவ்வாய்க்கிழமை வடகொரியா ஏவியது, ஒரு அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்த முதல் வட கொரிய ஏவுகணை போலத் தெரிவதாக டோக்கியோவில் இருந்து பிபிசி செய்தியாளர் ரூபர்ட் விங்ஃபீல்டு ஹயேஸ் கூறுகிறார்.
பொருளாதாரத் தடைகள் மற்றும் பலவந்த நடவடிக்கைகள் பேரழிவைத்த தவிர வேறொன்றுக்கும் இட்டுச்செல்லாது என்று கூறியுள்ளார் ரஷ்ய வெளியுறவு இணை அமைச்சர் செர்கெய் யாப்கோவ். வட கொரியா ஏவுகணை சோதனைகளையும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ராணுவ ரீதியில் பதற்றத்தை அதிகரிப்பதையும் நிறுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பதற்றம் உச்ச நிலையை அடைந்துள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் அதற்கு ஓரளவு காரணம் என்றும் சீனா கூறியுள்ளது.

வட கொரியா செலுத்திய ஏவுகணை ஹொக்கைடோ தீவுக்கு மேல் பறந்து சென்றபோது, அங்குள்ளவர்கள் உறுதியான கட்டடம் அல்லது கட்டடங்களில் அடித்தளங்களில் இருக்குமாறு, ஜப்பானிய அதிகாரிகள் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்தனர்.
ஹொக்கைடோ தீவுக்கு சமீபத்தில் அமெரிக்க மற்றும் ஜப்பானிய படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டன.
இந்த ஏவல் தங்கள் நாட்டுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசியுள்ளதாகவும், வட கொரியாவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அபே தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் ஆயுத சோதனைகள் ஐ.நா தீர்மானங்களை மீறுவதாக அமைந்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :














