அறுவை சிகிச்சை மூலம் கையில் பொருத்தப்பட்ட கால் கட்டை விரல்..!

காளை தாக்கி கை கட்டை விரல் துண்டான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பு தொழிலாளி ஒருவருக்கு அவரின் கால் கட்டை விரல் பொருத்தப்பட்டுள்ளது.

20 வயதாகும் ஸாக் மிட்செல் என்ற அந்த 20 வயது இளைஞர், கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆள் அரவமற்ற பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது காயமடைந்தார்.

`அந்த காளை என்னுடைய கையை வேலிக்குள் எட்டி உதைத்தது.` என அந்த சம்பவம் குறித்து மிட்செல் தெரிவிக்கிறார்.

எட்டு மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் அவரின் கால் கட்டை விரல் முதலில் பிரித்தெடுக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு அறுவை சிகிச்சைகள் மூலம் துண்டிக்கப்பட்ட கை கட்டை விரல் பகுதியில், கால் கட்டை விரலானது வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

`அவர்கள் எனது கட்டை விரலை பனிக்கட்டிகளுடன் கூடிய குளிர்ச்சியான பெட்டி ஒன்றுக்குள் வைத்தனர்.`என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

விபத்தில் சிக்கியதும் பெர்த் நகர தலைமை மருத்துவனைக்கு மிட்செல் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் துண்டிக்கப்பட்ட அவரின் கை கட்டை விரலை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

கடினமான தேர்வு

ஆரம்பத்தில் தயக்கம் இருந்த போதிலும், சிட்னி கண் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த விரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மிட்செல் ஒப்புக் கொண்டார்.

`இது குறித்து அவருக்கு ஆச்சரியம் ஏதும் இருக்கவில்லை. இதனை ஏற்றுக் கொள்ள அவருக்கு சில வாரங்கள் ஆகும்.` என முன்னணி சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சீன் நிக்லின் கூறினார்.

`இது ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனைதான். எந்த நோயாளியும் தனது உடலின் வேறு ஒரு பாகத்தை காயப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.` என அவர் தெரிவித்தார்.

இன்னும் 12 மாதங்களுக்கு மிட்செலுக்கு மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறது. ஆனால் மீண்டும் விவசாய பணிகளுக்கு திரும்பிவிட அவர் திட்டமிட்டுள்ளார்.

`பகுதியளவு கால் கட்டை விரலை இடம் மாற்றுவது சாதாரணமானது. ஆனால் மிட்செலுக்கு நடந்து போல, முழு கால் கட்டை விரலையும் இடம் மாற்றுவது அரிதானது.` என சிட்னி கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்