அமெரிக்கா- தென்கொரியா ராணுவ ஒத்திகை: மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images
மீண்டும் வட கொரியாவை கோபமூட்டும் வகையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பயிற்சிதான் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் குவாம் தீவுகளின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்த வட கொரியா, பின்னர் அந்த முடிவிலிருந்து பின் வாங்கியது. ஆனால் தொடர்ந்து அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக அந்நாடு தெரிவித்திருந்தது.
இந்த கூட்டுப்பயிற்சிகள் `எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல` என ஏற்கனவே வடகொரியா எச்சரித்திருந்தது.
ஆனால், இது வழக்கமான பயிற்சிதான் எனவும், வடகொரியா இதனை போருக்கான பயிற்சியாக பார்க்கிறது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த கூட்டு ராணுவ ஒத்திகையில் 17,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த பயிற்சி 10 நாட்கள் நடைபெறும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு , குவாம் தீவுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா வார்த்தைப் போரில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த கூட்டுப்பயிற்சி வடகொரியாவை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் அமையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
`இந்த ராணுவ பயிற்சிகள், கொரிய தீபகற்பத்தில் இருக்கும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும். கட்டுப்படுத்த முடியாத அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும்` என வட கொரியாவின் அரச செய்தித்தாளான ரோடாங் சின்முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ராணுவ ஒத்திகையில் என்ன நடக்கிறது?
ஆண்டுக்கு இரண்டு முறை, மிக அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவத்தினர் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
`ஃபோல் ஈகிள் அல்லது கீ ரிசால்வ் ` என பெயரிடப்பட்ட ராணுவ ஒத்திகையானது வசந்த காலத்திலும், `உல்ச்சி ஃபிரீடம் கார்டியன்` என பெயரிடப்பட்ட ராணுவ ஒத்திகையானது இலையுதிர்காலத்திலும் நடைபெறும்.
இந்த ஒத்திகையானது நிலம், நீர் மற்றும் ஆகாயம் மற்றும் கணினி செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். தென்கொரியாவில் நடைபெறும் இந்த ஒத்திகையில், பயங்கரவாத மற்றும் இரசாயன தாக்குதலை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்த பயிற்சியில் பொதுவாக தென் கொரியா 50,000 வீரர்களையும், அமெரிக்கா 25,000 முதல் 50,000 வீரர்களை ஈடுபடுத்தும்.
சில நேரங்களில் இந்த இரு நாடுகளின் கூட்டாளி நாடுகளும் இந்த ராணுவ ஒத்திகையில் பங்கேற்கும். கடந்த ஆண்டு உல்ச்சி ஃபிரீடம் கார்டியன் பயிற்சியில் அமெரிக்கா, தென் கொரியா தவிர ஒன்பது நாடுகள் கலந்து கொண்டன.
ஆனால் இந்த ராணுவ ஒத்திகையானது, போருக்கான முன்னேற்பாடு என வட கொரியா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதே போல 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ ஒத்திகையின் போது, `அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள் அமைதியை குலைப்பவர்கள். இந்த நிலத்தில் போர் ஏற்பட விரும்பும் யுத்த வெறியர்கள்` என வட கொரியா விமர்சித்திருந்தது.
இது போன்ற சூழலின் போது, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் செயல்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என அடிக்கடி தெரிவிக்கும் வட கொரியா, இதனை பிரதிபலிக்கும் வகையில் ஏவுகணை சோதனைகள் நடத்துவது அல்லது படைகளை இடமாற்றம் செய்வது போன்ற செயல்கள் ஈடுபடும்.

பட மூலாதாரம், AFP/Getty Images
1953-ஆம் ஆண்டு கையெழுத்தான பரஸ்பர ராணுவ ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இந்த பயிற்சி நடத்தப்படுவதாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூறுகின்றன.
வெளியில் இருந்து தாக்குதல் நடைபெறும் போது, அதனை சமாளிக்க தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய இது போன்ற பயிற்சிகள் அவசியம் என அந்நாடுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் ராணுவ பயிற்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதா?
அரசியல் சூழலை பொறுத்து, சில நேரங்களில் இது போன்ற ராணுவ பயிற்சிகள் இரு தரப்பிற்கிடையே பிரச்சனையை அதிகரிக்கலாம்.
கடந்த 2015-ஆம் ஆண்டு உச்சகட்ட பதட்டம் நிலவிய நிலையில் நடைபெற்ற உல்ச்சி ஃபிரீடம் கார்டியன் பயிற்சியினால், தென் மற்றும் வட கொரிய நாடுகள் தங்கள் எல்லைகளை தாண்டி பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டன.
வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே அவசர பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, முன் எப்போதும் இல்லாத வகையில் ராணுவ பயிற்சியை அதிகாரிகள் அப்போது ஒத்தி வைத்தனர். பின்னர் பல நாட்களுக்கு பிறகு இந்த பயிற்சியானது மீண்டும் நடைபெற்றது.
பிற செய்திகள்:
- அச்சுறுத்தலுக்கு மத்தியில் இசை நிகழ்ச்சி நடத்திய ஆப்கன் பாடகி
- கிரிக்கெட்: இந்தியாவின் அபார வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்
- ஜீவ சமாதி அடையப்போவதாக முருகன் உண்ணாவிரதம்: சிறைத்துறையின் கருத்து என்ன?
- புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான ரகுராய்க்கு கேமராவை அறிமுகப்படுத்தியது யார்?
- ''குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்படுகிறது'': கோலி வருத்தம்
- மோதி ஆட்சியில் நடந்த பெரும் ரயில் விபத்துகள்: 'எப்போது மத்திய அரசு விழிக்கும்?' - காங்கிரஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












