You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் தற்கொலை குண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
குறைந்தது 42 பேர் காயமடைந்துள்ளனர்; பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சங்கள் எழுந்துள்ளன
நகரில் மேற்கு பகுதியில் பெரும்பாலும் ஷியா முஸ்லிம் மக்கள் வசிக்கும் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில், சுரங்க அமைச்சகத்தின் அரசு ஊழியர்கள் சென்ற பேருந்து தாக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர். தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பால் காபூலில் சமீபகாலமாக பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சம்பவ இடத்தை போலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். அரசாங்க துணை தலைமை நிர்வாகி முகமத் மொஹகெக்கின் வீட்டிற்கு அருகில் இந்த வெடிகுண்டுச் சம்பவம் நடைபெற்றது.
"இந்த கார் குண்டு தாக்குதல் மொஹகெக்கின் வீட்டை குறி வைத்ததாக நாங்கள் கருதுகிறோம். ஆனால் அது பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம்" என்று முகமத் மொஹகெக்கின் செய்தி தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
ஆப்கனில் இந்த அரை ஆண்டில் இதுவரை 1,662 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 20 சதவீதம் பேர் தலைநகரைச் சேர்ந்தவர்கள் என்றும் ஐ.நா., தெரிவித்துள்ளது.
மே மாதம் 31-ஆம் தேதியன்று காபூலின் மத்தியப் பகுதியில் நடைபெற்ற குண்டு தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தாலிபன்களை 2001ஆம் ஆண்டு பதவியிலிருந்து இறக்கிய சமயத்திலிருந்து நடைபெற்ற பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
கடந்த மாதம் தென் மாகாணமான ஹெல்மண்டில் உள்ள வங்கிக்கு அருகில் நடைபெற்ற குண்டு தாக்குதலில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 58 பேர் காயமடைந்தனர்.
ஆப்கன் ராணுவம் மற்றும் போலிஸாருக்கு உதவும் அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆராய்ந்து வருகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்