பாக்தாத் முதல் பார் கவுன்சில் வரை: ஒரு பார்வையற்ற அகதியின் பயணம்

பட மூலாதாரம், Allan Hennessy
- எழுதியவர், ஜார்ஜினா ரனார்ட் மற்றும் ஹான்னா ஜெல்பர்ட்
- பதவி, பிபிசி
கடந்த மாதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது மகன் ஆலன் பட்டம் பெற்றதைப் பார்த்தபோது, ஆஃப்ரா அவர் பிறந்த தருணத்தை நினைத்துக்கொண்டார்.
"உங்கள் குழந்தை பார்வையற்றவராக இருப்பதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்," என்று அப்போது பாக்தாத்தில் உள்ள அவரின் ஒரு அண்டை வீட்டுக்காரர் கூறினார்.
அவரது மகனின் உடல் நிலை, அங்கு ஒரு விலக்கப்பட்ட விவகாரமாக இருந்ததால், அப்போது அந்நகரில் ஆஃப்ரா ஒரு பேசுபொருளாக்கப்பட்டார்.
அப்போது 1995-ஆம் ஆண்டு. இராக் அதிபராக சதாம் ஹுசைன் இருந்தார். வளைகுடா போர் முடிந்து மூன்று ஆண்டுகளே ஆகியிருந்தது. அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.
பார்வையற்ற குழந்தையாக இருந்த ஆலன் ஹென்னெஸிக்கான வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.
தற்போது கேம்பிரிட்ஜில் உள்ள தனது கல்லூரியைச் சுற்றி வரும் ஆலன் நம்பிக்கையுடனும், தெளிவாகவும் பேசுகிறார்.
"தற்போது நான் பல விதங்களில் பேசுகிறேன்," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Allan Hennessy
"இராக்கில் இருந்து யாரவது அழைத்தால் நான் 'அஸ்-சலாம்-அலைகும்' என்று அரபி மொழியில் பேசுவேன். கேம்பிரிட்ஜில் உயர் ரக, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவேன்," என்று கூறும் அவர், தன்னுடன் வசிக்கும் நண்பர்களிடம் சாதாரண பேச்சு வழக்கில் ஆங்கிலத்தில் பேசுவதாகக் கூறுகிறார்.
தற்போது 22 வயதே ஆகியிருந்தாலும், பலரும் தங்கள் வாழ்நாட்களில் சந்தித்தே இருக்காத பல தடைகளையும் அவர் தகர்த்துள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் பிறந்த ஒரு பார்வையற்ற குழந்தை எப்படி உலகின் ஒரு முன்னணி பல்கலைக்கழகத்தில் முதன்மை மாணவரானார்?
இராக்கில் ஆலனின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. ஆனால் அவரது தாத்தா ஒரு ஷேக். அவர் ஒரு வசதியான வாழ்க்கையை மட்டுமல்ல, ஆடம்பரமாகவும் வாழ்ந்தார்.
ஆனால் இராக்கிய மருத்துவமனைகளால், ஆலனுக்கு பார்வை பெறுவதற்கான நம்பிக்கையைக் கொடுக்க முடியவில்லை.
"என்னுடைய தந்தை எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக மிகவும் முயற்சி செய்தார். ஆனால் அங்கு போதிய அளவில் கண் மருத்துவ நிபுணர்கள் இல்லை. நான் எப்போதும் பார்வையற்றவனாகவே இருப்பேன் என்று அவர்கள் நினைத்தார்கள்," என்று ஆலன் கூறுகிறார்.
ஆலன் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது ஒரு வாய்ப்பு வந்தது. அவரின் தந்தையும் அதைப் பயன்படுத்திக்கொண்டார்.

பட மூலாதாரம், KARIM SAHEB/AFP/GETTY IMAGES
"தன்னுடைய கார்கள், பிற உடைமைகள், நிலத்தில் ஒரு பகுதி எனப் பலவற்றையும் எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக, என் தந்தை விற்றார். இராக்கை விட்டு மிகவும் சொற்பமான உடைமைகளுடன் நாங்கள் வெளியேறினோம்," என்று அவர் கூறுகிறார்.
அந்த வாய்ப்பு ஆலனின் இடக்கண்ணில் ஓரளவுக்கு பார்வைத் திறனை அளித்த, லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை.
"நான் பார்வை பெற்றதும் முதன் முதலாக என் தாயைப் பார்த்ததை அவர் நினைவு கூர்கிறார். அது நாங்கள் முதன் முதலாக கண்ணோடு கண்கள் பார்த்துக்கொண்ட தருணம். அவர் அப்போது கண்ணீரில் மூழ்கினார்," என்று விவரிக்கும் ஆலன், "அப்பொழுது முதல் எனக்கு இருக்கும் குறைந்த அளவிலான பார்வைத் திறனை வைத்து நான் மிளிர்ந்து கொண்டிருக்கிறேன்," என்கிறார்.
ஆலனின் தாயும், அவரின் உடன் பிறந்தவர்களும் லண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றனர். ஆனால் புலம் பெயர்ந்தவர்களாக அவர்களின் வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருந்தது.
"அவர்கள் இராக்கில் தங்கள் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால் சூழல் மாறியபோது, அவர்கள் அகதிளாக்கப்பட்டனர்," என்கிறார் ஆலன்.

பட மூலாதாரம், Allan Hennessy
"அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. நாங்கள் லண்டனின் மாநகரக் குடியிருப்புகளில் வாழ்ந்தோம். அங்கு அவர்களுக்கு ஒரு பெரிய கலாசார அதிர்ச்சி இருந்தது," என்று தன குடும்பத்தினரின் அனுபவங்களை விவரிக்கிறார்.
சிரியாவில், இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் அமைப்பில் சேர்ந்து, பல பிணைக்கைதிகளின் தலைகளை வெட்டும் காணொளியில் தோன்றிய "ஜிஹாதி ஜான்" என்று அழைக்கப்பட்ட நபர் அதே குடியிருப்பில் வளர்ந்தவர்.
அந்தத் தீவிரவாதியைப் பற்றிப் பேசும்போது ஆலன் உவப்பற்றவராகத் தோன்றினாலும், அந்தத் தொடர்பு, கேம்பிரிட்ஜில் உள்ள தனது சகாக்களின் குழந்தைப் பருவத்துக்கும் அவரின் குழந்தைப் பருவத்துக்கும் உள்ள வேறுபாட்டை கோடிட்டுக் காட்டுகிறது.
"என் வாழ்க்கையைப்பற்றிப் பல்கலைக்கழகத்தில் இருப்பவர்கள் கேட்கும்போது நான் மிகவும் கடினமான ஒரு வாஸ்க்கையை வாழ்வதாக நினைக்கிறார்கள். ஆனால் நான் எனது இராக்கிய வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து என்னை மிகவும் நானுகூலம் படைத்தவனாக எண்ணிக் கொள்வதால் இவற்றுள் இருந்து மீண்டு முன்னோக்கிச் செல்ல முடிகிறது," என்கிறார் ஆலன்.
ஆலன் பிறர் சொல்வதைச் செய்யும் ரகத்தைச் சேர்ந்தவரல்ல.
"எனக்கு பகுதி பார்வைத்திறன் இல்லை என்பதை நினைத்து நான் வாழவில்லை. நான் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதையும், சாரங்களில் ஏறுவதையும் மிகவும் நேசிக்கிறேன், அவற்றை வேண்டுமென்றே நான் செய்யாவிட்டாலும் கூட," என்று கூறும் ஆலன் சமப்பரப்புள்ள திறந்த வெளிகளுக்கு செல்லும்போது பொம்மைக் கார்களை ஓட்ட விரும்புவதாகக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Allan Hennessy
பல குழந்தைகளைப்போல, ஆலன் பள்ளியில் சிறந்த மாணவராக இல்லை.
"எல்லாவற்றிலும் கடை நிலையிலேயே நான் இருந்தேன். பல நாட்கள் பள்ளிக்குப் போக மாட்டேன். பல பதின்ம வயதினர் செய்வதைப்போல நானும் வாகனங்களின் மீது முட்டைகளை வீசுவேன், " என்றர் ஆலன்.
ஆனால் காலப்போக்கில் தன்னால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை அவர் உணர்ந்தார்.
"மேல்நிலைக் கல்வியை முடித்தபின் எனக்கு புத்துணர்ச்சி பிறந்தது. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் என்னைவிட புத்தி கூர்மை உடையவர்கள் இல்லை என்பதை உணர்ந்தேன்," என்று கூறும் அவர் 2012-ஆம் ஆண்டு கேபிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க விண்ணப்பித்தார்.
அங்கு தனது முதல் அனுபவங்களைக் கூறும் அவர், "எல்லோரும், எல்லாமும் வெள்ளை நிறத்தில் இருந்தது. நான் மிகவும் மாறுதலாக உணர்ந்தேன்," என்கிறார்.
அந்த ஆண்டு அப்பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பார்வைக் குறைப்பாடுடைய ஏழு மாணவர்களில் அவரும் ஒருவர். அவர் குடும்பத்தில் முதல் முறையாக பல்கலைக்கழகம் செல்லும் முதல் நபரும் அவரே.
"என் வாழ்க்கை முழுதும் என்னால் செய்ய முடியாது, நான் செய்யவும் கூடாது என்றே கூறப்பட்டேன். என் குறைபாட்டைப் பற்றிய பிறரின் ஒரே மாதிரியான எண்ணங்கள் மாற்ற முடியாததாகவும், அடிபணிய வைப்பதாகவும் இருந்தது. அதிலிருந்து மீண்டு வருவதே என் மிகப்பெரிய போராட்டமாக இருந்தது."

"உங்கள் தெருவில் இருந்து வெளியே வரும்போது நீங்கள் எதிர்மரையாகவும், வெறுப்புடனும் நடத்தப்படுவீர்கள். சாதாரண மக்கள் செய்வதையே நீங்கழும் செய்தாலும் நீங்கள் நிறைய வெறுப்புணர்வைப் பெற வேண்டியிருக்கும்," என்கிறார் அவர்.
மூன்று ஆண்டுகள் ஃபிட்ஸ்வில்லியம் கல்லூரியில் பயின்ற ஆலன், அது ஒரு பெரும் மாறுதலைத் தந்ததாகக் கூறுகிறார்.
"உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த மிகவும் சிறப்பான மனிதர்களை நான் அங்கு சந்தித்தேன். ஆனால் என்னை நோக்கி நிறைய எதிர்மறை சிந்தனைகளும் இருந்தன," என்று கூறும் ஆலன், "நீங்கள் எடை அதிகமுள்ள, மாநிறமான, பார்வைத்திறன் இல்லாத நபராக இருந்து ஒரு சறுக்கு மரத்தில் ஏறினால், அதையே அவர்களும் செய்யும்போதும், எல்லோரும் உங்களை மதிப்பிடத் தொடங்கி விடுவார்கள்." என்கிறார்.
இராக்கிலேயே தங்கியிருந்தால் அவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
"எனக்கு கேம்பிரிட்ஜில் சட்டப் படிப்பில் பட்டம் கிடைத்திருக்காது. எனக்குப் பார்வைத்திறனும் கிடைத்திருக்காது. இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் அமைப்பினரால் பிடித்து வைக்கப் படுவது உள்ளிட்ட கொடூரமான,அதிர்ச்சிகரமான நிகழ்வுகளைச் சந்தித்திருக்கலாம்," என்று சொல்லும் அவர், "ஒரு வேளை நான் உயிருடன் இல்லாமல் கூட போயிருக்கலாம்," என்கிறார்.

பட மூலாதாரம், Allan Hennessy
இந்தக் கோடையில் பட்டம் பெற்றபின்னர், கேம்பிரிட்ஜின் சட்டப் புலத்தில் வழங்கப்படும் பெருமைக்குரிய கல்வி உதவித்தொகையைப் பெற்று மேற்படிப்பைத் தொடரப் போகிறார்.
"கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுவிட்டால், அதுவே உங்கள் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துவிடும்," என்று அவர் தெரிவித்தார்.
"ஆனால், நீங்கள் ஒரு பார்வையற்றவராக, இன்றைய பிரிட்டனில் வாழும் புலம் பெயர்ந்த இஸ்லாமியராக இருந்தால் நீங்கள் செய்ய இன்னும் பல விடயங்கள் உள்ளன. என் பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது," என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஆலன்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












