ஐ.எஸ். அமைப்பு ஹெச்.ஐ.வி. வைரஸை பரப்பி வருவதாக பிரசாரம் - போலீசில் புகார்

இலங்கையின் சில பகுதிகளில் ரத்த பரிசோதனையாளர்கள் என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பினர் ஊசி மூலம் ஹெச்.ஐ.வி. வைரஸை பரப்பி வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான போலி தகவல் தொடர்பாக காவல்துறையினரிடம்புகார் அளித்துள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் இயக்குநர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டார பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் காரணமாக யானைக்கால் நோய் தடுப்புக்காக ரத்த பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரத்த பரிசோதனை மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் சிலர், ஊசி மூலம் ஹெச்.ஐ.வி. வைரஸை பொதுமக்களின் உடலில் செலுத்தி வருகின்றனர் என்று சமீபத்தில் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வெளியான தகவல் ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வந்ததுடன், அந்த தகவல் மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஐ.எஸ். அமைப்பினர் திட்டமிட்டு இந்த செயலை மேற்கொண்டு வருகின்றனர் என்று அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் கேட்டபோது, அதன் இயக்குநர் நாயகம் ஜயசுந்தர பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த போலித் தகவலை வெளியிட்டவர் இதுவரை கண்டுப்பிடிக்கப்படாத நிலையில், அந்த தகவல் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ரகசிய போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதாரம் தொடர்புடைய செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்