You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாய சடங்குக்குப் பிறகு சடலத்தைத் தந்த முதலை
முதலை வசிய வேலை செய்யும் நபர் ஒருவர் செய்த மாயச் சடங்குக்குப் பிறகு, தான் இழுத்துச் சென்று கொன்ற ஒருவரின் சடலத்தை மீண்டும் நிலப்பகுதிக்கு கொண்டுவந்த ஒரு முதலையின் விடியோ காட்சி இந்தோனேஷியாவில் வைரலாக பரவி வருகிறது.
41 வயது சையரிஃபுதின், கிழக்கு ஜகார்தாவில் இருந்து 1,500 கி.மீ. தூரத்தில் உள்ள கிழக்கு களிமந்தானில் உள்ள பெராவு பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றதாகவும் அப்போது அவரை இரண்டு மீட்டர் நீளமுள்ள ஒரு முதலை, ஆற்றில் நீண்ட தூரம் இழுத்துச் சென்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறின.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சையரிஃபுதினின் நண்பர், உள்ளூர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
ஆனால், சையரிஃபுதினை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மறுதினம், உள்ளூர் கிராமவாசிகள் முதலையை வசியப்படுத்தும் வேலை செய்யும் நபரின் உதவியை நாடினர்.
இதையடுத்து ஆற்றுக்கரைக்கு அந்த நபர் வந்து ஒரு சடங்கை செய்ததும், தனது வாயில் கவ்வியிருந்த சடலத்துடன் வந்த முதலை, அதை கரை அருகே விட்டுச் சென்றது.
ஆனால் அந்த முதலைதான், சையாரிபுதீனைக் கொன்ற முதலையா என்பது தெரியவில்லை.
கரையில் இந்த காட்சியை பார்த்த கூட்டம், வினோதமான இந்நிகழ்வை தங்கள் செல்லிடப்பேசியில் பதிவு செய்தது.
இதையடுத்து அந்த காட்சியின் பல வைரல் விடியோக்கள், இச்சம்பவத்தை இந்தோனேஷிய சமூக ஊடகத்தின் பேசுபொருளாக்கியுள்ளது.
சோகத்துக்கு மத்தியிலும், சடலத்தை திருப்பித் தந்த முதலையை பெரும்பாலான சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் பாராட்டினர்.
"மனிதரை ஒரு முதலை விழுங்க நினைத்திருந்தால், அவரது உடலின் ஒரு தசைப்பகுதியையும் அது விட்டு வைக்காது. சில விலங்குகளுக்கு நல்ல எண்ணம் உள்ளது" என்கிறார் ஒருவர்.
வேறு சிலர், சோக நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரை குறை கூறினர்.
"விலங்குகள் வாழும் இடங்களுக்கு மனிதர்கள் செல்லக் கூடாது" என்று தமது பெயரை "ஏ-இசட் கலர்" என வைத்துள்ள ஒரு பயன்பாட்டாளர் கூறுகிறார்.
"மழை வரவைக்கும் மனிதன்", " ஆவியுடன் பேசுபவர்கள்", "முதலையை வசியம் செய்யும் நபர்" போன்ற வேலைகள் எல்லாம் பொதுவாக இருக்கும் இந்தோனேசியாவில், விளக்க முடியாத இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட உணர்வுகளுடன் ஏராளமான கருத்துகள் பதிவாகின.
சடலத்தை திருப்பி அளித்த முதலையை "பழங்காலத்தில் இருந்து வந்த நட்பின் அவதாரம்" என்று ஒருவர் அழைக்கிறார்.
அமெலியா புட்ரி டாஹெர் என்ற பயன்பாட்டாளர், பொதுவாக விலங்குகளை வேட்டையாடும் தன்மை கொண்ட உயிரினங்கள், மனிதர்களின் தசையை விட்டு வைக்காது. இந்த முதலை சாதாரண ரக முதலையாக இருக்க முடியாது. இது ஏதோ மறைபொருளாக உள்ளது என்றார்.
பிற செய்திகள் :
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''
- மலிவு விலை ஜியோ மொபைல்: அறிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்!
- `அவரது செயலை சகிக்க முடியாமல் தயக்கத்தோடு அம்மாவிடம் சொன்னேன்'
- முஸ்லிம் பெண்களுக்கு ஹலால் செக்ஸ் வழிகாட்டி
- சினிமா விமர்சனம்: விக்ரம் வேதா
- ஐ.எஸ். அமைப்பு ஹெச்.ஐ.வி. வைரஸை பரப்பி வருவதாக பிரசாரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்