You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹட்ஜா வேட்டைக்காரரின் பெர்ரி மற்றும் முள்ளம்பன்றி வேட்டை
உலகில் எஞ்சியிருக்கும் பழங்குடியின வேட்டைக்கார இனங்களில் ஒன்றான ஹட்ஜா, தான்சானியாவின் வடக்குப் பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள், 40 ஆயிரம் ஆண்டுகளாக இந்த இனத்தை சேர்ந்த மக்கள், பெர்ரிப் பழங்கள், கிழங்குவகைகள் மற்றும் மாமிச உணவுகளை உண்பவர்களாக அறியப்படுகிறார்கள்.
பிபிசியின் டான் சால்டினோ, அவர்களின் வாழ்க்கைமுறை, உணவுக்கான தேடுதல், வேட்டையாடுதல், போன்றவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ளச் சென்றார். பிற மக்கள் கற்றுக் கொள்வதற்கான விசயங்கள், அவர்களது உணவு வழக்கத்தில் இருக்கிறதா என்பதை அவர் ஆராய்கிறார்.
எச்சரிக்கை: இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள விலங்குகளின் புகைப்படங்கள் சில வாசகர்களுக்கு கவலையளிக்கலாம்
பூமியில் படுத்துக்கொண்டு, வயிற்றை எக்கி, தலையை நீட்டி இருண்ட, குறுகிய குழிக்குள் தலையை விடுகிறான்.
விலங்குகள்...
ஆனால் இதற்குள் சரிந்து யாராவது உள்ளே நுழைந்து, விலங்கை வெளியே இழுக்கமுடியுமா? என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் செய்கிறார் 'ஜிக்வாட்ஜீ' சரி, அவர் குறி வைக்கும் விலங்கு? முள்ளம்பன்றி!
வில், அம்பு, தேன், கோடாரி ஆகியவற்றை தனது நண்பரிடம் ஒப்படைத்த 'ஜிக்வாட்ஜீ', சிறிய கூர்மையான ஒரு குச்சியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு குறுகிய பொந்துக்குள் ஊர்ந்து செல்கிறார், பார்வையில் இருந்து மறைகிறார்.
குழுவில் மிக இளம் வயதினர் என்பதால் அவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அங்கு இருந்தவர்களிலேயே பயம் குறைந்தவர் அவரே என்பதை தொடர்ந்து கவனித்து தெரிந்துக் கொண்டேன். அச்சம் எதற்கா? பாம்பென்றால் படையும் நடங்குமே? கோப்ரா மற்றும் மாம்பா பாம்புகள், ஊர்வன, பறப்பன மற்றும் உண்ணிகள், மற்றும் 35 செ.மீ (14 அங்குலம்) நீள முட்களைக் கொண்ட முள்ளம்பன்றிகள் என இவரது வேட்டையின் இலக்குகள் பலவகைப்படலாம்.
இதுவரை எனது ஹட்ஜா உணவு சைவமாக இருந்த்து. இந்த மக்கள் உண்பதையே நானும் உண்டேன். புதர்களில் இருந்து பறிக்கப்பட்ட பழங்களும், நிலத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட கிழங்குகளுமே எங்களது உணவு. ஆங்காங்கே தீயை மூட்டி, கிடைக்கும் பொருட்களை, சுட்டு சாப்பிடுவதே அவர்களின் பழக்கம்.
பெண்களால் பறிக்கப்படும் பழங்களும், கிழங்குகளுமே அவர்களின் உணவின் முக்கிய அம்சம்
தடிமனான கொட்டைகளைக் கொண்ட பாபாப் பழங்களே பெருமளவில் கிடைப்பவை. வெண்மையான சுண்ணாம்பில் தூசி கலந்தது போன்ற நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தில், நார்ச்சத்தும் விட்டமின் 'சி' சத்தும் அபரிதமாக இருக்கிறது.
"ஹட்ஜா மக்கள் எப்போதும் பசியுடன் இருப்பார்கள், ஆனால் பட்டினியுடன் இல்லை" என்று தசாப்தங்களுக்கு முன்னரே மானுடவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களை சுற்றியிருக்கும் ஏராளமான பொருட்கள், அவர்களின் உண்பதற்கான உற்சாகத்தை ஊக்குவிக்கிறது. மேலும், அவற்றை கண்டறிவதற்கான முயற்சியையும் கண்காணிப்பையும் அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அருகிலுள்ள உணவுப் பொருட்களை என்னால் அடையாளம் காணமுடியாவிட்டாலும், அந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நான்கு வயது குழந்தைகூட உணவை கண்டறியும் திறனை பெற்றுள்ளது.
உணவை கண்டறிந்ததும் வெகுதொலைவில் இருந்து அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்கமுடிகிறது. 'ஜிக்வாட்ஜீ' 2 மீட்டர் (6 அடி) ஆழத்தில், நிலத்தடியில், நீளமான, வெப்பமான பகுதியில் பாதுகாப்பாக மறைந்திருந்த ஒரு முள்ளம்பன்றியை பார்த்துவிட்டார். அதன் இருப்பை கண்டறிந்த உடனே, அது தப்பித்துச் செல்லக்கூடிய வழித்தடங்களை மூடிவிட தனது சக வேட்டைக்காரர்களுக்கு அறிவுறுத்தும் சமிக்ஞை அது.
40 நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்த அவர் மீது மண்ணும், தூசியும் நிறைந்திருந்தது. முள்ளம்பன்றி இருந்த சரியான இடத்தை மேலும் தோண்டத் தயாராகிவிட்டார்.
உணவுப் பொருட்களை பயிரிடவோ, உருவாக்கவோ, விவசாயம் தொடர்பான எந்தவித பயிற்சியும் பெறாதது இந்தக் குழு. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 1000 பேர் இருந்தாலும், வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களின் எண்ணிக்கை 200-300 தான் இருக்கும். ஹட்ஜா இனத்தினர், விவசாயிகளை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர்.
ஒருவர் என்னிடம் கேட்டார்: "நாள் முழுவதும் வயலில் நின்று, வாரக்கணக்கில் மாதக்கணக்கில் இவர்கள் ஏன் உணவுக்காக காத்திருக்க வேண்டும்? ஒரு புதரில் இருந்து பெர்ரிப் பழத்தை பறித்துச் சாப்பிடலாம், அல்லது மரத்தில் ஏறி தேனை குடிக்கலாம். அல்லது ஒரு சில மணி நேரம் பாடுபட்டால், குழிக்குள் மறைந்திருக்கும் முள்ளம்பன்றியை பிடிக்கலாம், ஒரு கூட்டத்திற்கே உணவளிக்கலாமே? பாவம் இவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை!"
உணவை கண்டுபிடிப்பதற்கான முன்னோர்களின் வழக்கங்களையே இவர்களும் தொடர்கின்றனர். மனிதர்கள் உருவானபோது இருந்த உணவு பழக்கத்தின், அதாவது நமது ஆரம்பகால செரிமான அமைப்பை கொண்டிருப்பவர்கள் இவர்களே.
நம் உடலில் உள்ள நுண்ணுயிரிகளானது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் ஒரு முக்கியமான அம்சமாகும். பன்முகத்தன்மை வளமையைக் கொண்ட நமது நுண்ணுயிர்கள், நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. அதுவேதான் ஹட்ஜா மக்களுக்கும் நடக்கிறது. அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களின் காரணமாக பூமியில் மிகவும் மாறுபட்ட மனித குடல் நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்தார் லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் டிம் ஸ்பெக்டர். ஹட்ஜாக்களைப் போல சாப்பிட்டால், தனது சொந்த நுண்ணுயிர் தன்மை இன்னும் அதிகமாகுமா என்பதை அறிந்து கொள்ள அவர் ஆர்வமாக இருந்தார், எனவே, அவர் தனது சொந்த ஹட்ஜா உணவை எடுத்துக் கொண்ட ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு பிறகும் தனது மலக்கழிவுகளின் மாதிரியை எடுத்துக்கொண்டார். மாதிரியை ஆராய்ந்து, பல்வேறு பாக்டீரியாக்களின் வெளிப்பாட்டில் மாறுபாடு இருக்கிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்த்தார்.
முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக இருந்தன. மூன்று நாட்களுக்குப் பிறகு, ஏற்கனவே இருந்த ஆரோக்கியமான நுண்ணுயிர் எதிர்ப்பு பாக்டீரியாவின் பன்முகத்தன்மை 20% அதிகரித்தது. இதைத்தவிர, ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பாக்டீரியாவின் அரிய வகைகளையும் கண்டறிய முடிந்தது.
நமக்கு உகந்த உணவுகள் எது என்பதை கண்டறியும் ஸ்பெக்டரின் ஆராய்ச்சி, ஒரு திட்டவட்டமான முடிவை எட்ட பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் ஹட்ஜா இனத்தினருக்கான விஷயங்கள் வேகமாக மாறி வரும் சூழலில், இதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளது.
இவர்களின் நிலப் பரப்பிற்குள் விவசாயிகளின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இவர்களின் இடத்திற்குள் நுழையும் விவசாயிகள், கடந்த தசாப்தத்தில் மட்டும், அண்டுதோறும் 160 ஹெக்டேர் (395 ஏக்கர்) என்ற அளவில் வனப்பகுதியை அழித்துவிட்டனர்.
கால்நடை மேய்ப்பவர்களும், அவர்களின் பசித்த கால்நடைகளும் ஏராளமான எண்ணிக்கையில் வனத்திற்குள் வந்து குவிவதால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹட்ஜா இன மக்களுக்கு உணவளித்து வந்த வெவ்வேறு விதமான 30 காட்டு பாலூட்டி இன வன விலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனினும் வேறு வகையான ஊடுருவல் பற்றி எனக்கு மிக பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. முள்ளம்பன்றி வேட்டையில் இருந்து 30 நிமிட தொலைவில், குறுக்காக சென்றால் அங்கு ஒரு மண் குடிசை இருந்தது. அங்கிருந்த அலமாரிகளில், குளிர் பானங்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் நிரம்பியிருந்தது. அந்தப் பகுதியில் இருந்து ஒன்பது மணி நேர பயணத்திற்கு பிறகே, இதுபோன்ற பிரபல பிராண்டுகளின் உணவுப்பொருட்களை நான் கண்டறிய முடிந்தது.
இருப்பினும் ஹட்ஜா இனத்தின் திறமையை கொண்டிருக்கும் 'ஜிக்வாட்ஜீ' துரிதமாக, திறமையாக முள்ளம்பன்றியை வேட்டையாடினார். அந்த விலங்கை நேருக்கு நேராக பார்த்து, அதை ஒரு குச்சியால் தட்டிய அவர், "வெளியே வா முள்ளம்பன்றியே, வா ... இங்கே வந்து பாருங்கள்!" என்றார். ஆனால், வெளியே வந்தது, ஒன்றல்ல, இரண்டு.
கருப்பு மற்றும் வெள்ளை முட்களை உடலில் கொண்ட அவை தலா 30 கிலோவுக்கு குறையாத எடை கொண்டவை. நீங்கள் கற்பனை செய்வதை விட பெரிய உருவத்தைக் கொண்டவை. அவை எழுப்பிய ஓலம் அச்சமூட்டுவதாக, எச்சரிக்கை செய்வதாக இருக்கிறது. 'ஜிக்வாட்ஜீ' அவற்றின் தலையில் சில பலமான அடிகள் போட்டதும், அவற்றின் ஓலம் காற்றில் கலந்தது, எல்லாம் முடிந்துவிட்ட்து.
ஹட்ஜா வேட்டைக்காரர்கள் கிடைக்கும் அனைத்தையும் பகிர்ந்து கொள்கின்றர்னர். சமத்துவ சமுதாயம் கொண்ட அவர்களிடையே தலைமை கட்டமைப்பு கிடையாது. கிடைத்த மாமிசத்தை சமமாக பிரித்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி அவர்களிடையே உள்ளது. வேட்டையாடப்பட்ட விலங்கின் உட்பகுதி, இதயம், கல்லீரல் மற்றும் ஈரல்கள் அங்கேயே உடனே சமைக்கப்படும். மீதமுள்ள உடல் பாகங்கள் முகாம்களுக்கு எடுத்துச் சென்று விநியோகிக்கப்படும்.
நான் அங்கு நடப்பவற்றை பதற்றத்துடன் கூர்ந்து கவனித்தேன். முள்ளம்பன்றியின் ஈரலின் ஒரு சிறிய பகுதியை சுவைத்தபோது, அதன் பிரத்யேக சுவையை உணர்ந்தேன். 'ஒரு வேட்டை மற்றும் ஓர் உணவு அனுபவம்', என்னை நமது பண்டைய நினைவலைகளோடு பிணைத்தது.
ஹஸ்டா ஆணின் ஒரே உடைமை வில். விலங்கின் தசைநாண்களால் சுற்றப்பட்டு, அதிலிருந்து வெளிவரும் கொழுப்பு, வில்லை சிறப்பாக செயல்பட வைக்கிறது.
புகைப்படங்கள் அனைத்தும், லண்டன் கிங்க்ஸ் கல்லூரியின் பேராசிரியர் ஜெஃப் லீச்சுடையது.
பிற செய்திகள்
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''
- மாய சடங்குக்குப் பிறகு சடலத்தைத் தந்த முதலை
- ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி
- இறந்துபோன மகனின் இதயம் நேரில் வாழ்த்த திருமணம் செய்துகொண்ட தாய்
- மகளிர் உலக கோப்பை: இந்தியா கோட்டைவிட்டது ஏன்? 5 முக்கிய காரணங்கள்
- இலங்கை: கடலில் மூழ்கிய யானைகள் கடற்படையினரால் மீட்பு
- டயானாவுடனான கடைசி உரையாடலை நினைத்து வருந்தும் வில்லியம், ஹாரி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்