சொகுசு கப்பல் பயணத்தில் தன்னைப் பார்த்து சிரித்த மனைவியைக் கொன்ற கணவர்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சொகுசு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ``தன்னைப் பார்த்து தொடர்ந்து சிரித்ததால்`` மனைவியை அவர் கொலை செய்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
39 வயதான தனது மனைவியைக் கொலை செய்ததாக கென்னத் மன்ஸானெரெஸ் மீது குற்றம்சாட்டப்படும் நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் அப்பெண்ணின் சடலம் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
கென்னத் கையிலும், சட்டையிலும் ரத்தக்கறை இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்த பிறகு, அவர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கென்னத்தின் வழக்கறிஞர், இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.
இறந்துபோன பெண், அமெரிக்காவின் உட்டாவை சேர்ந்த கிறிஸ்டி என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தனது மனைவியின் உடலை கென்னத் பால்கனியை நோக்கி இழுத்துச் சென்றதை, பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்கு முன்பு இத்தம்பதி தங்கியிருந்த அறைக்குச் சென்ற ஒருவர் பார்த்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர், அப்பெண்ணின் கால்களை பிடித்து அவரை அறைக்குள் இழுத்துள்ளார்.
என்ன நடந்தது என கென்னத்திடம் அவர் கேட்ட போது,``அவள் என்னைப் பார்த்து தொடர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்`` என கென்னத் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அமைப்பின் அதிகாரிகள் இவர்கள் தங்கியிருந்த அறையைச் சோதனை செய்த போது, ``எனது வாழ்க்கை முடிந்துவிட்டது`` என கென்னத் தெரிவித்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.
எமரால்டு ப்ரின்சஸ் சொகுசு கப்பலில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு வாரப் பயணமாக கடந்த ஞாயிறன்று, 3 ஆயிரத்து 400 பயணிகளுடன் சியாட்டில் இருந்து இக்கப்பல் கிளம்பியது.
அமெரிக்க கடற்பரப்பில் இச்சம்பவம் நிகழ்ந்ததால், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ இந்த வழக்கினை விசாரித்து வருகிறது. இக் கணவன், மனைவியின் உறவினர்களும் அதே கப்பலில் பயணம் செய்ததாக எஃப்பிஐ செய்தி தொடர்பாளர் கூறுகிறார். ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கென்னத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஜூனோவில் இருந்து காணொளி மூலம் அன்காரெரில் உள்ள நீதிமன்றத்தில் முதன்முறையாக ஆஜரானார். வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறுகிறது.
பிபிசியின் பிற செய்திகள்:
- காதல் களமாக மாறிய இராக் போர்க்களம்
- வெளிநாடுவாழ் இந்தியர்களை திருமணம் செய்து கொள்வோருக்கு சட்டப்பாதுகாப்பு இல்லையா?
- உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை முந்திய அமேசான் நிறுவனர்
- 'ஹீரோ' என்ற வாசகத்துடன்கூடிய டி-சர்ட் அணிந்தவர்கள் துருக்கியில் கைது
- ரஷ்யா, வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு
- ''இலங்கையில் யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












