வளர்ப்பு நாய்க்கு அதிபரின் பெயரை வைத்தவரை விடுதலை செய்த நீதிமன்றம்

பட மூலாதாரம், Reuters
தனது வளர்ப்பு நாய்க்கு நைஜீரிய அதிபர் முகம்மது புஹாரியின் பெயரை வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட, 41 வயது நைஜீரிய நபர் மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தால் கைவிடப்பட்டுள்ளது. .
ஜோ போர்டேமோஸ் சினக்வே என அழைக்கப்படும் சந்தை வியாபாரியான ஜோவாசிம் இரோகோ என்பவர் அமைதியை குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி 2016-ஆம் ஆண்டு நைஜீரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஓகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என அந்த வழக்கை விசாரித்த தென்மேற்கு ஓகன் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி கண்டறிந்துள்ளார்.
இந்த கைதானது நாடு முழுவதும் கொந்தளிப்பை தூண்டியது. அரசியலமைப்புச் சட்டம் மூலம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தின் கழுத்தை காவல்துறை நெறித்து வருவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டினர்.
அதே நேரத்தில், அதிபரின் செய்தித் தொடர்பாளரான கர்பா ஷெகு கூறும்போது,`இந்த கதையை கேட்டு அதிபர் பலமாக சிரித்திருக்க வேண்டும். மேலும் நாயுடன் அவரின் பெயரை ஒப்பிட்டுள்ள சம்பவமானது, அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது.` என்றார்.
வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் நைஜீரியாவின் வான்கார்டு செய்தித்தாளிடம் பேசிய இரோகோ, தன்னை நிரூபித்துவிட்டதாகவும், தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எதிர்தரப்பினர் போதிய சாட்சிகளை தொடர்ந்து அளிக்காமல் இருந்தனர் எனவும் வழக்கு தொடுத்தவரே நீதிமன்றத்திற்கு வரவில்லை எனவும் இரோகோவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இபோகோவுக்கு எதிராக கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடர்ந்தவர், அவரின் அண்டை வீட்டுக்காரர் ஆவார்.
`என் கதாநாயகன்`
அதிபர் புஹாரியின் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதாக கூறப்படும் பகுதியில், தனது நாயின் பக்கவாட்டு பகுதியில் `புஹாரி` என எழுதி அதனுடன் இரோகோ நடந்து சென்றார் என காவல்துறையினர் அப்போது தெரிவித்தனர்.
`நாய்க்கு அதிபரின் பெயரை வைப்பது, அவரை பாராட்டுவது போன்றது என இரோகோ நினைத்தாலும், அதனை தவறாக புரிந்து கொள்ளும் மக்கள், அவர் மீது கோபம் கொள்ளக் கூடும் என வருத்தமடைந்தோம்` என அதிகாரிகள் தெரிவித்தனர். தனது ஆதர்ச நாயகர்களின் பெயர்களை தனது நாய்களுக்கு வைப்பதாகவும், தன்னுடைய மற்ற நாய்களுக்கு நெல்சன் மண்டேலா மற்றும் ஒபாமாவின் பெயர்களை வைத்திருப்பதாகவும் இரோகோ கூறுகிறார்.
`என்னுடைய அன்பான வளர்ப்பு நாய்க்கு, எனது கதாநாயகான புஹாரியின் பெயரை வைத்தேன்...அவர் நாட்டின் ராணுவத் தளபதியாக பணியாற்றிய காலம் முதலே அவரை ரசிக்கத் துவங்கிவிட்டேன்.` என புஹாரி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் ஊடகங்களுக்கு பின்னர் பேட்டியளித்த அவர், தனக்கு பல கொலை மிரட்டல்கள் வந்ததாக தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












