தப்பியோடிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட் துபாயில் உள்ளதாகத் தகவல்

தன் மீதான அரசி மானியத் திட்டம் தொடர்பான ஊழல் புகார் மீது தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் நாட்டை விட்டுத் தப்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட், துபாயில் இருப்பதாக அவரது கட்சியினர் கூறியுள்ளனர்.

இங்லக் சின்னவாட்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இங்லக் சின்னவாட்

அவர் கடந்த வாரம் தாய்லாந்தை விட்டு வெளியேறியதாக புயே தாய் கட்சியிலுருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கின் தீர்ப்பு நாளன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், அவருடைய பிணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

ஏற்கனவே வேறு ஒரு ஊழல் வழக்கில் இருந்து தப்புவதற்காக அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான தக்சின் சின்னவாட் 2008-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தை விட்டு வெளியேறி துபாயில் வசித்து வருகிறார்.

"அவர் இங்கிருந்து கம்போடியா மூலம் சிங்கப்பூர் சென்று, சிங்கப்பூரில் இருந்து துபாய் சென்றதாகக் கேள்விப்பட்டோம். அவர் பாதுகாப்பாக அங்கு சென்றடைந்துவிட்டார்," என்று அவரது கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

தாய்லாந்து காவல் துறையின் துணைத் தலைவர் ஜெனரல் ஸ்ரீவரா ரங்சிபிராமணக்குல், இங்லக் நாட்டை விட்டு வெளியேறியதற்கான ஆதாரங்கள் இல்லையென்றும் இவ்விவகாரத்தை உன்னிப்பாக விசாரணை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

காணொளிக் குறிப்பு, தாய்லாந்து சோன்புரியில் உள்ள ஒரு நடவு வயலில் நடக்கும் எருமை விடும் திருவிழா

இங்லக்கின் இருப்பிடம் விரைவில் தெளிவாகத் தெரியும் என்று தாய்லாந்து துணைப் பிரதமர் விஷானு கிரயா -நகாம் கூறியுள்ளார்.

இந்த ஊழல் வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐம்பது வயதாகும் இங்லக் தான் ஊழல் எதிலும் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார். அரிசி மானியத் திட்ட ஊழலில் தாய்லாந்து அரசுக்கு பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.

ஆகஸ்ட் 25 அன்று இங்லக் நீதிமன்றம் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஊடகவியலாளர்கள்.
படக்குறிப்பு, ஆகஸ்ட் 25 அன்று இங்லக் நீதிமன்றம் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஊடகவியலாளர்கள்.

இரண்டு ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில் அவர் மீது குற்றம் நிரூபணம் செய்யப்பட்டால், பத்து ஆண்டுகள் சிறைக்கு செல்வதுடன் வாழ்நாள் முழுதும் அவர் அரசியலில் ஈடுபடவும் தடை விதிக்கப்படும்.

line break

இங்லக் - உயர்வும், சரிவும்

மே 2011 - இங்லக் சின்னவாட் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் ஆன சிறிது காலத்திலேயே அரிசி மானியத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

ஜனவரி 2014 - தாய்லாந்து ஊழல் தடுப்பு அதிகாரிகள் அத்திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக இங்லக்கிடம் விசாரணை நடத்தினர்.

மே 2014 - வேறு ஓர் அதிகரா துஷ்பிரயோக வழக்கில் குற்றம் நிரூபணம் ஆனதால் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி விலக வைக்கப்பட்டார்ர். சில வாரங்களில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஜனவரி 2015 - அரிசி மானியத் திட்ட ஊழல் தொடர்பாக இங்லக் ஐந்து ஆண்டுகள் அரசியலில் ஈடுபட ராணுவ அரசு தடை விதிக்கிறது. இந்த ஊழல் வழக்கின் விசாரணை தொடங்கியது.

ஆகஸ்ட் 2017 - உடல் நலமின்மையைக் காரணம் காட்டி வழக்கின் தீர்ப்பு நாளன்று நீதிமன்றம் வராமல் தவிர்க்கிறார் இங்லக் சின்னவாட். பின்னர் அவர் துபாய்க்கு தப்பியது தெரிய வந்துள்ளது.

line break

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :